பிரபஞ்சமற்ற, அமைதி வடிவான - சார்பில்லாத
Friday, June 14, 2024
நிராலம்ப உபநிடதம் - ஒளி பொருந்திய பரமாத்மனை வணங்குகிறேன்.
Thursday, June 13, 2024
நிராலம்ப உபநிடதம் - குரு வணக்கம்
நிராலம்ப உபநிடதம்
கீதம் 1
குரு வணக்கம்
Wednesday, June 5, 2024
பாரதியின் மாயை பாட்டு
1. உன்னை அறிந்தவர் உன்னை கணிப்பாரோ மாயையே - மனத்
திண்மையுள்ளாரை நீ செய்வதும் ஒன்றுண்டோ மாயையே!
2. எத்தனை கோடி படை கொண்டு வந்தாலும் மாயையே - நீ
சித்தத் தெளிவென்னும் தீயின் முன் நிற்பாயோ மாயையே!
3. என்னை கெடுப்பதற்கு எண்ணமுற்றாய் கெட்ட மாயையே - நான்
உன்னை கெடுப்பது உறுதியென்றே உணர் மாயையே!
4. சாகத் துணியிற் சமுத்திரம் எம்மட்டு மாயையே - இந்தத்
தேகம் பொய்யென்றுணர் தீரரை என்செய்வாய்? மாயையே!
5. இருமை அழிந்த பின் எங்கிருப்பாய், அற்ப மாயையே! - தெளிந்
தொருமை கண்டார் முன்னம் ஓடாது நிற்பையோ மாயையே !
6. என்னிச்சை கொண்டுனை எற்றி விட வல்லேன் மாயையே - இனி
உன்னிச்சை கொண்டனக் கொன்றும் வராது காண் மாயையே!
7. யார்க்கும் குடியல்லேன் யானென்ப தோர்ந்தனன் மாயையே - உன்றன்
போர்க்கஞ்சு வேனோ பொடியாக்குவேன் உன்னை - மாயையே!
Tuesday, June 4, 2024
நிராலம்ப உபநிடதம் - அமைதி உண்டாகட்டும்!
சாந்தி பாடம்
ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி என்று மூன்று முறை உச்சரித்து நிறைவு பெறுகிறது. சாந்தி என்றால் அமைதி. மூன்று முறை அமைதியை வேண்டுகிறார்கள்.
எந்த செயலையும் தொடங்கும் போது அமைதியான மனதுடன் தொடங்க வேண்டும். மனம் சஞ்சலமாக இருந்தால் நம்மால் செயலை சரியாக செய்ய முடியாது. இப்போது நாம் உபநிடதம்ப டிக்க ஆரம்பிக்கப் போகிறோம். கவனத்துடன் பாடங்களை படிக்க வேண்டும்.
பொதுவாக மூன்று விதமான கவனக்கலைப்பு இருப்பதாக சொல்கிறார்கள். சுற்றுப்புற சூழ்நிலை, உடல் மற்றும் மனம். ஒருவேளை, நம் வீட்டில் எல்லோரும் சண்டையிட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். நம்மால் அங்கே உட்கார்ந்து படிக்க முடியாது இல்லையா? இது சூழ்நிலையால் வந்த தொந்தரவு.
நீங்கள் படிக்கலாம் என்று உட்காரும் போது தான் முட்டு வலி, வயிற்று வலி என்பது போல் வலிகள் வரும். நம் கவனமெல்லாம் உடம்பின் மேல் தான் இருக்கும். இது உடலால் ஏற்படும் தடை.
மூன்றாவது, நம் மனமே அலைபாய்ந்து கொண்டிருப்பது. நடந்ததையோ, நடக்கப்போவதையோ எண்ணிக்கொண்டு கற்பனையில் இருப்பது, எதையாவது நினைத்து வருத்தப்பட்டுக்கொண்டு இருப்பது, இதெல்லாம் மனதளவில் உள்ள தடைகள். இந்த மூன்று விதமான தடைகளும் நீங்கி, மனது அமைதியோடு இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறார்கள்.
இதற்கு, ஆழ்ந்த மற்றொரு விளக்கமும் உள்ளது. நமக்கு மூன்று விதமான துன்பங்கள் ஏற்படுகிறது. அந்த மூன்று விதமான துன்பங்களிலிருந்தும் மனம் விடுதலை பெற்று அமைதி அடைய வேண்டி பிரார்த்திக்கிறார்கள்.
மூன்று விதமான துன்பங்கள் என்னென்ன?
அறிந்தது, அறியாதது, அறிய முடியாதது என் மூன்று விதமான துன்பங்கள் நமக்கு ஏற்படுகின்றன.
சில துன்பங்களுக்கு காரணம் நமக்கு நன்றாகவே தெரியும். என் மொபைல் போன் காணாமல் போய் விட்டது, அதனால் கவலையாக இருக்கிறேன். பிசினஸில் நஷ்டம் ஆகி விட்டது. உடம்பு சரியில்லை. இந்த வகையான துன்பங்களுக்கான காரணங்கள் வெளிப்படையாக தெரிகின்றன. இவை அறிந்த துன்பங்கள்.
