Pages

Thursday, December 28, 2023

கசப்பு மிட்டாய் 4 - உன் பலஹீனங்களை எதிர்த்துப் போராடு.


 உன் பலஹீனங்களை எதிர்த்துப்  போராடு.

சகோதரா, உலகத்தின் முன் ஒரு மனிதனாக நிற்கக் கற்றுக்கொள். மண்புழுவை போல் மற்றவர் காலடியில்  விழலாமா? முகத்தில் ஒளி வீச வேண்டும். கண்களில் பலம் தெரிய வேண்டும்.  பேச்சில் துணிவும், உறுதியும் இருக்க வேண்டும். குரல் நடுங்கக்கூடாது, பிசிறக்கூடாது. வாழ்க்கை ஒன்றே, அதை புலம்பிக் கழிக்காதே. எங்காவது குற்றம், அழுத்தம் தெரிந்தால் எதிர்த்து விடு. சிறிதும் பயப்படாதே. ஞாபகம் இருக்குமா?

கசப்பு மிட்டாய் (நீம் லட்டு) என்ற ஹிந்தி புத்தகத்திலிருந்து 

~ஆச்சார்ய பிரசாந்த் அவர்கள்.


Friday, December 22, 2023

ரோர்க்கும் டாமினிக்கும் - The Fountain Head.


 1945 ல் வெளிவந்த அயன் ராண்ட் எழுதிய The Fountain Head "பவுன்டென் ஹெட்" என்ற ஆங்கில நாவல் மிகவும் பிரபலமானது. அதில் கதாநாயகனாக வருபவன் ஹாவார்டு ரோர்க் (Howard Roark). அவன் பழமையை எதிர்த்து போராடக்கூடிய, சமூகத்துக்கு அடி பணியாத துணிச்சலான இளம் ஆர்க்கிடெக்ட். அவனுடைய காதலி, டாமினிக் Dominique. இந்த நாவல் தனி மனித சுதந்திரம், சமுதாயத்தின் நோக்கத்தை விட உயர்ந்தது என்று வலியுறுத்துகிறது. ஆச்சார்ய பிரசாந்த் அவர்களுக்கும் இந்தப் புத்தகம் சிறுவயதில் மிகவும் இன்ஸபிரேஷன் ஆக இருந்திருக்கிறது. அதில் வரும் ஒரு சம்பாஷணை பற்றி நேற்று வகுப்பில் பகிர்ந்து கொண்டார். அது உண்மையிலேயே மனதை தைப்பதாக இருந்தது.

ரோர்க்கும் டாமினிக்கும் நம் ஊர் காதலர்கள் போல் ஒன்றாக சேர்ந்திருக்கவில்லை. அவரவர் திசைகளில் அவரவர்பயணத்தில் இருந்தார்கள். என்றாவது ஒருநாள் சந்திப்பார்கள். ரோர்க் தன்னுடைய பணியில் எப்போதும் சுயத்தை விட்டுக்கொடுப்பதில்லை அதனால், சமூகத்தின் அடக்கு முறைகளுக்கும், அவதூறுகளுக்கு ஆளாக நேர்ந்தது. அவன் வாழ்வு கடுமையானதாகவே இருந்தது. ஒரு நாள் ரோர்க்கும் டாமினிக்கும் சந்திக்கிறார்கள். டாமினிக் கேட்கிறாள் - "நாம் எப்போதும் ஒன்றாக சேர்ந்தே இருக்க முடியாதா?" என்று. அதற்கு ரோர்க் சொன்ன பதில் அற்புதம்.
ஒருதடவை ரோர்க்கின் மீது அபாண்ட பழி சுமத்தி கோர்டுக்கு இழுத்து விட்டார்கள். அங்கே அவனை வக்கீல்கள் மிக மோசமான கேள்விகள் கேட்டு, அவமானப்படுத்துவார்கள். டாமினிக் பார்வையாளர்கள் இடத்தில அமர்ந்து பார்த்துக்கொண்டிருப்பாள் . இந்த நிகழ்ச்சியை ரோர்க் நினைவு கூர்ந்து,
"Not till you remain hurt in the court room"
"கோர்ட்டில் நீ அடிபடுகிற வரை அது முடியாது." என்கிறான்.
ரோர்க்கை வக்கீல்கள் தகாத கேள்விகள் கேட்டு அவமானப் படுத்திய போது டாமினிக்கின் கண்களில் அடி பட்ட வருத்தம் தெரிந்தது. அவள் மனதில் ஏற்பட்ட வலியை கண்கள் காட்டிக் கொடுத்து விட்டன. அதை ரோர்க்கும் கவனித்து விட்டான்.
அடிபடுவது என்றால் சமூகத்திற்கு இன்னும் அடிமையாக இருக்கிறோம் என்று பொருள்.
மற்றவர்கள் சொல் நம் மனதை புண் படுத்த முடிந்தால், நாம் இன்னும் சுதந்திரமாக இல்லை என்று பொருள்.
சுலபமாக மனம் புண் படக்கூடியவர்கள் உயர்ந்த செயல்கள் நடைபெறுமிடத்தில் இருந்தால், அவர்களால் செயல்கள் பாதிக்கப்படும். அவர்கள் கீழானவர்களுடன் "புண் படுதல்" hurt மூலம் சம்பந்தம் ஏற்படுத்துவார்கள். அவர்களால் தெளிவாக, சுயமாக சிந்திக்க முடியாது. மனதை சிக்கலாக்கிக் கொள்வார்கள். மேலும், பிரச்சினைகளை பெரிதாக்குவார்கள். இப்படிப்பட்ட மனம் அந்த உயர்ந்த செயலுக்கே பாதிப்பை உண்டாகும்.
ரோர்க் டாமினிக்கின் கண்களில் அடிபட்ட வலியை பார்த்தான். அவனோ மனதில் ஆடாமல், அசையாமல் திடமாக நின்று கொண்டிருக்கிறான். அவனை யாருடைய வார்த்தைகளும் தொடவேயில்லை. டாமினிக்கின் மனம் ரோர்க்குக்காக அழுதது. இந்த அழுகை, இந்த வலி அன்பின் பிரதிபலிப்பு இல்லை, பலஹீனத்தின் பிரதிபலிப்பு. அவளுக்குள் உள்ள காதலியின் வருத்தம். அவளால் தன் காதலனைப் பற்றி தரக்குறைவாக பேசுவதை சகிக்க முடியவில்லை. இது மனதின் பலஹீனம். ரோர்க் மனஉறுதி படைத்தவன். அதனால் தான், நீ உன் பலகீனத்தை வைத்துக்கொண்டிருக்கும் வரை நாம் ஒன்றாக இருக்க முடியாது என்கிறான்.
என்னை காயப் படுத்திவிட்டார்கள் என்று கண் கலங்குவதை விட்டுவிட்டு, நான் காயப் பட்டது என் பலஹீனத்தால் தான் என்று புரிந்து கொள்ள வேண்டும். காயப் பட்டுவிட்டால் பழி வாங்காமல் இருக்க முடியாது. மன்னிப்பு என்று சொல்வதெல்லாம் நம்மை நாமே சமாதானப் படுத்திக்கொள்ள செய்யும் முயற்சி. அடி பட்ட அந்த வினாடியே நாம் அவர்கள் நிலைக்கு இறங்கி விட்டோம். தோற்று விட்டோம். விழிப்புணர்வு இல்லாமல் தானாகவே அடி பட்டது, அதே போல் விழிப்புணர்வு இல்லாமல் தானாகவே பழி வாங்குதலும் நடக்கும். நம் வாழ்வே அடி படுதல் , பழி வாங்குதல் என்ற இரண்டின் தொடர் நிகழ்வு தான். நாம் பெரும்பாலான செயல்கள் பழிவாங்கும் அடிப்படையில் தான் செய்கிறோம். நாங்கள் ஏழையாய் இருந்த போது யாரும் மதிக்கவில்லை என்ற வலி, பணத்தை சம்பாதித்து அதை காலில் மிதிக்க வேண்டும் என்ற பழி வாங்கும் உணர்ச்சியை தூண்டியது. அக்காவுக்கு வசதியான வெளிநாட்டு கணவர் என்ற வலி, தங்கைக்கு தானும் அதைப் போல ஒரு கணவரை அடைய வேண்டும் என்ற உணர்ச்சியை தூண்டியது. அது இயல்பான உணர்வு அல்ல. பழி வாங்கும் உணர்வு.
பழி வாங்கினால் காயம் ஆறாது, மாறாக, அது காயத்தை பெரிதாக்கும், ஆழப்படுத்தும்.
மனதில் உயர்வுநிலை அடைய பெற்றவர்கள் கீழானவர்கள் நிந்தனைகளை பொருட்படுத்தக்கூடாது. நம்மை நிந்திக்க வேண்டுமென்றால் அதற்கும் ஒரு தகுதி வேண்டும். நம்மை விட உயர்ந்தவர்கள் நம்மை நிந்தித்தால் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். நம்மை விட தாழ்ந்தவர்களின் நிந்தனைகளை பெரிதாக எடுத்துக்கொண்டு மனம் புண் பட்டோமென்றால், அது நாம் கற்ற கல்விக்கு, நமக்கு கற்பித்த குருவுக்கு செய்யும் துரோகமாகும்.
~பரமேஸ்வரி
பரம் அத்வைத்.

Wednesday, December 13, 2023

கசப்பு மிட்டாய் -2

 

பாம்பு, பூரானோடு வாழ்வதை விட, தனியாக வாழ்ந்து விடுவது எவ்வளவோ மேல், இல்லையா? விஷம் சாப்பிடுவதை விட பட்டினியாக இருந்து விடலாம்.

பொறுமையாகக் காத்திரு! காத்திருத்தலும் பிரார்த்தனை தான். என்னை உன்னிடம் சேர்க்கத் தகுதியான துணை கிடைக்காததால், தனிமையில் காத்திருக்கிறேன் என்பது கூட அன்பு தான், ஆன்மீக சாதனை தான். சரியான திசையை நோக்கிப் போகக் கூடிய வண்டி கிடைக்கவில்லையென்றால், தவறான திசையில் செல்லும் வண்டியில் பயணம் செல்வோமா? காத்துக்கொண்டிருப்போம் அல்லது நடந்து போவோம். அது நமக்கு ஒப்புதல் தான். ஆனால், தவறான திசையில் செல்லும் வண்டியில் அமர ஒப்புக்கொள்ள மாட்டோம். சரியான நட்பு கிடைக்காததால் நான் உன்னைத் துணையாகப் பெற்றேன். ஆனால், சுமையாக வரும் யாரையும் என்னோடு சேர்த்துக்கொள்ளவில்லை.
வண்டியோடு உறவு கொள்வது எப்போது என்றால், அது உன்னை போக வேண்டிய இடத்திற்கு அழைத்துச் செல்லலும் போது தான். யாராவது உன்னிடம், விபத்துக்குள்ளாக்கும் வண்டியைக் கொண்டு வந்து கொடுத்தால், அந்த வண்டியில் போவதை விட கால்நடையாக நடந்து போவதே மேல் இல்லையா?
~ஆச்சார்ய பிரசாந்த் ஜி.
கசப்பு மிட்டாய் என்ற ஹிந்தி புத்தகத்திலிருந்து.

கசப்பு மிட்டாய் - 1

 


நீ திருமணம் செய்து கொள் ! ஆனால், திருமணத்தால் தனிமை குறையும் என்று நம்பிக்கை வைக்காதே! பாலுறவு இத்யாதிக்கு வாய்ப்புகள் நிறையவே கிடைக்கும். எல்லாம் நடக்கும்! குழந்தை குட்டி உண்டாகிவிடும். வீடு வாசல் அமையும். தாய் தந்தையரின் நம்பிக்கைகள் நிறைவேறும். அருமையான வீட்டு சாப்பாடு கிடைக்கத் தொடங்கும். வீடு ஒழுங்காக இருக்கும். துணிமணியெல்லாம் நன்றாக இருக்கும். முகத்தில் ஒரு களை வரும். திருமணத்துப் பின் இவையெல்லாம் நடக்கும். வரதட்சிணை கிடைக்கும். பைக் வைத்திருந்தால், கார் கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். வாடகைக்கு வீடு கிடைக்கும். இது எல்லாமே நடக்கும்.

ஆனால், தனிமை? அது மட்டும் போகாது.
~ஆச்சார்ய பிரசாந்த் ஜி.
கசப்பு மிட்டாய் (Neem Laddu) என்ற ஹிந்தி புத்தகத்திலிருந்து.

