Pages

Thursday, February 22, 2024

நான் ஏன் இப்படி இருக்கிறேன்?

 
நான் என் இப்படி இருக்கிறேன் என்று நமக்குள் அவ்வப்போது தீவிர யோசனை வரும்.  மண்டையை பிய்த்துக்கொள்வோம்.  நான் ஏன் எடுத்ததெற்கெல்லாம் கோபப்படுகிறேன்? காரணமில்லாமல் கவலைப்படுகிறேன்? தேவை இல்லாமல் சண்டை போடுகிறேன்? தவறென்று தெரிந்தே செய்கிறேன்?  வேண்டாதவர்களையே நினைத்துக்கொண்டிருக்கிறேன்.  யோசித்து யோசித்து மூளை சூடாகி, நான் ஏன் இப்படி எப்போதும் யோசித்துக்கொண்டிருக்கிறேன் என்று நொந்து போவது தான் மிச்சமாகும்.

பிறந்ததே இப்படித் தானா? நடுவில் இப்படி ஆகி விட்டோமா?  சந்தோஷமாக இருக்கவே முடியாதா? கடல் அலை எப்போது ஓய்வது? எப்போது நாம் நிம்மதியாய் இருப்பது? என்று அங்கலாய்ப்ப்பாய் இருக்கும். 

உண்மையில் நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? 

இதை புரிந்து கொள்ள வேண்டுமென்றால் ஒரு சின்ன கதை சொல்கிறேன். 

ஓவியர் ஒருவர் பல ஊர்களுக்கு பயணம் செய்து, தான் கண்ட இயற்கை காட்சிகள், விலங்குகள் , மனிதர்கள் எல்லாவற்றையும் ஓவியமாக தீட்டுவார். அப்படி ஒருநாள் அவர் பயணம் செய்து ஒரு ஊருக்கு வந்தார்.  அந்த ஊரில் அவர் மனதை ஒரு குழந்தை மிகவும் கவர்ந்தது.  நாலைந்து வயது தான் இருக்கும்.  கள்ளம் கபடமில்லாமல் பால் வடியும் அந்தக் குழந்தையின் முகத்தில் தெய்வத்தையே கண்டார்.  அந்தக்குழந்தையை ஓவியமாக தீட்ட வேண்டுமென்று எண்ணம் கொண்டார்.  உடனே வீட்டுக்கு சென்று அந்த குழந்தையின் முகத்தை வரைய ஆரம்பித்தார்.  சில நாட்களில் அந்த ஓவியம் முழுமை பெற்றது. அவர் தான் வரைந்த ஓவியங்களிலேயே மிக அருமையான படைப்பாக அதை கருதினார்.  

அவருடைய பயணம் தொடர்ந்தது.  வருடங்கள் பல உருண்டோடின.  ஒரு நாள் அவர் வீதியில் நடந்து போய்க்கொண்டிருக்கும் போது ஒரு மனிதனைப் பார்த்தார்.  அந்த மனிதனுடைய முகம் விகாரமாக இருந்தது.  அவன் கண்களில் கள்ளமும் கபடமும் குடிகொண்டிருந்தது.  இது போன்ற அருவெறுப்பான முகத்தை அவர் இதுவரை தன் அனுபவத்தில் கண்டதே இல்லை.  சாத்தானே உருவமெடுத்தது போல் தென்பட்டான்.  அவருக்கு, அவனை ஓவியமாக வரைய வேண்டுமென்று தோன்றியது.  அந்த மனிதனை அணுகி, ஐயா, உங்களை நான் ஓவியமாக வரையா ஆசைப்படுகிறேன். எனக்காக சிறிது நேரம் ஒதுக்கி என் முன் அமருவீர்களா என்று கேட்டார்.  அந்த மனிதனும் அதற்கு இணங்கினான்.  பல மணி நேரங்கள் சென்றது.  கடைசியில் அவருக்கு திருப்திகரமான வகையில் படமும் அமைந்தது.  அவர் அந்த மனிதனுக்கு நன்றி கூறினார்.  அம்மனிதன் விடை பெறுவதற்கு முன், "ஐயா, இதே போல் ஒரு ஓவியர் முப்பது வருடத்துக்கு முன் இதே ஊரில் என்னை ஓவியமாக வரைந்தார், அப்போது நான் சிறு குழந்தையாய் இருந்தேன்" என்று சொன்னான். ஓவியருக்கு ஆச்சரியமாய் இருந்தது.  இதே ஊரில் ஒரு குழந்தையின் படத்தை வரைந்தது நினைவுக்கு வந்தது.  அந்தக்குழந்தை தான் இந்த மனிதன் என்றும் தெரிந்தது. அன்று தெய்வம் போல் தெரிந்த குழந்தையா இன்று சாத்தானின் உருவம் கொண்டு நிற்கிறது?   அவரால் நம்பவே முடியவில்லை.  ஒரு நீண்ட பெருமூச்சு விட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தார்.