Thursday, December 7, 2023

இன்பத்தில் தொழுவார் யாருமில்லை ~ கபீர் தாசர்

 


துன்பத்தில் யாவரும் தொழுவார்கள், இன்பத்தில் தொழுவார் யாருமில்லை.

இன்பத்திலும் தொழுத்தாரென்றால், துன்பம் அவர்க்கு வருமோ சொல்!

दुःख में सुमिरन सब करे, सुख में करे न कोय ।
जो सुख में सुमिरन करे, तो दुःख काहे को होय ।
~ கபீர் தாசர் பெருமான். 

கபீர் தாஸரின் குறள்கள் படிப்பறிவில்லாத சாதாரண மனிதனும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் மிகவும் எளிமையாக இருக்கும். கேட்டவுடன் புரிந்து விட்டது போலவே தோன்றும். உண்மையில் அவரின் ஓவ்வொரு குறளிலும் வாழ்க்கை தத்துவமே அடங்கியுள்ளது. அது ஒரு சூத்திரம் போலவும் இருக்கும். எளிமையாக இருப்பதனால், எல்லாம் புரிந்து விட்டதாக நினைத்துக்கொண்டால் சாராம்சத்தை தவற விட்டுவிடுவீர்கள்.

துன்பம் வரும் போது எல்லோரும் கடவுளை நினைப்போம். இன்பமாக இருக்கும் பொது யாருமே நினைப்பதில்லை. இன்பத்திலும் நினைத்தால், துன்பமே வராது என்று இந்தக் குறளுக்கு பொருள் சொல்வார்கள்.  

இவ்வுலகில் துன்பத்தை விரும்புபவர்கள் யாருமில்லை. எல்லோருக்குமே இன்பம் தான் வேண்டும். ஆனால், பலரும் துன்பப் படுவதைத் தான் அதிகம் பார்க்கிறோம். இன்பத்தை தானே விரும்பினோம், பிறகு ஏன் துன்பம் வருகிறது?  இது என்னவோ ஒரு சூது வாதில்லாத innocent ஆன கேள்வியாகத் தெரிகிறது இல்லையா? அப்படி இல்லை.

கனக்குப் பாடத்தில் இரண்டாவது வாய்ப்பாடு தெரிந்திருக்க வேண்டியது, ஒரு அடிப்படையான விஷயம், இல்லையா? அது தெரியாமல் கணக்கு போட்டால் சரிப்பட்டு வராது. ஆங்கிலதில் பேச வேண்டுமென்றால், குறைந்த பட்சம் A, B, C , D தெரிந்திருக்க வேண்டும். அதுபோல், வாழ்க்கையில் நாம் படித்திருக்க வேண்டிய ஒண்ணாங்கிளாஸ் பாடம் - இன்பமும் துன்பமும் எப்போதும் தனித்தனியாக வராது. இரண்டும் சேர்ந்தே தான் வரும்! ஒன்று கேட்டால் இன்னொன்று இலவசமாக கிடைக்கும்.

நாம் ஏன் துன்பப படுகிறோம்? ஏனென்றால், நாம் இன்பத்தை விரும்பினோம்! நேரடியான பதில் இது. வேறு பல காரணங்களெல்லாம் சொன்னாலும், நேரடியான காரணம் நீங்கள் இன்பத்தை விரும்பியது தான்.

அப்படியா? இன்பமாக இருப்பது அவ்வளவு பெரிய குற்றமா?

இன்பமாக இருப்பது குற்றமில்லை. ஆனால் இன்பமென்றால் என்னவென்றே தெரியாமல் இருப்பது குற்றம்.

இன்பத்தின் செயற்பாடு என்னவென்று தெரியாமல் துன்பத்திலிருந்தும் தப்பிக்க முடியாது. எனவே, இன்பமென்றால் என்னவென்று புரிய வேண்டியது அவசியம். இன்பத்தைத் தேடியும், துன்பதத்தை விட்டோடியும் வாழ்க்கையின் பெரும் பகுதியை கழித்து விட்டோம். ஏற்கனவே மிகுந்த கால தாமதம் ஆகி விட்டது. இப்போதாவது இன்பம், துன்பம் என்றால் என்னவென்று தெரிந்து கொள்வோம்!

நாம் இருக்கிறோம். மற்றும், உலகில் பல பொருட்களும், மனிதர்களும், சூழ்நிலைகளும் இருக்கின்றன. உலகில் உள்ள பொருட்களில் சில நமக்கு சுகமான அனுபவத்தை (pleasure ) ஏற்படுத்துகின்றன, சில பொருட்கள் துக்கமான அனுபவத்தை ஏற்படுத்துகின்றன. ஒருவேளை, உங்களுக்கு தோசை பிடிக்கும் என்றால், தோசையைப் பார்த்தவுடன் சுகம் என்ற அனுபவம் ஏற்படும். உங்களுக்கு ஒரு நண்பரை பிடிக்கும் என்றால் அவரைப் பார்த்தவுடன் மனம் குதூகலிக்கும். உங்களுடைய குழந்தைகளை நினைக்கும் பொது மகிழ்ச்சியான நினைவுகள் ஏற்படும். சிலருக்கு கசப்பான உணர்வுகளும் ஏற்படலாம். உலகத்தோடு சம்பந்தப் படும் போது நமக்கு உண்டாகும் அனுபவங்களை இன்பம், துன்பம் என்று சொல்கிறோம்.  

இன்பம் கொடுக்கும் பொருட்கள் தனி, துன்பம் கொடுக்கும் பொருட்கள் தனி என்று தனித்தனியாக எதுவுமில்லை . எந்தப் பொருளால் இன்பம் கிடைத்ததோ, அதே பொருளால் தான் துன்பமும் ஏற்படுகிறது. நீங்கள் விரும்பாத ஒருவரை வெறுப்பது முடியாது. மற்றவர்கள் நம்மை மதிக்க வேண்டுமென்று விரும்புகிறோம். ஏனென்றால், அவர்கள் மனதில் நமக்கு உயர்ந்த இடம் வேண்டுமென்று விரும்புவதால் தானே?  அந்த விருப்பம் நிறைவேறாத போது கோபம், வருத்தம் எல்லாம் உண்டாகிறது. பணத்தை நாம் எல்லோரும் விரும்புகிறோம் இல்லையா, அதனால் தான், பாக்கெட்டில் பணம் குறைந்து விட்டால் பலருக்கு உடம்பில் சத்தே போனது போல் ஆகி விடுவார்கள். சிடுசிடுவென்று விழுவார்கள். பயமாக இருக்கும். மீண்டும் பணத்தைப் பார்த்தால் தான் எழுந்து உட்காருவார்கள்.

உலகில் இன்பம் தரும் பொருட்கள் என்று எதுவும் இல்லை. இன்பம் என்பது நம்முடைய தனிப்பட்ட கருத்து தான். நம்முடைய தனிப்பட்ட கருத்து என்பது கூட சரியில்லை. நாம் அப்படி பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறோம். கோவில் மணியோசை இந்துவுக்கு வேண்டுமானால் மகிழ்ச்சியாக இருக்கலாம் . ஆனால், ஒரு இஸ்லாமியருக்கு மணியோசை வெறும் சத்தம் தான். இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் விளையாடும் போது இந்தியா வென்றால், இந்தியர்களுக்குத் தான் இன்பமாக இருக்கும். பாகிஸ்தானுக்கு துக்கமாக இருக்கும். நாம் இந்தியர்கள் என்று பயிற்றுவிக்கப் பட்டிருப்பதால், இந்தியா வெற்றி பெற்றால் இன்பம் என்ற உணர்வு ஏற்படுகிறது. ஒருவேளை, இந்தியக் குழந்தை பாகிஸ்தானிலேயே பிறந்து வளர்ந்திருந்தால், அதற்கு இந்தியா ஜெயித்தால் இன்பம் வராது. நாம் இந்தியர்கள், இந்தியாவின் வெற்றி உன் வெற்றி என்று சிறு வயதிலிருந்து பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறோம். 

எனவே இன்பம் என்று நாம் கருத்துவதெல்லாம் நம் சொந்த விஷயம் இல்லை. சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்டு, நம்ப வைக்கப் பட்ட ஒரு கருத்து தான் இன்பம். iphone வாங்கிவிட்டால் இன்பம் என்று உங்களுக்கு எப்படி தெரியும்? யார் சொன்னது? திரும்பத் திரும்ப இந்தக் கருத்து ஊடகங்களும் , சுற்றி இருப்பவர்களும் உங்கள் மனதில் திணிக்கப் பட்டது. iphone வைத்திருந்தால் பெருமை என்று நம்பவைக்கப் பட்டீர்கள். ஒரு நாள் iphone கிடைத்து விட்டால் எப்படி சந்தோசமாக இருக்கும்!

நம் சந்தோஷங்களெல்லாம் உண்மையில் நம் சந்தோஷங்கள் இல்லை. வேறு யாரோ, நாம் எதற்கு சந்தோசப் படவேண்டும், எதற்கு கவலைப் பட வேண்டும் என்று தீர்மானிக்கிறார்கள். பெற்றோர்கள், உறவினர், நண்பர்கள், ஆசிரியர்கள், நாடு, இனம், மதம், கல்வி, அரசியல், சந்தை, சினிமா, டிவி, மீடியா என்று பல பேர் நாம் எதற்கு சுகப்பட வேண்டும், எதற்கு துக்கப்பட வேண்டும் என்று நிர்ணயிக்கிறார்கள். 

நம் உடலில் உள்ள ரசாயன மாற்றங்கள் மற்றொரு காரணம். 16 வயதில் வயசுப் பையன்களை, பெண்களைப் பார்த்தால் இன்பமாக இருப்பது, வெறும் ரசாயன மாற்றம் தான். காதல் என்று சொல்வதெல்லாம் வேறொன்றுமில்லை, உடலில் ஏற்படும் அரிப்பு தான்.

சரி, அப்படியாவது சுகமாக இருந்துவிட்டுப் போகலாமே என்றால், அதுவும் முடியாது. ஏனென்றால், நாம் எது இன்பம் தரும் என்று நினைக்கிறோமோ, அது அவ்வளவு சுலபமாகி கிடைப்பதில்லை. கிடைத்தாலும் இன்பம் கொஞ்ச நேரத்துக்கு தான். அதிக பட்சம், சில நாட்கள் அல்லது மாதங்கள் பேசாமல் இருப்போம். பிறகு, மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிவிடும். விரைவில் அடுத்த மாடல் போன் வந்து விடும். கையில் இருப்பது பழசாகத் தெரியும். கெத்தாக இருக்காது. அல்லது கீழே விழுந்து கீறல் விழுந்து விட்டிருக்கும்.  

முதலில் இன்பம் என்று நாம் நினைப்பது நம்முடைய சொந்த விருப்பமே இல்லை.நம் விருப்பங்களெல்லாம் யார் யாரோ நமக்குள் வீசி எறிந்துவிட்டுப் போன குப்பை! அந்தக் குப்பைகளால் மனது கெட்டுப் போயிருக்கிறது. இன்பம் என்றோ ஒருநாள் வரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறது. இந்த காத்திருப்பு தான் துன்பம். வந்த இன்பத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமே என்று பரிதவிக்கிறது. இந்தப் பரிதவிப்பே துன்பம். இன்பத்தை இழந்து விடுவோமோ என்ற பயம் துன்பம். இன்பத்தைத் தேடி அடைய செய்யும் முயற்சிகள் யாவும் துன்பம்.

துன்பம் வந்துவிட்டால், இந்த உலகமே பொய், யாரையும் நம்பக கூடாது, என்னை ஏமாற்றி விட்டார்கள் என்றெல்லாம் அழுது புலம்புவோம். கடவுளே, காப்பாற்று என்று கோயிலுக்கு ஓடுவோம். சோகப் பாடல்களை கேட்போம். மோட்டிவேஷன் வீடியோக்கள் பார்ப்போம். பட் , இட்'ஸ் டூ லேட்! எப்போது இன்பம் இது தான் என்று நினைத்தீர்களா அப்போதே துன்பத்திற்கான விதையை விதைத்து விட்டீர்கள். அது துளிர் விட்டு, செடியாகி, மரமாகி அதன் பலனைத் தரும் பொது தான், "ஐயோ, கசக்கிறதே" என்று துப்புகிறீர்கள். வேறு வழி இல்லை. அனுபவித்துத் தான் ஆகா வேண்டும்.

கபீர் ஐயா என்ன சொல்கிறார் பாருங்கள். இப்போது நன்றாகக் புரியும். துன்பம் வரும் போது தொழுது என்ன பயன்? இன்பம் வரும் போதே, உலகம் பொய், ஏமாற்றப் படுகிறோம், இது வெறும் உணர்வு தான், உண்மையில்லை என்று தெளிவாக பார்த்திருந்தோமென்றால்,, துன்பம் வந்திருக்கவே முடியாது. 

தொழுவது என்றால் காலில் விழுந்து கும்பிடுவது என்று அர்த்தமில்லை. தொழுவது என்றால் எது நமக்கு நன்மை தருமோ, அதை வணங்குவது, நம் இயல்பான ஆனந்தத்திற்கு தடையாக இருப்பவைகளை வேண்டாமென்று என்று ஒதுக்குவது.

துன்பம் வந்த பிறகு தொழுபவர்கள் ஞானி ஆக முடியாது, முக்தி அடைய முடியாது. ஏனென்றால், அவர்கள் இன்பத்தை வேண்டித் தொழுகிறார்கள். வேண்டித் தொழுவதால் அது வேண்டுதல் எனப்படுகிறது. இஷ்ட தேவதை என்றால் நாம் இஷ்டப் படுவதைக் கொடுக்கும் தேவதை என்று பொருள். இவர்கள் துன்பத்தைத் துடைக்க வேறு ஒரு பொருள் கிடைத்தால் போதும். ஞானமெல்லாம் தேவையில்லை. ஒரு காதல் பிரேக் அப் ஆனால், சீக்கிரமே இன்னொரு காதல் வந்து அந்த துக்கத்தை துடைத்து விடும், தற்காலிகமாக!


சுமிரன் என்ற வார்தைக்குப் பொருள் "நினைவு கூர்தல்" என்று பொருள். இன்பத்திலும், துன்பத்திலும் கடவுளை நினைக்க வேண்டும் என்றால் முருகனையே, ராமனையோ நினைக்க வேண்டும் என்று எடுக்கக் கூடாது. கடவுள் என்பது அனைத்தையும் கடந்தது என்றால், அதைப் பற்றி எதுவுமே நினைக்க முடியாது. ஏனென்றால், நம்மால் பொருள்களை மட்டும் தான் நினைக்க முடியும். மனது எப்போது அலை பாயாமல், ஆசைகளற்று இருக்கிறதோ, எப்போது நம் மனம் என்ற சிம்மாசனம் காலியாக இருக்கிறதோ, எப்போது உள்ளே மெளனமாக இருப்பதில் திருப்தியாக இருக்கிறோமோ, அப்போது கடவுளின் "சுமிரன்" இருக்கிறது. அப்போது, கடவுளை தொழுகிறோம், வணங்குகிறோம், ஆராதிக்கிறோம் என்று பொருள். வேறு எதுவும் செய்ய வேண்டியதில்லை.

மனிதனுக்கு இன்ப வேட்கையை விட்டு விடுவது அவ்வளவு சுலபமாக இல்லை. மீண்டும் மீண்டும் முயற்சித்துக் கொண்டே இருக்கிறான். இந்தப் பொருள் இல்லையென்றால், வேறொரு பொருளில், வேறு மனிதர், வேறு நாட்டில், வேறு வேலையில் இன்பம் கிடைக்கும் என்று விடாமுயற்சியுடன் இன்பத்தைத் துரத்திக் கொண்டிருக்கிறான். அவனுடைய இன்பவேட்கை உலகத்தையே முடித்துக் கட்டி விடும் போல இருக்கிறது. ஆனாலும, அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை தீர்ந்த பாடில்லை.  துன்பத்தின் நிறமும் வடிவமும் மாறிக்கொண்டே இருக்கும், அது தொடர்ந்து இருந்து கொண்டே தான் இருக்கும்.

ஞானிகள் சொல்வதை மீண்டும் மீண்டும் கேட்டு, படித்து, உணர்ந்து தெரிந்து கொள்ள வேண்டும். நாம் யார் என்று நினைவு படுத்திக்க கொள்ள வேண்டும். ஒரு வயதுக்குட்பட்ட சிறு குழந்தைகளுக்கு அவ்வளவாக துன்பமில்லை. எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கின்றன. அதனுடைய கை விரலைகளைப் பார்த்தே சந்தோஷமாக சிரித்துக் கொண்டிருக்கும். உண்மையில் நாம் மகிழ்ச்சியோடு இருக்க பெரிதாக ஒன்றும் தேவை இல்லை. தேவை என்று நினைத்து எதையாவது தேடித் போவது தான் மகிழ்ச்சியைக் கெடுத்து விடுகிறது.

எவன் இன்பம் வரும் போதே உஷாராக இருக்கிறானோ, இன்பத்தையும் துன்பத்தையும் இணை பிரியாதவை என்று அறிகிறானோ, அவன் மனம் இன்பம் வேண்டி அலையாது. அலையாத மனம் அன்பான மனம், ஆனந்தமான மனம்! தெளிவான, திடமான மனம்! இன்பத்தை அனுபவிக்காதே என்று சொல்லவில்லை, இன்பம் என்பது துன்பத்துக்கான பொறி trap என்பதை புரிந்து கொண்டால் போதும். அப்போது, இன்பம் வந்தால் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம், அது இல்லையென்றால் சரி பரவாயில்லை என்று விட்டு விடவும் முடியும். இன்பத்தையும் துன்பத்தையும் கண்டு நிலை குலைய மாட்டோம்.










 



Tuesday, December 5, 2023

சிறு துரும்பும் ~கபீர் தாஸ்.


 

காலில் மிதிபடும் துரும்பென்று எவரையும்  இழிவாய்  எண்ணாதே! 

பறந்து வந்து ஓர் நாள் கண்ணில் விழுந்தால்  வலியோ தாங்காதே!

तिनका कबहुँ ना निंदिये, जो पाँव तले होय ।
कबहुँ उड़ आँखो पड़े, पीड गहरी होय ॥
~கபீர் தாஸ்.

சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்று தமிழில் ஒரு பழமொழி உள்ளது. சிறிய துரும்பு தானே என்று தூக்கி எறிந்துவிடாதே, அதுவும் உனக்கு பல் குத்த உதவும், எனவே தாழ்ந்தவர் என்று எவரையும் ஒதுக்காதே. அவர்களாலும் நன்மை உண்டு என்று பொருள்.  

காலடியில் கிடக்கும் துரும்பு தானே என்று ஏளனமாக நினைக்காதே. ஒருவேளை, அது பறந்து வந்து உன் கண்ணில் விழுந்தால், அதன் வலி மிகவும் ஆழமாக இருக்கும் என்கிறார்.
பொதுவாக நாம் நம்மை விட ஏதாவது ஒரு விதத்தில் குறைந்தவர்களை துரும்பைப் போல கேவலமாகத் தான் மதிக்கிறோம். வேலைக்காரி, கூலித் தொழிலாளர்கள், வீதி கூட்டுபவர்கள், டிரைவர்கள், ஏழைகள் போன்றவர்களை நாம் கௌரவமாக நடத்துவதேயில்லை. இவர்கள் நம்மை என்ன செய்து விடப் போகிறார்கள் என்ற இறுமாப்பு காரணமாக இருக்கலாம். நம்முடைய குழந்தைகளைக் கூட பலசமயம் சிறு துரும்பாகத்தான் நடத்தி விடுகிறோம். குழந்தைகள் தானே, நம்மை எதிர்த்துப் பேச முடியுமா? நம்மை விட்டுப் போய்விடத்தான் முடியுமா? அதனால், நம்முடைய எல்லா வன்மங்களையும் அவர்கள் மேல் தாராளமாகக் காட்டுவோம். மனைவியை துரும்பாக மதிக்கும் ஆண்கள் அநேகம். அவர்களை அண்டி இருக்கிறாள் என்ற ஒரே காரணத்தால், அவளை கேவலமாக நடத்துவார்கள். 

உங்களுக்கும் வயதாகும். முதுமை வரும். கை, கால் சோர்வடையும். நோய் வாய்ப்படுவீர்கள். அப்போது, அவர்கள் பெரியவர்களாகி இருப்பார்கள். நீங்கள் துரும்பென்று மதித்தவர்கள் உங்கள் கண்ணுக்குள் நுழைந்து உறுத்துவார்கள். உங்களால் வலி தாள முடியாது. பல பெண்கள், ஆண்கள் ரிட்டையர் ஆகும் வரை எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டிருப்பார்கள். கணவர் ரிட்டையர் ஆன பின், பிள்ளைகளிடமிருந்து பணம் வர ஆரம்பித்து விட்டால் போதும், அவர்கள் கை ஓங்கிவிடும். கண்ணின் இமை போல் இருந்தவள், கண்ணில் முள்ளாக மாறி குத்த ஆரம்பித்து விடுவாள். துப்புரவுத் தொழிலாளர்களை நாம் பெரிதாக மதித்ததில்லை. ஆனால், கொரோனா சமயத்தில், அவர்களுக்கு எப்படிப் பட்ட அதிகாரம் கிடைத்தது என்று நமக்குத் தெரியும். நீங்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், அவர்கள் நினைத்தால் உங்களைக் காப்பாற்றவும் முடியும், கட்டி இழுத்துக் கொண்டு போய் கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில் தள்ளி விடவும் முடியும். உங்களை வீட்டோடு தனிமைப் படுத்தி விடவும் முடியும். நடு வழியில் நிற்க வைத்து உங்களை பரிசோதிக்க முடியும். சிறு துரும்பென்று யாரையும் அவமரியாதை செய்யக் கூடாது. அவர்களுக்கென்று ஒரு காலம் வரும் போது அவர்களால் மிகுந்த வேதனையை அனுபவிக்க நேரிடும். இன்னும் நுட்பமான முறையில் பார்த்தால், துரும்பு என்பதை எண்ணங்களோடு தொடர்பு படுத்திப் பார்க்கலாம். எல்லா இடங்களிலிருந்தும் எண்ணங்கள் நம் மனதிற்குள் புகுந்து விடுகின்றன தூசியைப் போல். அப்பா சொன்னது, அம்மா சொன்னது, சினிமாவில் பார்த்தது, டிவி யில் கேட்டது, பேஸ் புக் போன்ற வலைத்தளங்களில் பார்த்தது, மூதாதையர் சொன்னது என்று குப்பை போல் எண்ணங்கள் நமக்குள் வந்து குமிந்து கொண்டிருக்கிறது. இவை சாதாரண எண்ணங்கள் தானே என்று விட்டு விட்டால், அவை நமக்குள் ஊடுருவி நம் வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விடும். மந்தரை சொன்ன சொல்லைக் கேட்டதால், கைகேயியின் மனதில் தவறான எண்ணம் புகுந்தது. அது அவள் கணவனின் உயிரையும் குடித்தது. மாய மான் வேண்டும் என்ற எண்ணத்தால் சீதா பட்ட கஷ்டங்கள் எவ்வளவு என்று நமக்குத் தெரியும். எண்ணங்கள் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும், அவற்றிற்கு யானை பலம் உண்டு. மனதில் என்ன எண்ணம் ஓடிக்கொண்டிருக்கிறது என்று கவனிக்க வேண்டும். எண்ணம் தானே யாருக்குத் தெரியப் போகிறது என்று அசால்டாக இருந்து விட்டோமென்றால் அது கண்ணுக்குள் நுழைந்த தூசி போன்று ஆகி விடும். நம் பார்வையை மறைத்து விடும். கண்ணில் விழுந்து விட்டால் கூட வெளியே எடுத்துவிடலாம். ஆனால், மனதுக்குள் ஒரு எண்ணம் விழுந்து விட்டால் வெளியே எடுப்பது மிகவும் கடினம். சிறுதுறும்பை விடவும் சிறியது அணு, அதை விடவும் சிறியது எண்ணம். ஆனால், ஒரே ஒரு எண்ணம் போதும். எண்ணத்தால் பேரரசுகள் கவிழ்த்துள்ளன , பெரும்போர்கள் மூண்டுள்ளன! குடும்பங்கள் பிரிந்துள்ளன!  