இந்தக் கதை புரிந்தால் நாம் என் இப்படி இருக்கிறோம் என்பதும் புரிந்து விடும். 

இரண்டிலிருந்து இருபத்தைந்துக்குள் நமக்குள் எவ்வளவோ மாறிப்போய் விட்டது.  

உங்கள் பக்கத்து வீட்டில் இரண்டு மூன்று வயதில் குழந்தைகள் இருந்தால் பொய் கொஞ்ச நேரம் அதோடு இருந்து பாருங்கள். நாமும் ஒரு காலத்தில் அப்படித் தான் இருந்திருப்போம்.  அது உங்களை கண்டு கொள்ளவே கொள்ளாது.  அதன் விருப்பப் படி தான்  இருக்கும்.  நீங்கள் உட்கார்  என்றால் உட்காராது.  ஆடு என்றால் ஆடாது.  பாடு என்றால் பாடாது. அது தன்னைப்போல ஆடும், பாடும், சிரிக்கும், விளையாடும்.  மடியில் தூக்கி வைத்தால், பிடிக்கவில்லையென்றால் கன்னத்தில் அறைந்து விடும் அல்லது உச்சா போய்விடும்.  நீங்கள் போலீஸ் காரராக இருக்கலாம். உங்களைப்பார்த்து எல்லாரும் பயப்படலாம் ஆனால் அந்தக் குழந்தை பயப்படவே பயப்படாது.  

இரண்டு வயது தாண்டிய பின் தான் கொடுமையே ஆரம்பிக்கும்.  அந்தக்குழந்தைக்கு பெற்றோர்களும் மற்றவர்களும் பாடம் சொல்லிக்கொடுக்க ஆரம்பிப்பார்கள்.  அம்மாவின் கண்ணசைவுக்கு தக்கபடி அந்தக்குழந்தை ஆட பழக்கப்படுத்தப் படும்.  சொன்ன பேச்சை கேட்டால் சாக்லேட் கொடுப்பார்கள். இல்லையென்றால் முகத்தைக் காட்டுவார்கள்.  விருந்தினர் வந்தால் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அவர்கள் முன் ஆடிக்காட்ட வேண்டும், பாடிக்காட்ட வேண்டும்.  குடும்பமே சேர்ந்து அந்தக்குழந்தைக்கு எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுக்கும்.  பிறகு ஒரு மூன்று மூன்றரை வயதில் பள்ளிக்கூடத்தில் கொண்டு சேர்ப்பார்கள்.   தினமும் தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தையை எழுப்பி மலம் போனாலும் போகாவிட்டாலும் குளிக்க வைத்து, பொருந்தாத இறுக்கமான சீருடை அணிவித்து காலில் ஷூ மாட்டி கழுத்தில் டை அணிவித்து வேனில் ஏற்றி விடுவார்கள்.  ஓடிஆடிக்கொண்டிருந்த குழந்தையை வகுப்பில் ஓரிடத்தில் அசையாமல் ஒரு மணி நேரம் தொடர்ந்து உட்கார்ந்திருக்க வேண்டுமென்பார்கள்.  பேசினால் தண்டனை கிடைக்கும்.  மணியடித்தால் சாப்பாடு.  ஆசிரியர் சொல்வதை கேட்டால் குட் பாய் என்று பாராட்டுவார்கள் இல்லையென்றால் காதை திருகுவார்கள்.  A,B,C,D என்று அந்நியமாக ஏதேதோ சொல்லித்தருவார்கள். புரியவில்லை என்றால் "POOR" என்று எழுதி அனுப்புவார்கள்.   Five Star வாங்க வேண்டும் என்று மனதில் ஆசை மூட்டுவார்கள்.  மதிப்பெண்களைக் கொண்டு அவர்களை மதிப்பிடுவார்கள்.  வெற்றியை நோக்கி கண்மண் தெரியாமல் எல்லாரும் ஓடுவதை பார்ப்பார்கள்.   