மனதில் ஒரு எண்ணம் வருவது தெரிந்தவுடன், அதை அப்படியே ஏற்றுக்கொள்ளக் கூடாது. சீர் தூக்கிப் பார்க்க வேண்டும். இந்த எண்ணம் சரிதானா? இதில் உண்மை இருக்கிறதா? அல்லது யாரோ சொல்வதை நம்புகிறேனா? இப்படி எண்ணத்தை ஆராய்ந்து பார்க்க வேண்டும். மதிப்பு என்ற வார்த்தைக்கு பொருள் என்ன தெரியுமா? நான் இந்த மலையை மதிக்கிறேன் என்றால் மலையை கவனிக்கிறேன் என்று பொருள். ஒரு கவிஞரை மதிக்கிறேன் என்றால் அவருடைய கவிதையை கவனித்துப் படிக்கிறேன் என்று பொருள். நம் வாழ்க்கையில் நாம் சந்திக்கும் நபர்கள், நிகழ்வுகள் எல்லாம் நம் மதிப்புக்குரியவை. அதவாது நம் கவனத்துக்குரியவை. கவனமின்றி இருக்கும் தருணத்தில் ஆணவம் பிறப்பெடுக்கிறது. ஆணவத்தின் பலன் என்னவென்று அனுபவித்த எல்லோருக்குமே தெரியும். புதிதாக எதுவும் சொல்ல வேண்டியதில்லை. ஆணவத்தில் அழிந்து போனான் என்று சொல்வழக்கே இருக்கிறது. சின்ன சின்ன விஷயங்களிலும் கவனமாக இருங்கள். சின்னச்சின்ன மனிதர்களையும், சின்னச் சின்ன விலங்குகள், பறவைகள், புழு பூச்சிகளையும் கூட அக்கறையோடு பாருங்கள்.


உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்!


May be a doodle

 உலகை ஆளும் நாயகனே!

என்னுள் ஓடிக்கொண்டிருக்கும்
ஓயாத இயக்கத்தையும்,
அதை இயக்குபவனையும்,
எனக்குக் காட்டிக் கொடுத்தாய்!
அன்பே,
என் ஒரே வேண்டுகோள் இது தான்.
மயக்கத்தில் ஆழ்த்தும்
எல்லா கட்டளைகளையும்,
மருட்சியை விருட்சமாக்கும்
விதைகள் அனைத்தையும்,
தேடிப் பிடித்து
துவம்சம் செய்து விடு!
என்னுள் இருக்கும் என்னை எடுத்துக்கொண்டு
பதிலுக்கு,
என்னிடத்தில் உன்னை நிரப்பிவிடு!
~பரமேஸ்வரி
பரம் அத்வைத்.

வேதாந்தம் பகுதி 3- நான் யார்?


May be a graphic

 வேதங்கள் நான்கு, ரிக், சாம, யசூர், அதர்வணம். அதில் ஓவ்வொன்றிலும் இறுதிப் பாகமாக வருவது வேதாந்தம். இதில் உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத் கீதை இம்மூன்றும் அடக்கம்.

ஆசைகளின் பூர்த்தியால் மனநிறைவு பெற முடியாது என்றால் வேறு என்ன செய்வது என்று விசாரணை (enquiry) செய்ததன் பயன் தான் வேதாந்தம். துன்பத்திலிருந்து விடுதலை வேண்டும் என்றால் முதலில் யார் துன்பப் படுகிறார்கள் என்று தெரிய வேண்டும் இல்லையா? யாருக்கு துன்பமாக இருக்கிறது என்று தெரிந்தால் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம். இங்கே தான் யாருக்குத் துன்பம் என்ற கேள்வி வருகிறது. எல்லோரும் என்ன சொல்வோம்? நான் தான் கஷ்டப்படுகிறேன் என்போம். "நான்" என்பது இல்லாமல் எந்த அனுபவமுமே இல்லை. எனவே, "நான்" யார்? என்பது தான் வேதாந்தத்தின் மையமான கேள்வி. ஆன்மீக வட்டாரங்களில் இது மிகவும் பிரபலமான கேள்வி.
அறிவியல் வளர்ந்தது, கேள்விகள் கேட்டதால் தான். கண்டதெல்லாம் உண்மை என்று ஒத்துக் கொள்ளாமல் தூண்டித் துருவி கேள்வி கேட்டு உண்மையை கண்டறிந்தார்கள். Scientific spirit அறிவியல் நோக்கு என்பது கேள்விகள் கேட்டு உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற வேட்கை ஆகும். மூட நம்பிக்கைகளை எல்லாம் ஒழித்துக் கட்டியது அறிவியல் தான். அறிவியல்,உலகத்தையே ஆராய்ச்சிக்கூடத்துக்குள் கொண்டு வந்து நிறுத்தியது. இதே spirit, மனப்பாங்குடன் வாழ்க்கையை சந்தித்தவர்கள் தான் நம் ரிஷிகள். மேற்கில் வெளி உலகை ஆராய்ந்தார்கள், ரிஷிகள் உள் உலகை ஆராய்ந்தார்கள்.
இவ்வுலகில் நாம் வாழ்கிறோம். வாழ்வின் மையத்தில் இருப்பவன் நான். நான் இல்லாமல் உலகம் இல்லை. நான் தான் இன்ப துன்பங்களை அனுபவிக்கிறேன். இந்த "நான்" ஐ புரிந்து கொண்டால் வாழ்க்கையின் சூக்ஷமம் புரிந்து விடும் அல்லவா? எனவே, "நான்" என்பது தான் அவர்கள் எடுத்துக் கொண்ட பேசு பொருள் (subject matter) அவர்கள் ஆராய்ச்சிக்கூடத்திற்குள் நுண்பெறுக்கிக்கடியில் கொண்டு வந்த பொருள் "நான்".
அறிவியல் உலகைப் புரிந்து கொள்ள மேற்கொண்ட முயற்சி.
வேதாந்தம் தன்னைப் புரிந்து கொள்ள மேற்கொண்ட முயற்சி.
அறிவியலும் வேதாந்தமும் உண்மையை அறிய வேண்டும் என்ற மனிதனின் ஆழ்ந்த விருப்பத்துக்கு ஆதாரமாகும்.
உண்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்ற தாகத்தை அன்பு என்றும் சொல்லலாம். உண்மையை நேசிப்பதே உண்மையான அன்பு. அதைத் தவிர வேறு எதுவும் அன்பில்லை. நாம் அன்பு என்று சொல்லிக்கொண்டிருப்பதெல்லாம் அன்பில்லை. நம் உறவினர்கள் மீது வைத்திருப்பது, நம் உடைமைகள் மேல் வைத்திருப்பது எல்லாம் உண்மையில் அன்பு கிடையாது. அதற்கு வேறு பெயர் வேண்டுமானால் கொடுத்துக் கொள்ளலாம். நிச்சயமாக அன்பில்லை. நன்றாகத் தெரிந்து, புரிந்து தான் சொல்கிறேன். ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், வேதாந்தத்தில் அன்பு என்ற சொல் ஒரு முறை கூட உபயோகப்படுத்தப் படவில்லை! அன்பைப் பற்றி பேச வேண்டிய அவசியம் அவர்களுக்கு ஏற்படவில்லை போலும். அவர்களின் அறிவு தாகத்துக்குப் பின்னால் அன்பு மறைந்திருக்கிறது!
நம்மில் பலருக்கு அறிவியலில் மிகுந்த ஆர்வம் இருக்கும். தேடித் தேடிப் போய் தெரிந்து கொள்வோம். புதுப்புது தொழில் நுட்பமெல்லாம் அனாயாசமாகக் கற்றுக் கொள்வார்கள். ஆனால், நம்மைப் பற்றி,நம் வாழ்க்கை பற்றி தெரிந்து கொள்ள யாரும் அவ்வளவாக விரும்புவதில்லை. வேண்டுமென்றே தவிர்ப்போம். காரணம் இது தான். இதில், நம்மையே நாம் ஆராய்ச்சிக்கூடத்துக்குள் கொண்டு வர வேண்டி இருக்கிறது. நம்மை நாமே கேள்வி கேட்க வேண்டி வரும். நாம் நம்பிக்கொண்டிருக்கும் கருத்துகள் (concepts ), பழக்க வழக்கங்கள், அடையாளங்கள் (identities) யாவும் ஆட்டம் காணலாம். அதற்கு யாரும் தயாராக இல்லை. தூங்கற மணியாரத்த எழுப்ப வேண்டாமென்று சொல்வார்களே, அப்படி. உண்மையை நேருக்கு நேர் சந்திக்க பலருக்கு பயமாக இருக்கிறது. உண்மையை சந்திக்க அசாத்தியமான துணிச்சல் தேவைப்படும். அந்தத் துணிச்சலே அன்பென்றும் சொல்வார்கள்.
தன்னை விட, உண்மையை அதிகம் நேசிக்கும் மனம் கொண்டவர்கள் மட்டுமே பயணிக்கும் பயணம் இது.

வேதாந்தம் பகுதி 3- நான் யார்?


Wednesday, November 29, 2023

வேதாந்தம் - பகுதி 2




வேதம், இந்துக்களின் புனித நூல் என்று நமக்கு தெரியும்.  இந்து மதத்தில்,பலவகையான புத்தகங்கள் இருந்தாலும், எல்லாவற்றிற்கும் முதன்மையானது, மையமானது, சிறப்பானது வேதம் ஆகும். வேதம் என்றால் அறிவு என்று பொருள்.   அது ஆகாயத்திலிருந்தெல்லாம் வந்து குதித்து விடவில்லை.  எப்படி அறிவியலறிஞர்கள்  உலகில் தாம் கண்டறிந்த உண்மைகளை விட்டுச் சென்றார்களோ அப்படி, தங்கள்  உள்ளத்தில் அறிந்த உண்மைகளை ஞானிகளும், ரிஷிகளும் விட்டுச் சென்றிருக்கிறார்கள்.  ஒருவர் இருவர் அல்ல, பல பேர், பல கால கட்டங்களில் வாழ்ந்தவர்கள் தாங்கள் உணர்ந்ததை விட்டுச் சென்றிருக்கிறார்கள்.  அவர்கள் தங்கள் பெயர்களைக் கூட குறிப்பிடவில்லை.  

வேதத்தில் இரண்டு பகுதிகள் உண்டு - முதல் பகுதி கர்ம காண்டம், கடைசிப் பகுதி  ஞான காண்டம். 

கர்மகாண்டம் என்றால் செயல்முறைகள் என்று பொருள்.  அறிவு வளர்ச்சியடைய ஆரம்பித்த காலத்தில் இயற்கை போற்றப்பட்டது.  பூமித்தாய், வருண தேவன், வாயு தேவன், இந்திரன், அக்னி தேவன் என்று இயற்கை சக்திகளை  தேவதைகளாகப் போற்றும் முறை இருந்தது. இதை பிரகிருதி பூஜை என்பார்கள்.  தேவர்களை அக்னி ஹோமம், யாகம் போன்ற பூஜைகள்  மூலம் வணங்கினார்கள்.  மனிதன் தன் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ளவும், துன்பங்களைத் தீர்க்கவும் தெய்வத்தின் துணையை நாடினான். எனவே, கர்மகாண்டத்தில் தத்துவம் எதுவும் கிடையாது, ஆசை நிறைவேற்றத்துக்கான கோரிக்கைகளாக  இருக்கும்.  

 இவ்வுலகில் வளமுடன் வாழ வழிமுறைகளும் , செயல் முறைகளும்  கொண்டது கர்ம காண்டம்.  குழந்தை வேண்டுமானால் என்ன ஹோமம் செய்ய வேண்டும்?  செல்வந்தனாக என்ன யாகம் செய்ய வேண்டுமென்று விலாவாரியாகப் பேசும்.  அதாவது, நாம் ஆசைப் படுவதை தர்ம வழியில் அடைய என்னென்ன செய்ய வேண்டும் என்று சொல்லும்.  அதில் கூறப்பட்டிருக்கிற செயல் முறைகள் பலவும் இந்தக் காலத்திற்கு ஒத்து வராது. புகழ் பெற   நூறு மாடுகள் தானம் செய்ய வேண்டும் என்று சொல்வார்கள், அதை  நம்மால் செய்ய முடியாது இல்லையா? அதை செய்யவும் தேவையில்லை.

90 சதவிகிதம் இந்துக்கள் கடைபிடிப்பது கர்ம காண்டத்தைத் தான்.  ஏனென்றால், அதில் அவர்கள்  ஆசை பூர்த்தி ஆகிறது.  சொர்கம் நரகம்,  கர்மபலன், உயர்ந்தவன், தாழ்ந்தவன், ஜாதி பாகுபாடு, பலி கொடுத்தல் போன்ற பல மூட நம்பிக்கைகளும்  இதில் அடக்கம்.  எனவே, வேதத்தில் எல்லாப் பகுதியும் பவித்ரமானது என்று நினைக்க வேண்டியதில்லை.  80 சதவிகிதம் ஆசை நிறைவேற்றம் அல்லது  உலக அறிவு சம்பந்தப் பட்டதாக இருக்கும்.  வேதத்தின் கர்மகாண்டம், வாழ்வில் இன்பத்தையும் வெற்றியையும் தர்மப்படி அடைய வழி சொல்கிறது. 

 பல காலம் இப்படியே சென்றது! மனிதனின் அறிவு வளர்ச்சி முதிர்ச்சி அடைய அடைய, அவன் தன்  துன்பம் மட்டும்  நீங்காமல் இருப்பதை உணர்ந்தான்.   எந்த யாகமும், ஹோமமும், பூஜையும் அவன் துன்பத்தைத் தீர்ப்பதாக இல்லை.  எவ்வளவு தான் சம்பாதித்தாலும், தான தர்மங்கள் செய்தாலும், பேரும்  புகழும் பெற்றாலும்  மனதை வாட்டுகிற துன்பத்தை அவை  தீர்ப்பதில்லை  என்று தெரிந்துகொண்டான்.   துன்பத்திலிருந்து எப்படி விடுபடுவது என்று சிந்திக்க ஆரம்பித்த பின் உண்டானது தான் ஞான காண்டம்.   ஞான காண்டம், வேதத்தின்  கடைசியில் இருப்பதால் வேதாந்தம் எனப்படுகிறது. 

வேத் என்றால் அறிவு என்றும் பொருள் உண்டு, வேதனை என்றும் பொருள் உண்டு.  அந்தம் என்றால் முடிவு.  வேதாந்தம் என்றால்  வேதனையின் முடிவு அல்லது அறிவைக் கடந்தது என்று இரண்டு விதமாகவும் கூறலாம்.   எனவே, வேதாந்தத்தின் மையத்தில் இருப்பது மனிதன், கடவுள் அல்ல.  அது பரம்பொருள் தத்துவதை பற்றி பேசுகிறது. அது கூட, துன்பத்திலிருந்து நமக்கு  விடுதலை தருகிறது என்ற ஒரே காரணத்துக்காகத்தான்.  ஒருவேளை, நமக்கு துன்பமென்று ஒன்று இல்லையென்றால் வேதாந்தத்திற்கு  பரம்பொருள்  பற்றி பேச வேண்டிய அவசியம் கூட இருந்திருக்காது.  

வேதாந்தத்தின்  இலக்கு,  மனிதனின் அக விடுதலை.  

வேதாந்தம் யாருக்கு என்றால், துன்பத்திலிருந்து விடுதலை வேண்டும் என்பவர்கள், உலகப் பொருட்களில் நிம்மதி கிடைக்கவில்லை என்பதை தெரிந்து கொண்டவர்கள், மாறிக்கொண்டே இருக்கும் உலகில் மாறாத உண்மை எது  என்று அறிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருப்பவர்கள்.  நிரந்தரமான மகிழ்ச்சி வேண்டும் என்பவர்கள் எல்லோரும் வேதாந்தம் படிக்க வருகிறார்கள். வேதாந்தம் வயதானவர்கள்,  வாழ்க்கையில் தோல்வி அடைந்தவர்கள் படிக்கும் புத்தகம் அல்ல.  வாழ்க்கையை அச்சமின்றி, ஆற்றலோடு, ஓவ்வொரு கணமும் ஆனந்தமாக வாழ விரும்புபவர்கள் அறிய  விழையும் தத்துவம். 

 காசு பணம், பதவி, செல்வாக்கு, புகழ், வீடு, மனைவி, மக்கள், நீண்ட ஆயுள், மதிப்பு, மரியாதை, வண்டி, வாகனம்   இவற்றை விரும்புபவர்கள் பொதுவாக வேதாந்தத்தின் பக்கம் வருவதில்லை.  அவர்களுக்கு இன்னும் உலகத்தின் மேல் ஆசையும்  நம்பிக்கையும் இருக்கிறது. அவர்கள் இன்னும் கொஞ்ச காலம் ரோலர் கோஸ்டரில் சுற்ற ஆசைப் படுகிறார்கள்.  சுற்றட்டுமே! ஒரு நாள் இறங்கித் தானே ஆக வேண்டும். 



வேதாந்தம் - ஒரு அறிமுகம்


 கிறிஸ்துவர்களுக்கு பைபிள் போல, இஸ்லாமியர்களுக்கு குர் ஆன் போல, இந்து தர்மம் என்றழைக்கப் படும்  சனாதன தர்மத்தின் முதன்மையான, மைய நூல் வேதாந்தம்.  பகவத் கீதை வேதாந்தத்தின் ஒரு அங்கம் ஆகும்.  பைபிள் படிக்கவில்லை என்றால் கிருஸ்தவர்கள் என்று சொல்ல முடியாது. குர் ஆன் படிக்கவில்லை என்றால் இஸ்லாமியர்கள் என்று ஒத்துக்கொள்ள மாட்டோம்.  ஆனால், எந்தப் புத்தகமும் படிக்காவிட்டாலும் கூட, எந்தத்  தத்துவமும் தெரியாவிட்டாலும் கூட இந்துக்கள் என்று அழைக்கிறோம்.  

நம்முடைய  புத்தகம், தத்துவம்  இரண்டுமே  தெரியாது. தெரிந்தாலும் படிக்கும் வழக்கம் இல்லை. இருந்தாலும் கர்வத்துடன் இந்து என்று சொல்லிக்கொள்கிறோம்.  தீபாவளி, ஹோலி கொண்டாடுவதனாலேயே இந்துவாக முடியாது. பேர் சமஸ்கிருதத்தில் வைத்துக் கொண்டால் இந்து இல்லை.  வாழ்க்கை தத்துவம் தெரியாமல் வாழ்க்கையை நடத்துவது என்பது ஹெட் லைட் இல்லாமல் காரை ஒட்டிக்கொண்டு போவது போல். எப்போது வேண்டுமானால் விபத்து நேரலாம். நமக்கு வழி தெரியாததால் மற்றவர் நம்மை வழி நடத்த வேண்டிய நிலை ஏற்படும்.  உன்னதமான தத்துவம் என்று உலகமே வேதாந்தத்தை போற்றினாலும் நமக்கு எதுவுமே தெரியாது.  நம்மை சொல்லியும் குற்றமில்லை, நம் வீட்டிலும் யாரும் அகக்கல்வியான வேதாந்தத்தை  சொல்லிக்கொடுக்கவில்லை. பள்ளி, கல்லூரிகளிலும் ஒரேயடியாக  புறக்கணித்து விட்டார்கள்.  இந்துக்களின், பாரதத்தின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் அவர்கள் அறிவுக்கு உயர்ந்த இடம்  கொடுக்கத்  தவறியதே ஆகும்,  

வேதாந்தம் புரிவது கடினம் என்றெல்லாம் சொல்லி நம்மை அதை படிக்கவே விடாமல் செய்து விட்டார்கள்.  உண்மையில் வேதாந்தம் போல் மனதைக்கவரும் படிப்பு, மனநிறைவு தரும் கல்வி வேறெதுவுமில்லை.  

மூன்று வகையான அறிவைப் பற்றி வேதாந்தம் பேசுகிறது.  ஒன்று, தன்னை பற்றிய அறிவு, இரண்டாவது  உலகம் பற்றிய அறிவு, மூன்றாவது இறை அறிவு. இந்த மூன்றில் எது ஒன்று தெரியவில்லை என்றாலும் வாழ்வில் துன்பம் வருவது   நிச்சயம்.  நம் வாழ்விலும் துன்பம் இருந்தால், அதை வேரோடு அழிக்கக் கூடிய சக்தி வேதாந்தத்துக்கு உண்டு.  இது எத்தனையோ மாமனிதர்களை உருவாக்கியுள்ளது.  

வேதாந்தம் என்றால் என்ன, அத்வைதம், துவைதம் என்றால் என்னவென்று முதலில் புரிந்துகொள்ளலாம், ஓவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாக.  


Saturday, November 25, 2023

நிம்மதி வேண்டுமா?

     புத்தரிடம் போய் ஒரு சீடர் கேட்டாராம்.

எல்லாராலும் முக்தி அடைய முடிவது சாத்தியம் என்றால் ஏன் அனைவரும் முக்தி அடைவதில்லை? அதற்கு புத்தர், எல்லாராலும் முக்தி அடைய முடியும் ஆனால் எல்லாரும் முக்தி அடைய விரும்புவதில்லை என்று சொன்னாராம்.
மன அமைதி, நிம்மதி ஒன்றும் கிடைப்பதற்கரிய பொருள் இல்லை, அது காற்று மாதிரி, ஆகாயம் மாதிரி இயல்பாக இருக்கும் ஒரு விஷயம் தான். சகஜமானது தான். ஆனால், நம் அனுபவத்தில் அப்படி இல்லையே. எப்போதும் ஏதோ கவலை, பதட்டம், யோசனை, பயம் என்று நிம்மதி இல்லாமல் தானே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!
அமைதி ஒன்றும் குதிரைக் கொம்பு இல்லை. உண்மையில் நமக்கு அமைதி வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறதா, என்ன? கொஞ்சம் யோசித்துப் பார்த்தீர்கள் என்றால் புரியும், நமக்கு இந்த நிம்மதி, அமைதி எல்லாம் இரண்டாம் பட்சம் தான், கிடைத்தால் சரி, இல்லையென்றால் பரவாயில்லை.
உங்களுக்கு மாதம் இரண்டு லட்ச ரூபாய் சம்பளத்தில் ஒரு வேலை கிடைத்து விடுகிறது, ஆனால், அங்கே நேர்மையாக இருக்க முடியாது, அடிமை போல் வேலை செய்ய வேண்டியிருக்கும். நிம்மதி இருக்காது என்று தெரிந்தாலும், பரவாயில்லை என்று அந்த வேலையை தேர்வு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த காலத்தில் நேர்மையாகவெல்லாம் வாழ முடியாது, ஊரோடு ஒத்து வாழ் என்று பழமொழிகளை எல்லாம் அவிழ்த்து விடுவீர்கள். வேலையில் சேர்ந்து விடுவீர்கள்.
பையன் நல்ல வேலையில் கை நிறைய சம்பாதிக்கிறான், ஆப் ஷோர் போக வாய்ப்புகள் உண்டு, சொந்தமா ஒரு அபார்ட்மெண்ட், கார் உள்ள மாப்பிள்ளை, ஆனால் என்ன, சிகரெட், குடிப்பழக்கம் உண்டு, இப்படி ஒரு வரன் வந்தால், இப்போ யார் தான் குடிக்கல, அது ஒன்னும் பெரிய குற்றமில்லை, ஒரு சோஷியல் கேதரிங் என்றால் குடிக்க வேண்டியதாத் தானே இருக்கு, என்று சால்ஜாப்பு சொல்வீர்கள்.
உண்மையில் நாம் அமைதியை விட, நிம்மதியை விட சுகத்தைத் தான் அதிகம் விரும்புகிறோம். அந்த சுகம், உணவு, வீடு, வாகனம், நண்பர்கள், உறவினர்கள், ஆடம்பரப் பொருட்கள், குடி, போதை என்பது போல் உடல் சம்பந்தப் பட்டதாகவும் இருக்கலாம், அல்லது அருகாமை, பாதுகாப்பு, அங்கீகாரம், மதிப்பு, மரியாதை, புகழ், பொழுதுபோக்கு போன்ற மனது சம்பந்தப் பட்டதாகவும் இருக்கலாம்.
உடலுக்கு சவுகரியம்! மனதுக்கு சுகம்! சமூகத்தில் அந்தஸ்து!
இவற்றை அடைய நாம் கொடுக்கும் விலை தான் "நிம்மதி". இது காலம் காலமாக நடந்து வரும் ஒரு வியாபாரம். வைரக்கல்லை விற்று இரண்டு துண்டு ரொட்டி வாங்கி சாப்பிடுவது போல். அவ்வளவு புத்திசாலிகள் நாம்.
இரவு நீண்ட நேரம் கண் விழித்துப் படம் பார்ப்போம், கார மசாலா வகை உணவுகளை நேரம் காலம் தெரியாமல் ஒரு கட்டு கட்டுவோம், பணம் கிடைக்கும் என்றால் கூசாமல் பொய் சொல்வோம், வேண்டாத வேலையில் குப்பை கொட்டுவோம், மால், சினிமா என்று நண்பர்களுடன் ஊர் சுற்றுவோம். தேவையில்லாமல் பொருட்களை வாங்கி குவிப்போம். ஒன்றுக்கு ரெண்டு கிரெடிட் கார்டில் கடன் வாங்கி விடுவோம். நகை, புடவை, துணிமணி, அழகு சாதனங்கள், பியூட்டி பார்லர் என்று மாதத்துக்கு அது வேறு தனி செலவு.
இவற்றில் ஏதாவது அமைதிக்காக என்று செய்கிறோமா என்ன?
நாம் செய்யும் பூஜைகளும், செல்லும் கோவில்களும் கூட சுகத்துக்காகவே தவிர அமைதிக்காக இல்லை என்பது தான் உண்மை.
வியாபாரத்தில் லாபம் கிடைக்க வேண்டும், நல்ல வேலை கிடைக்க வேண்டும், பார்ட்னர் கிடைக்க வேண்டும், குழந்தை வேண்டும், வெற்றி அடைய வேண்டும் என்று தான் சாமியே கும்பிடுகிறோம். இதெல்லாம் கிடைத்தால் அமைதியாக இருப்பேன் என்று நினைத்துக் கொள்கிறோம். உண்மையில் , நீங்கள் அமைதியாக இருந்தால் இவை எல்லாம் தானாகவே கிடைக்கும். நீங்கள் கண்ணை விற்று சித்திரம் வாங்கி கொண்டிருக்கிறீர்கள்.
அமைதி என்பது சுவாசம் போல். அது போனபின் வேறு என்ன இருந்தால் என்ன, இல்லையென்றால் என்ன? புரிகிறதா?
நாம் எப்படிப் பட்ட ஆள் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அது மிகவும் சுலபம். வேறு யாரையும் கேட்க வேண்டியதில்லை. உங்கள் நேரமும் பணமும் எங்கே போகிறது என்று பாருங்கள். அதிலேயே தெரிந்து விடும், நீங்கள் எப்படிப் பட்டவர் என்று. இன்னும் தெரிய வேண்டும் என்றால், உங்கள் whatsapp ல் யார் நண்பர்கள் என்று பாருங்கள், Google, YouTube history எடுத்துப் பாருங்கள். நீங்கள் எப்படிப் பட்டவர் என்று துல்லியமாக தெரிந்து கொள்ளலாம். அங்கே என்ன தேடிக் கொண்டிருக்கிறீர்கள்? வெறும் சில்லறை சமாச்சாரங்கள் தான் என்றால் ஆளும் அப்படித் தான்.
கேளுங்கள் கொடுக்கப் படும் என்று இயேசு சொன்னார். நீங்கள் நிம்மதியைக் கேட்டீர்களா? கேட்டிருந்தால் கண்டிப்பாக கிடைத்திருக்கும். நாம் கேட்டதைத் தான் இதுவரை அடைந்திருக்கிறோம். நீங்கள் அரசாங்க வேலை வேண்டும் என்று விரும்பியதால் ஒரு வேலை கிடைத்தது. விரும்பவே இல்லை என்றால் எப்படிக் கிடைக்கும்?
உங்கள் வாழ்க்கையில் எதை முக்கியம் என்று நீங்கள் கருதுகிறீர்களோ, அதுவாகவே நீங்கள் மாறிவிடுவீர்கள். பணம் முக்கியம் என்றால், பணக்காரன் ஆவீர்கள். இது இயற்கை நியதி. நீங்கள் எதற்கு உங்கள் வாழ்வில் சிறப்பிடம் கொடுத்திருக்கிறீர்கள் என்று பாருங்கள். எல்லாம் புரிந்து போய் விடும்.
~பரமேஸ்வரி.
பரம் அத்வைத்.
All reactions:
Latha Parameswari and Kalaimagal Palanivel