கல்வி என்ற பெயரில் கள்ளத்தனம் புகுத்தப்படும்.  சிரிப்பும் விளையாட்டும் குற்றமாக பார்க்கப்படும்.  கேள்வி கேட்டால் குட்டு விழும்.  பள்ளியை விட்டு வீடு வந்தால், அங்கே வேறொரு உலகம் கடைவிரித்துக்காத்திருக்கும்.  டிவி   உலகம்.  உலகத்தின் தொலை காட்சி சேனல்களின்  அனைத்து நிகழ்ச்சிகளும்  குழந்தைகளை குறி வைத்தே  தயாரிக்கபடுகின்றன.  இன்னமும் மூளைவளர்ச்சி கூட முழுமையடையாத வயதில்  அவர்களை  வாடிக்கையாளர்களாக்குவதற்காக, விளம்பரங்களும் நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பப் படும்.  எல்லா குப்பைகளையும் வீசி அறியக்கூடிய குப்பை கூடையாக குழந்தையின் மனம் ஆக்கப்படும்.   

இன்னும் வளர வளர மொபைலும் கையில் கிடைத்து விட்டால் சொல்லவே வேண்டாம்.  இனி அது உங்கள் குழந்தையே அல்ல, அதை இன்டர்நெட்டுக்கு தாரை வாரத்துக்கு கொடுத்துவிட்டீர்கள்.  இனி அது தான் உங்கள் குழந்தைக்கு தாயும் தகப்பனும்.  அங்கே இன்புளுயன்சர்கள் குழந்தைக்கு பாடம் சொல்லிக்கொடுப்பார்கள்.  பத்து, பனிரெண்டு வயதில் அது பார்க்கக் கூடாததெல்லாம் பார்த்திருக்கும் கேட்கக்கூடாததெல்லாம் கேட்டிருக்கும்.  பெற்றோருக்கு ஒன்றும் தெரியாது என்று நம்பும்.

பெற்றோர்களே சீரியல்களில் மூழ்கி இருக்கும் போது குழந்தைகளுக்கு அவர்கள் எப்படி அறிவை கொடுக்க முடியும் .  

பனிரெண்டு வயத்துக்குள்ளாகவே ஒரு குழந்தைக்கு அதன் ஜாதி என்னவென்று அறிவிக்கப் படுகிறது.  கடவுள் என்றால் என்னவென்றே தெரியாத குழந்தையின் மனதில் நீ இன்ன மதம் என்று எழுதப்படுகிறது.  வாழவே ஆரம்பிப்பதற்கு முன் வாழ்க்கை என்றால் என்னவென்று அறிவுறுத்தப்படுகிறது.  தேவை இல்லை என்று தூக்கி எறியவும் முடியாதபடி வலுக்கட்டாயமாக கருத்துகள் திணிக்கப்படுகிறது.  பகுத்தறிவு வளர ஆரம்பிப்பதற்கு முன்பே, வயதுக்கு வருவதற்கு முன்பே, தவிர்க்கவே முடியாத படி  குழந்தையின் அறிவு கெடுக்கப்பட்டு விடுகிறது.    