Friday, November 24, 2023

மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்?




நம்மால் ஏன்  சில நிமிடங்கள் கூட மற்றவர்களை பற்றி எண்ணாமல் இருக்கவே முடிவதில்லை?   நாம் நமக்காக வாழ்கிறோமா அல்லது மற்றவர்களுக்காக வாழ்கிறோமா?  நம் கவலைகளும் மகிழ்ச்சியும் நம்மை விட மற்றவர்கள் சம்பந்தப் பட்டதாகவே என் இருக்கிறது?.  நம் வாழ்வை மற்றவர்கள் கைப்பற்றிக் கொள்ள எப்படி விட்டு விட்டோம்?  நான் எனக்காகத் தான் என் இஷ்டப் படிதான் வாழ்கிறேன் என்கிறீர்களா?  அதெல்லாம் சும்மா.  இங்கே  ஏறக்குறைய அனைவருமே  மற்றவர்களுக்காகத் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.  

சரி, நான் கேட்பதற்கு பதில் சொல்லுங்கள். 

நீங்கள் புது சட்டை வாங்கலாமென்று துணிக் கடைக்குப் போகிறீர்கள்.  சட்டை உங்களுக்குப் பொருத்தமாக இருக்கிறது என்று வாங்குகிறீர்களா அல்லது இந்த சட்டையைப் போட்டுக் கொண்டு போனால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று நினைத்துப் பார்த்து வாங்குகிறீர்களா?  சொல்லுங்கள். 

கண்ணாடியில் முகம் பார்க்கும் போது, உங்கள் கண்களால் உங்கள் முகத்தைப் பார்க்கிறீர்களா, அல்லது என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று மற்றவர்கள் கண்கள் வழியாகப் பார்க்கிறீர்களா? 

 பொதுவாக பெண்கள் தன்னை ஆணின் கண்கள் வழியாகத் தான் பார்க்கிறார்கள்.  அதனால் தான் அவர்களுக்குப் பிடித்த மாதிரி அலங்கரித்துக் கொள்கிறார்கள்.  சிவப்பான பெண்ணைத் தான் பலரும் விரும்புகிறார்கள், குறிப்பாக இந்தியாவில் அப்படித் தான். அதனால் சிவப்பாக இருந்தால் அழகு என்றும் கருப்பாக  இருந்துவிட்டால் அசிங்கம் என்றும் நினைக்கிறாள். 

நம் நிறம் நமக்குப்  பிடிக்கவில்லை.  கிரீம் அல்லது பவுடர் போட்டு வெளுக்கப்  பார்க்கிறோம். 

 நம் மொழியும் நமக்குப்   பிடிக்கவில்லை.  நம் பிள்ளைகள்  மம்மி  டாடி என்று கூப்பிட்டால்  ஒரே சந்தோஷம் தான். பள்ளியில் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் என்பது கட்டாயம். அதனால் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, தலையை அடகு வைத்தாவது என் மகனை அந்தப் பள்ளியில் சேர்க்க   வேண்டும் என்று துடிக்கிறோம். உலகில் எங்கும் இந்த கேவலமான  நிலைமை இல்லை.  அந்நிய மொழி வழிக்  கல்வியை  இந்தியாவில் மட்டும் தான் பார்க்கலாம்.  

நம் நாடும் நமக்குப் பிடிப்பதில்லை.  வெளிநாட்டில் செட்டில் ஆக வேண்டும் என்பது தான் இப்போதைக்கு  பல பேருடைய கனவு.  சாப்பிடறது கூட பர்கர் பிஸ்ஸா மோமோஸ் நூடுல்ஸ் சீரில்  தான்.  அவியல் துவையல் என்ற பெயர்கள் கூட மறந்து போய் விட்டது. 

மாற்றான் வீட்டு மல்லிகையும் மணக்கும் என்று ஒரு  பழமொழி கூட இருக்கிறது, இல்லையா?

நம்மை ஏன்  இப்படி மற்றவர்கள் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறார்கள்?  

நம்மிடம் ஏன்  இந்தத்  தாழ்வு மனப்பான்மை?  

ஏனென்றால் பல நூறு ஆண்டுகளாக அந்நியரிடம்  அடிமைப் பட்டு கிடந்ததில் நம்மிடம் உள்ள எல்லாமே இழிவானது  என்றும் அவர்களிடம் உள்ள எல்லாமே சிறப்பு என்றும் நம்பி விட்டோம். அந்த நம்பிக்கை மிகவும் ஆழமாக மனதுக்குள் சென்று பதிந்து விட்டது.  நம்மால் நாம் சிறப்பானவர்கள் என்று நினைத்துப் பார்க்கவே முடியாத அளவுக்கு கண்டிசன் ஆகிவிட்டோம்.  நம் தன்னம்பிக்கை தகர்த்தெறிய பட்டு விட்டது.  நாம் பலகீனமாகிப் போனோம்.  

எப்போது நாம் பலகீனமாக  உணர்கிறோமோ, அப்போது உலகம் நமக்கு எஜமானனாகத் தெரியும்.  

~ஆச்சர்ய பிரஷாந்த் 

நம் அடிமைத் தனத்திற்குக் காரணம் நாம் நம் உள்ளதோடு தொடர்பற்றுப் போய் விட்டோம்.  நம் உள்ளம் சொல்வதை கேட்கத்  தவறி விட்டோம், அதனால் மற்றவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டிய பரிதாபம். 

ஆன்மிகம்  ஒரே வார்த்தையில் சொல்லி விடுகிறது  - கடந்து உள்ளே போ -  அதுவே கடவுள்! 

எதைக் கடந்து போக?  

நாம்  காலம் காலமாக சேர்த்து வைத்திருக்கிறோமே , அந்தக்  குப்பைகளைக் கடந்து போகச் சொல்கிறது.  

நாம் செய்ய வேண்டியது எல்லாம் வெளியிலிருந்து வந்ததை வெளியே ஒதுக்கித்  தள்ள வேண்டியது தான்.  நம்  விருப்பங்கள், கருத்துக்கள், நம்பிக்கைகள்,  தேவைகள், இலட்சியங்கள்,  பயங்கள், உணர்வுகள், எண்ணங்கள்  எல்லாம் உண்மையில்  நம்முடையதே  இல்லை, வெளியிலிருந்து வந்தவை.  உண்மையில் நாம் நமக்காக வாழவில்லை.  வேறு யாருக்காகவோ  வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 

அப்படி என்றால் எனக்கு ஏன் அது  தெரியவில்லை?

ஏனென்றால் , அது  தன்னை, "நான்" என்று சொல்லிக் கொண்டு நமக்குள் இருக்கிறது. 


~பரமேஸ்வரி .

பரம் அத்வைத்.






ஆச்சார்ய பிரசாந்த் - ஒரு அறிமுகம்




ஆச்சர்ய பிரசாந்த் அவர்களைப்  பற்றி ஆன்மீக நோக்கில் சொல்வதென்றால் அவர்  ஒரு வேதாந்த  மறைஞானி ஆவார்.  அவர் பகவத்கீதை, உபநிடதங்கள் மற்றும் மெய்ஞ்ஞானிகளின் போதனைகளுக்கு புத்துயிர் அளித்திருக்கிறார். அவரின் சொல்வன்மை  விண்ணை முட்டுவதாக இருக்கிறது. 

மேலும், சாமானிய மனிதனின் பார்வையில்   ஆச்சார்ய பிரசாந்த் அவர்கள் சுற்றுப்புற சூழல் மற்றும் உயிரினங்களின் பாதுகாவலர், இளைஞர்களின் வாழ்வில் ஒளியும் எழுச்சியும் ஊட்டுபவர்,  மேலும், அவர் உயிர்கள்  ஓவ்வொன்றின் புற  விடுதலைக்காகவும், ஆன்ம விடுதலைக்காகவும் அயராது  போராடும் ஒரு போராளி . 

ஆகாயம் பூமியின் சங்கமம்.  

Thursday, November 23, 2023

நீ இல்லாத இடம் எங்குள்ளது? ~மூஜி

 அன்புத் தந்தையே,


உன் அருளன்றி யாரும் உண்மையை அறிவரோ

முயற்சியினாலும்

பயிற்சியினாலும் 

மட்டுமே உன்னை அடைய முடியாது 

இடைவெளி அற்றவனே!


ஆணவம் பிடித்தவர்களும் 

அதிருப்தி கொண்டவர்களும் 

உன் காலம் கடந்த

எங்கெங்கிலும் 

நீக்கமற நிறைந்த முகத்தை 

காணத் தவறியவர்கள்.


யார்க்கும் 

நீ இல்லாத இடம் 

எங்குள்ளது?


~மூஜி 


Saturday, November 18, 2023

இலையில் எழுதிய பெயர்.


 டிசம்பர் மாதம். கத்தாரில் குளிர்காலம் தொடங்கி விட்டது. பூ மரங்கள், பச்சைப் புல்வெளிகள், காலை நேரத்து இளவெயிலில் நடப்பது சுகம். இன்றும் அப்படி ஒரு நாள் தான். அங்கங்கே தோட்ட வேலை செய்து கொண்டிருக்கும் ஆட்கள், நம்மை கண்டவுடன் மியாவ் என்று ஹலோ சொல்லும் பூனைக்குட்டிகள், உற்சாகமாக சறுக்கும் பூட்சுகளுடன் பறக்கும் பிலிப்பினோ இளைஞர், மலையாளி டீ கடை முன் பெஞ்சுகளில் அமர்ந்து டீ குடிக்கும் மக்கள். இரண்டு நாள் பெய்த மழையில் மரங்களிலிருந்து இலைகள் உதிர ஆரம்பித்து விட்டன. சாலையெங்கும் உதிர்ந்து கிடைக்கும் காய்ந்த இலைகள். நடந்து வந்து கொண்டிருந்த போது ஒரு காய்ந்த மஞ்சள் நிற இலை கண்ணில் பட்டது. அதில் ஏதோ எழுத்து தெரிந்ததால் உற்றுப் பார்த்தேன். Tolee என்று ஆங்கிலத்தில் எழுதப் பட்டிருந்தது. யாரோ தன் பெயரை இலையில் எழுதி இருக்கிறார்கள் போல. ஒருவேளை தன் மனத்துக்குப் பிடித்தவர்களின் பெயராகக் கூட இருக்கலாம். இப்போது அந்த இலை காய்ந்து சாலையில் விழுந்து கிடக்கிறது. பெயர் மட்டும் அழியாமல் அப்படியே. ம்ஹும்... .நான் அதை ஒரு போட்டோ எடுத்துக்கொண்டேன்.

எதற்காக நாம் நம் பெயரை ஒரு பொருள் மேல் எழுதுகிறோம்? அந்தப் பொருள் இருக்கும் வரை நம் பெயரும் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காகவா? வீட்டின் முகப்பிலும், காரின் பின் கண்ணாடியிலும் பெயர்கள் எழுத்துவதைப் பார்த்திருக்கிறேன். தூசி படிந்த கார் கண்ணாடியில் எப்போதும் யாராவது தன்னுடைய பெயரை எழுதி வைத்து விட்டுப் போய் விடுவார்கள். கடற்கரை மணலில் பெயர்கள் எழுதியது எனக்கு நினைவு இருக்கிறது. அலை வந்து அடித்துச் சென்று விடும் என்று தெரிந்தாலும் ஒரு அல்ப ஆசை.
நம் பெயர் நமக்கு மிகவும் பிரியமானதாக இருக்கிறது இல்லையா? பேனா எழுதுகிறதா என்று கடையில் கிறுக்கிப் பார்க்கும் போது கூட நம் பெயரைத் தான் எழுதி பார்க்கிறோம். நம்மை யாரும் மறந்து விடக்கூடாது என்ற தவிப்பு உள்ளே இருப்பது தெரிகிறது. நம் வாழ்க்கை ஒரு நாள் முடிந்து விடும், நாம் இல்லாமற் போய் விடுவோம் என்று உள்ளூரத் தெரிவதனால், மறைமுகமாக நம்மை நிலை நிறுத்திக் கொள்ள நாம் நினைவின்றி, unconscious ஆக செய்யும் முயற்சியோ என்று தோன்றுகிறது. பலர் கை, கால்களில் தன் பெயரை பச்சை குதிக்க கொள்கிறார்கள். பாறையில் எழுதி வைத்தாலாவது பல நாட்கள் இருக்கும், இந்த உடலில் எழுதி வைத்து என்ன பிரயோஜனம். ஒரு நாள் சாம்பலாகத்தான் போகிறது.
தான் வாழா விட்டாலும் தன் பெயர் வாழ வேண்டும் என்று தான் அரசர்கள் பெரிய பெரிய கோவில்கள் எல்லாம் கட்டினார்களோ? கோவில் சுவரில், கிரில் கம்பிகளில் எல்லாம் பெயரை எழுதி வைத்து விடுகிறார்கள். பள்ளிக்கூடத்திற்கு, வீதிக்கு, நிறுவனத்திற்கு, தோட்டத்திற்கு என்று எல்லா இடங்களிலும் நம் பெயரை பதித்து வைக்கப் பார்க்கிறோம். உண்மையில் நமக்கு சாக விருப்பமே இல்லை என்று தான் தெரிகிறது. சாகாமல் வேறு ஏதாவது ஒரு வடிவத்தில் வாழ ஆசைப் படுகிறோம். மகனுடைய பெயருக்குப் பின்னால் அப்பா, மனைவியின் பெயருக்குப் பின்னால் கணவன் இன்னும் சில வருடங்கள் வாழ்வார்கள்.
யாரோ Tolee இலையில் பெயரை எழுதி வைத்து விட்டுப் போய் விட்டான். அவனைப் பற்றி நாம் இப்போது நினைத்துக் கொண்டிருக்கிறோம். அவன் இப்போது இருக்கிறானோ இல்லையோ, நம் எண்ணத்தில் வந்து விட்டான். நாம் உடலோடு வாழாவிட்டாலும், குறைந்த பட்சம், எண்ணங்களில் நீண்ட நாட்கள் வாழ முடியும் அல்லவா? நாம் இன்னமும் சிவாஜி கணேசன் அவர்களை நினைத்துக் கொண்டிருக்கிறோம். திரைப்படம் இருக்கும் வரை அவரை யாராலும் மறக்க முடியாது. மக்களின் இதயங்களில் நீங்காத இடத்தைப் பிடித்து விட்டார். ஒரு வகையில் அவர் சாவை ஜெயித்து விட்டார் போல தோன்றுகிறது.
புகழுக்குப் பின்னால் பலரும் அலைவதின் காரணம் இப்போது புரிகிறது இல்லையா? பேர் கெட்டுவிடும் என்றால் நாம் அந்தக் காரியத்தை செய்யத் தயங்குவோம். அதனால் தான் ஒருவரை அவமானப் படுத்த வேண்டுமென்றால் அவர் பேரைக் கெடுத்து விடுகிறார்கள்.
எங்கள் நண்பர்களின் குழந்தைகளை வேண்டுமென்றே கடுப்பேத்துவதற்காக அவர்கள் பெயரை திரித்துக் கூப்பிடுவோம். சும்மா விளையாட்டுக்குத் தான். அவர்களுக்கு அப்படி ஒரு கோபம் வரும். ஜனனியை குஜனி என்றால் கோபம் வராதா பின்னே? 🙂
பெயர் நம்மை இப்படி எல்லாம் ஆட்டிப் படைப்பது தெரிந்து தான், பெயரே இல்லாத கடவுளுக்குக் கூட பெயர் கொடுத்து விட்டார்கள் போலத் தெரிகிறது. ஒன்றா இரண்டா ஆயிரம் பெயர்கள் அவனுக்கு. கடவுள் பெயர்களை ஜபம் செய்யச் சொல்லி எல்லா மதங்களும் வற்புறுத்துகின்றன. இல்லையென்றால், நம் பெயர் மேல் நமக்குள்ள மோகம் போகவே போகாது போல் தெரிகிறது. சீக்கியர்கள் இதை சுமிரன் என்று சொல்கிறார்கள். இந்துக்கள் ராமா என்று சொன்னாலே நம் பாபம் அனைத்தும் தீர்ந்திடும், நாம ஜபம் செய் என்கிறார்கள்.
உண்மையில், நாம் நன்றாக இருக்க வேண்டுமென்றால், நம் பெயரை மறந்து விட வேண்டும். நான் அம்னீசியா பற்றி சொல்லவில்லை, நம் மேல் நமக்கு உள்ள மோகம் அகல வேண்டும் என்கிறேன். நம்மை மறக்கவில்லை என்றால் நம்மால் ஓய்வெடுக்க முடியாது. தூக்கத்தில் நான் இல்லை, என் பெயரும் நினைவில்லை, அதனால் தான் என்னால் ஓய்வெடுக்க முடிகிறது.
பெயர் என்பது ஒரு கருத்து concept . என்னை எந்த ஒரு கருத்திலும் அடக்க முடியாது. என் பெயரை வைத்து என்னைப் பற்றி மற்றவர்கள் தெரிந்து கொள்வதெல்லாம் வெறும் கற்பனையே. நான் யார் என்பதையே பெயர் கொண்டு விளக்க முடியாத போது கடவுளை எப்படி பெயரால் விளக்க முடியும்? இருந்தாலும் பெயர்கள் நமக்கு சில துப்புகளைக்( clue )கொடுக்கின்றன. கட + உள் என்றாலே கடந்து உள்ளே போ என்று பொருள். அதைக் கொண்டு கடவுள் யார் என்று நாம் ஊகித்து அறிந்து கொள்ள வேண்டியது தான். இவ்வாறு, பெயர்களைக் கொண்டு பெயருக்கு அப்பால் உள்ளவனைப் பற்றி சொல்ல முயற்சித்திருக்கிறார்கள் கருணை மிகுந்தவர்கள்.
உங்களுக்கு ஒன்று தெரியுமா, தன் பெயரையே மறந்தவர்கள் பெயரைத் தான் நாம் பல்லாயிரம் வருடங்கள் கழித்தும் நினைத்துக் கொண்டுள்ளோம். தன்னை மறந்தாள், தன் நாமம் கெட்டாள் என்று ஆண்டாளை சொல்வார்கள். அவளை நாம் இன்றும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். பக்த மீராவை இன்னமும் நினைத்துப் போற்றுகிறோம். அவள் கணவன் அரசனாகப் பெயர் பெற்றவர் , அவர் பெயர் எவ்வளவு பேருக்குத் தெரியும்? ராமர், கிருஷ்ணர், புத்தர், ஜீசஸ், குரு கபீர், குரு நானக், பாரதியார், உபநிடத ரிஷிகள் எல்லோருமே தன் பெயரை மறந்தவர்கள், அவர்களை இன்னமும் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். காலம் உள்ளவரை அவர்கள் பெயர் நிலைக்கும்.
இலையில் ஆரம்பித்து, கடைசியாக இறைவனில் வந்து முடிந்து விட்டது. எங்கே ஆரம்பித்தாலும் இங்கே வந்து தான் முடிகிறது,என்ன செய்ய?

~பரமேஸ்வரி
பரம்அத்வைத்.

Thursday, November 16, 2023

குறை ஒன்றும் இல்லை

 ராம பக்தியில் உருகி உருகிப் பாடியவர் ராமதாஸ தீர்த்தர்.  அவருடைய பாடல் ஒன்று கேட்டுக் கொண்டிருந்தேன்.   "ஏ தீருக நனு"  என்ற தெலுங்குப் பாடல். அதில் ஒரு வரி மனத்தைத் தைத்தது.    

"ஏ ராமா, நான் கடந்த காலத்தில் எத்தனையோ குரூர கர்மங்களை அறியாமையில் செய்து விட்டேன். ஆனாலும் என்னிடம் குற்றம் பாராட்டாதே, தயவு செய்து என்னை என் ஏழ்மையிலிருந்து காப்பாற்று, மா மணியே."

ராமதாசர் மிகவும் ஏழ்மையில் இருந்தார். அந்நிலையில்  அவர் ராமனை நினைத்துப் பாடிய நெஞ்சை உருக்கும் பாடல் இது.   

போற்றுதலுக்குரிய பெரியோர்கள் எல்லோருமே தான் அறியாமையில் பல குரூரமான செயல்கள் செய்து விட்டதாக தயக்கமின்றி ஒப்புக்கொள்கிறார்கள்.  அவர்கள் கொலை பாதக செயல்கள் எதுவும் செய்ததாகத் தெரியவில்லை, இருந்தாலும்,  குரூரம் என்ற சொல்லை உபயோகப் படுத்த வேண்டிய அவசியம் என்னவாக இருக்கும்? எந்தச் செயலை அவர்கள் குரூரம் என்கிறார்கள்?  வேறு மாதிரி சொல்ல வேண்டுமென்றால், எதனால் நாம் குரூரமான செயல்களை செய்கிறோம்? 

நம்மைப் பொறுத்தவரை நாம் நல்லவர்கள், இந்த உலகம் தான் குரூரமானது.  நம் துன்பத்துக்கெல்லாம் காரணம் உலகம் தான் என்று கருதுகிறோம். ஆனால், உண்மை அறிந்தவர்கள் தன் நிலைமைக்கு உலகம் தான் காரணம் என்று  கை காட்டுவதில்லை, மாறாக அவர்கள் தன்னிடம் தவறு உள்ளதாகவே சொல்கிறார்கள். இது மிகப் பெரிய முரண்பாடாக இருக்கிறது இல்லையா? 

கபீர் தாசர் கூட ஒரு குறளில் கெட்டவர்கள் யார் என்று உலகம் முழுதும் தேடிப் பார்த்தேன், அப்படி ஒருவரும் கிடைக்கவில்லை. என் மனதில் தேடிப் பார்த்தால், என்னை விடக் கொடியவன் யாரும் இல்லை என்று புரிந்தது என்கிறார்.  நான் கொடியவன் என்று நம்மை நாம் எப்போதாவது நினைத்தாவது பார்த்திருக்கிறோமா? 