இப்படி வெளி உலகத்தால் பதப்படுத்தப்படுவதை, பழக்கப் படுத்தப்படுவதைத்  தான் ஆங்கிலத்தில் "conditioning" என்று சொல்கிறோம்.  குழந்தையின் மனதில் பல நூறு  விதைகள் விதைக்கப்பட்டு விட்டன.   உலகம் விதைத்த விதைகள் என்னென்ன தெரியுமா? போட்டி ,பொறாமை , பயம் , பொய் , பேராசை , நுகர்வுப்பசி, காம உணர்ச்சி, வன்முறை இன்னும் இது போல் பற்பல விதைகள்.  யாருடைய மனதில் எந்த விதை முளைக்குமோ, யாருக்குத் தெரியும்?  

நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்ற கேள்விக்கு பதில் புரிவது போல் உள்ளதா?  உங்கள் மனம் இப்போது உங்களுடையதே இல்லை. அது உலகத்தால் ஆட்டுவிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அது உலகால் உலகின் லாப நோக்கத்துக்காக உருமாற்றப்பட்டு விட்டது.  

நான் ஏன் கவலைப் படுகிறேன், கஷ்டப் படுகிறேன் என்று கேட்டீர்கள் தானே? 

உங்கள் மனம் விடுதலை அடையத் துடிக்கிறது.  அந்தத் துடி துடிப்பே, பதட்டமாக, பரிதவிப்பாக வெளிப்படுகிறது.  புது மொபைல் வாங்கி விட்டால் நிம்மதியாக இருப்பேன், ஒரு லட்சத்தில் வேலை கிடைத்து விட்டால் செட்டில் ஆகி விடுவேன் என்று தப்புக்கணக்கு போடாதீர்கள். எனக்கு ஏற்ற வாழ்க்கை துணை அமைந்து விட்டால் வாழ்வில் வசந்தம் என்று பகல் கனவு காணாதீர்கள்.  இப்படி கனவு காண நீங்கள் பழக்கப் படுத்தப் பட்டிருக்கிறீர்கள்.  அந்த பழக்கங்களின் தொகுப்பே உங்கள் பெர்சனாலிட்டி.  நீங்கள் உங்களை ஒரு ஆளாக நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள் அல்லவா அது காலத்தால் உங்கள் மேல் படிந்த அழுக்கு.  கழுதை பொதி சுமப்பது போல் நாம் நம் அனுபவங்களையும், நம்பிக்கைகளையும் கருத்துகளையும் சுமந்து கொண்டிருக்கிறோம்.   ஏன் கவலையாகவே இருக்கிறோம் என்றால் கழுதையாக இருக்கப் பிடிக்கவில்லை.  நாம் பட்டுப்பூச்சியாகி கூட்டுக்குள்ளிருந்து வெளிவர பரப்பறக்கிறோம். இது ஒரு பிரசவ வலி போன்றது தான்.  நம்மை மூடியிருக்கும் அழுக்கு, கழிசடைகளை விட்டு சுத்தமான மூச்சுக்காற்றை சுவாசிக்க பரிதவிக்கிறோம்.  இருண்ட குகைக்குள்ளிருந்து வெளி வந்து வெளிச்சத்தை காண கண்கள் ஏங்குகின்றன.  

எத்தனை தான் பதப்படுத்தப் பட்டாலும், நீரினால் நனைக்கப்படாத , காற்றினால் உலர்த்தப் படாத, ஆயுதத்தால் வெட்ட முடியாத உள்ளம் என்று ஒன்று உண்டு.  அந்த உள்ளொளியின் தயவால் தான் நமக்கு புரிதல் என்ற சம்பவம் நிகழ்கிறது.  புரிந்து கொள்வது ஒன்றே நம்மை பிடித்த பீடையிலிருந்து தப்பிக்கும் வழி.  புரியாமல் எதையும் ஏற்றுக்கொள்ளாதீர்கள். ஏற்கனவே ஏற்றுக்கொண்டிருப்பவைகளையும் கேள்வி கேளுங்கள்.