என் மனத்திலும், உறவுகளிலும் வன்முறை இருப்பதைப் பார்க்கிறேன்.  அதற்குக் காரணாம் உலகம் இல்லை, நான் தான் என்றால், என்னிடம் அப்படி என்ன குறை இருக்கிறது?  எது தெரியாமல், புரியாமல் நான் குரூரமான செயல்களைச் செய்கிறேன்? 

வாழ்வில் எல்லோரையும் போல் நானும் அடிபடுகிறேன். மனதில் கோபமும், வருத்தமும் இருப்பதைப் பார்க்கிறேன். அவற்றுக்குப் பின்னால் நிறைவேறாத ஆசை இருப்பதையும்  பார்க்கிறேன். என் விருப்பப்பதை இவ்வுலகம் நிறைவேற்றாத போது ஏமாற்றம் அடைகிறேன். அந்த ஏமாற்றம் வலியை ஏற்படுத்துகிறது. அந்த வலி தான்  மற்றவர்கள் மேல் வன்முறையாக வெளிப்படுகிறது.  

"அவசரத் தேவை என்று நண்பருக்கு பத்தாயிரம் ரூபாய் கொடுத்தோம். இரண்டு மாதத்தில் திருப்பித் தந்து விடுவதாக சொன்னார். அவர் நன்றி உணர்வுடன் இருப்பார் என்று நினைத்தோம். அது இல்லை என்றால் கூடப்  பரவாயில்லை, பணத்தைக்  குறிப்பிட்ட நேரத்தில் திருப்பிக் கொடுத்து விட்டால் கூட போதும். ஆனால், ஆறு மாதம் ஆகி விட்டது,  பணத்தைப் பற்றி பேச்சே எடுக்க மாட்டேன் என்கிறார்.  நம்மை கண்டால் எதிரி போல் வேறு பார்க்கிறார். சரி போனால் போகிறது கொடுக்கும் போது கொடுக்கட்டும் என்று விட்டு விடலாம் என்று நினைத்தால் நம்மைப் பற்றி நாலு பேரிடம் அவதூறாக வேறு பேசிக்கொண்டிருக்கிறார்." 

"வேலைக்காரி காசை வாங்கி கொண்டு சொல்லாமல் ஓடி விட்டாள். அவளுக்கு எத்தனை நல்லது செய்திருப்பேன். நினைத்துப் பார்த்தாளா?  நன்றி கெட்டவள்."

"சாலை விதிகளை யாரும் மதிப்பதில்லை. அவனவன் அப்பன் வீட்டு ரோடு போல் போகிறான்.  கார் மேல் வந்து இடித்து விட்டு ஒரு சாரி கூட சொல்லவில்லை, எத்தனை திமிராக போகிறான் பார்."

"வாடகைக்கு குடியிருந்தவர்கள் வீட்டை நாசக்கேடு பண்ணியது மட்டுமில்லாமல் அட்வான்ஸ் பணத்தை அப்படியே கொடுக்க வேண்டும் என்று சண்டைக்கு வேறு வருகிறார்கள்."

"கணவருக்காக, குடும்பத்துக்காக மாய்ந்து மாய்ந்து எல்லாம் செய்தாலும், உடம்பு சரியில்லாத போது ஏம்மா, எப்படி இருக்குது என்று கேட்பது கூட இல்லை, மகளாவது என்னம்மா, தலை அழுத்தி விடட்டுமா என்று கேட்கிறாளா? அதுவும் இல்லை." 

"ராத்திரி பகலாக வேலை செய்தது நான், ஆனால், சக ஊழியர் ஒருவர்  தான் செய்ததாக பொய் சொல்லி எனக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வும், ஊதிய உயர்வையும் தட்டிக் கொண்டு போய் விட்டார்." 

இவை எல்லாம் நாம் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகள். நமக்கு  நாம் விரும்பிய படி எதுவும் நடக்கவில்லையே  என்ற வருத்தம்,  கோபம். கோபத்திலிருந்து  வன்முறை.  ராமதாசர் சொல்வது போல் குரூரமான செயல்கள்.   

உலகம் நியதிப் படி நடக்கவில்லை அதனால் தான் கடுப்பாகிறேன் என்பது சரியல்ல.  உலகத்திடமிருந்து நாம் எதிர்பார்த்தோம், ஏமாந்தோம்.  அவ்வளவு தான். அதற்கு நியாயம், தர்மம் என்று பேர் சொல்லிக்கொண்டாலும், உண்மையில் என் எதிர்பார்ப்பு ஈடேறவில்லை. நாட்டில்  எத்தனையோ பேருக்கு அநீதி இழைக்கப் படுகிறது. அப்போதெல்லாம் வாயை மூடிக்கொண்டு சும்மா இருந்தோம்.  நமக்கு ஏதாவது சின்ன பிரச்சினை வந்து விட்டது என்றால் உலகம் குரூரமானது என்று பொருமுவோம் .  உலகம் அதன் போக்கில் போய்க்கொண்டுதான் இருக்கும்.  நாம் விரும்பியபடி எல்லாம்  நடக்க வேண்டும் என்று அதற்கு ஒன்றும் நிர்பந்தம் கிடையாது.  

என் அனுபவத்தில் நான் புரிந்து கொண்டது இது தான். 

என் விருப்பங்களை உலகம் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற மனோபாவத்தில் நான் எந்த செயலை செய்தாலும் அதில் வன்முறை இருப்பதைக் காண்கிறேன்.  என் விருப்பத்தை நிறைவேற்று என்று நான் உலகைக் கட்டாயப்படுத்துகிறேன், வற்புறுத்துகிறேன், பலவந்தப் படுத்துகிறேன். அது தான் வன்முறை. 

எனக்குப்  பிடிக்கிறது, என் ஆசை இது என்று ஆசையை சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம். ஆசையின் உண்மையான சொரூபம் நமக்குத் தெரியவில்லை.  அது என்னை மட்டும் அல்ல, இந்த உலகத்தையே அழித்துக் கொண்டிருக்கிறது என்பதை அறிவோமா?  உங்களுக்கு பால் டீ, காபி பிடிக்குமா?  உங்களுக்கு பிடித்ததினால் எத்தனை மாடுகள் சிறையில் அடைபட்டு செத்துச்  சீரழிந்து கொண்டிருக்கின்றன என்று தெரியுமா?  சிக்கன் பிடிக்கும் என்கிறீர்கள், கோழிப்பண்ணையில் கோழிகள் படும் அவலம் தெரியுமா?  நாம் எதையாவது விரும்பி விட்டால்,  அவற்றை அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப் படுகிறோம்.  அனுபவிப்பது என்றால் அழிப்பது, வன்முறை. நாம் குடிக்கும் பால் வன்முறை, உண்ணும் உணவு வன்முறை, உறவுமுறைகளில் வன்முறை. இந்த வன்முறைகளுக்கெல்லாம் காரணம் ஒன்று தான் -  ஆசை. 

 அன்பே கடவுள் என்கிறார்கள். நம் குடும்பம் அன்பான குடும்பம் பெருமைப் பட்டுக் கொள்கிறோம்.  குடும்பத்தில்  கடவுள் இருந்தால் இத்தனை  கஷ்டங்கள் எப்படி வரும்? நம் வீடுகளில் கடவுள் இல்லை.  நாம் அன்பை அறியவில்லை. அன்பு என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒரு உருவம் கொடுத்திருக்கிறோம்.  இனிமையாக பேசினால் அன்பு, தியாகம் செய்தால் அன்பு, நம்மையே நினைத்துக் கொண்டிருந்தால் அன்பு, நமக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்னால் அன்பு, இல்லையென்றால் வம்பு - இப்படி பலவித எதிர்பார்ப்புகளை வைத்துக் கொண்டு  நம் வாழ்க்கையையும் மற்றவர்கள் வாழ்க்கையையும் சீரழித்துக்கொண்டிருக்கிறோம். பெரும்பாலும் கணவன் மனைவி, பெற்றோர் - பிள்ளைகள்,அக்காள் தங்கை, அண்ணன் தம்பி,  நண்பர்கள், உறவினர்கள் போன்ற எல்லா நெருங்கிய உறவுமுறைகளிலும் அன்பு என்ற போர்வைக்குள் வன்முறை மறைந்துள்ளது. அதனால் தான் நம் உறவு முறைகள் எல்லாம் அச்சம், வெறுப்பு, கோபம், ஏமாற்றம், வலி, வேதனை அளிப்பதாகவே  இருக்கிறது. 

வேதாந்தத்தில் மனக்குறைக்கு ஒரு பெயர் கொடுத்திருக்கிறார்கள், அகங்காரம்.  நிறைந்த மனதுக்கு ஒரு பெயர் கொடுத்திருக்கிறார்கள், ஆத்மா. 

நாம் ஏன் குரூரமான செயல்களை செய்கிறோம் என்று சிந்தனையை ஆரம்பித்தோம் இல்லையா?  இதோ இப்படித்தான்.

அறியாமையிலிருந்து அகம்பாவம். அகம்பாவத்திலிருந்து ஆசை. நிறைவேறாத ஆசையினால் கோபம்.கோபத்தினால் அறிவு கெட்டுப்போவது.  அறிவு கெட்டுப்போவதால்  ஏற்படும் அழிவு. 

பிறவியிலிருந்தே நம்மிடம் ஏதோ குறை இருப்பதாக உணர்கிறோம். அந்தக் குறையை நிறைவு படுத்தவே ஓயாமல் ஓடிக் கொண்டிருக்கிறோம்.  உலகத்தில் உள்ள பொருட்களும், மனிதர்களும் அந்தக் குறையை தீர்ப்பார்கள் என்று நம்பிப் போகிறோம், ஆனால் எதுவும் முடிவாக, முழுமையாக நம்மை திருப்திப் படுத்துவதில்லை. எல்லாக் கதவுகளும் ஏமாற்றத்தையே தருகின்றன. எங்கும் நிம்மதி கிடைக்கவில்லை.  இந்த ஏமாற்றத்தின் விளைவே வன்முறை.  

நம் வாழ்வின் குறிக்கோள் என்ன என்று கேட்டால் ஒரே வரியில் சொல்லி விடலாம். தனித்தனி குறிக்கோள்கள் எல்லாம் இல்லை. எல்லோருக்கும் பொதுவாக ஒரே ஒரு குறிக்கோள் தான். 

  நான் சரியில்லை, எனக்கு ஏதோ குறை இருக்கிறது, என்னை முழுமை படுத்தக் கூடிய பொருள் இந்த உலகத்தில் இருக்கிறது, அதைத் தேடி அடைவது தான் என் வாழ்க்கையின் குறிக்கோள். தேடும் பொருள் வேண்டுமானால் மனிதனுக்கு மனிதன் மாறுபடலாம்.  ஆனால், தேடல் ஒன்று தான்.   

உண்மையில் நமக்கு மனக்குறை என்று ஒன்று உள்ளதா? யார் சொன்னார்கள் நாம் சரி இல்லை என்று?   இதைப் பற்றி நாம் எப்போதும் சந்தேகப்பட்டதே கிடையாது. ஒருவேளை, நான் குறைபட்டவன் என்று நம்புவது பொய்யாக இருந்தால்? அது வெறும் கற்பனையாக இருந்து விட்டால்? இப்படி எல்லாம் கேள்வி கேட்டதே இல்லையே?   என்னிடம்  குறை இருப்பதாகத் தானே அனைவரும் சொல்கிறார்கள்? 

ஒரே  குழப்பமாக இருக்கிறதா? சரி, விடுங்கள். இப்போதைக்கு  மனக்குறை  இருப்பதாகவே வைத்துக் கொள்வோம். ஏனென்றால் திருப்தி இல்லை என்பது தான் நம் யதார்த்தமான உண்மையாக இருக்கிறது இல்லையா?  

ஆன்மிகம் என்பது மனக்குறையிலிருந்து விடுதலை.  

இவ்வளவு நேரம் நாம் நம்மைப் பற்றி பல விஷயங்களை தெரிந்து கொண்டோம் அல்லவா? நம் விருப்பங்கள் நமக்கு நல்லது செய்வதில்லை என்று புரிந்தது இல்லையா? இப்போது எவ்வளவு நிம்மதியாக இருக்கிறது!!!  இந்த புரிந்து கொள்ளும் திறன் தான் ஆன்மிகம்.  ஏன் புரிந்து கொள்ள வேண்டும்?  ஏனென்றால், புரியாவிட்டால் துன்பப்படுகிறோம். துன்பம் என் சுபாவம் இல்லை, அது எனக்குப்  பிடிக்கவில்லை. புரிந்து கொள்வது என் இயல்பு. அதனால் புரிந்து கொள்ள வேண்டும்.

~பரமேஸ்வரி 

பரம்அத்வைத்.