சில துன்பங்களுக்கு நமக்கு காரணம் அப்போதைக்கு தெரியாது. எதற்கு வந்தது, ஏன் வந்தது என்று புரியாது. நன்றாக படித்துக்கொண்டிருந்த மகன் திடீரென்று படிப்பில் ஆர்வம் இல்லாமல் சோர்ந்து சோர்ந்து படுத்துக்கொள்கிறான், சாப்பிட மாட்டேங்கிறான், எரிச்சலாக பேசுகிறான். நமக்கு ஒரே கவலையாக இருக்கும். இந்த மாற்றம் எதனால் வந்தது, என்ன காரணம் என்று புரியாது. நாமும் பல வகையில் அவனை சரிப்படுத்த முயற்சி செய்து கொண்டிருப்போம். பின்னால் ஒரு நாள், எதற்கோ ரத்த பரிசோதனை செய்து பார்க்கும் போது ஹீமோகுளோபின் ரத்தத்தில் சிவப்பணுக்கள் மிகவும் குறைந்து போனதால், ரத்தசோகை ஏற்பட்டிருக்கிறது. அதன் பக்க விளைவாக தான் இந்த மன அழுத்தம் என்று தெரிய வரும். அல்லது, ஏதோ ஒரு தகாத நட்பு ஏற்பட்டிருக்கிறது என்று தெரிய வரும். இம்மாதிரியான துன்பங்களுக்கு காரணம் உடனடியாக தெரியாது. ஆனால், தேடிப்பார்த்தால் காலம் வரும் போது தெரிந்து விடும். இவை அறியா துயரங்கள்.
மூன்றாவது, அறிய முடியாத துயரங்கள். நமக்கு எந்த குறையும் இருக்காது. வாழ்க்கை வசதி, உடல் ஆரோக்கியம், ஊரில் நல்ல பேர், வண்டி வாகனம் , நல்ல மனைவி, மக்கள் எல்லாமே இருக்கும். ஆனாலும், என்னவோ குறையாக இருப்பது போல் தோன்றும். ஏதோ இனம் புரியாத வருத்தம் மனதில் இருந்து கொண்டே இருக்கும். என்ன காரணம் என்று நம்மால் கண்டு பிடிக்கவே முடியாது. இப்படிப்பட்ட துன்பங்களை ஆன்மீக துன்பம் என்று சொல்வார்கள்.
பதினாறு வயதில் இராமனுக்கு அப்படிப்பட்ட துயரம் வந்தது. அன்பான தாய், தந்தை, அழகன், மக்களின் பிரியத்துக்குரிய இளவரசன், உயர் கல்வி கற்றவன். இவை எல்லாமே இருந்தும் இராமன் சில நாட்களாக ஏதோ பறிகொடுத்தவன் போல எதிலும் ஆர்வமில்லாமல், சாப்பிடாமல், தூங்காமல் வாழ்வில் பற்றிழந்து காணப்பட்டான். அவனுடைய இந்த மன அழுத்தத்திற்கு காரணம் என்னவென்று தந்தை தசரதரால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. ஆனால், குரு விஸ்வாமித்திரருக்கு புரிந்து விட்டது. இந்த வைராக்கியத்துக்கு காரணம் சில நாட்களுக்கு முன் தான் இராமன் புனிதப்பயணம் மேற்கொண்டு திரும்பியிருந்தார். மனித வாழ்வின் அவலங்களை நேருக்கு நேர் பார்த்தது மனதில் நீங்காத துன்பத்தை ஏற்படுத்தி விட்டது.
எல்லோரும் தான் நோய் கொடுமையை, மரணத்தை அன்றாடம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், புத்தருக்கு உண்டான துன்பம் நமக்கு ஏற்படவில்லையே! வாழ்வின் கொடுமைகளை கண்டும் காணாமல் விட்டு விடுகிறோம். சிலருக்கு மட்டுமே வலியும் வேதனையும் உண்டாகிறது. ஏன் என்று தெரியாது. இந்த துன்பம் வரவேற்க தக்கது. மனவியல் துறையில் சொல்வது போல் மனநோய் கிடையாது. நாம் பாகுபடுத்திப்பார்க்க தெரிந்து கொள்ள வேண்டும். சிரித்துக்கொண்டு சந்தோஷமாக வாழ்வில் வெற்றி பெற்றவர்கள் யாருமில்லை. துன்பம் வந்ததால் தான்
உபநிடதம் பக்கமே திரும்பிப் பார்த்திருக்கிறோம் இல்லையா?
இப்படி மூன்று விதமான வேதனைகளையும் தீர்ப்பதற்காக வந்தது தான் உபநிடதம். மூன்று விதம் என்று பொதுவாக பிரிக்கப்பட்டுள்ளது. நாம் இதை பலவிதமான துன்பங்கள் என்று வைத்துக்கொள்ளலாம். அனைத்து துன்பங்களும் நீங்கி அமைதியை இந்த உபநிடதம் தர வேண்டும் என்று குருவும் சீடனும் சேர்ந்து வணங்குகிறார்கள்.
ஓம்!
அமைதி உண்டாகட்டும்!
அமைதி உண்டாகட்டும்!
அமைதி உண்டாகட்டும்!
Sunday, June 2, 2024
நிராலம்ப உபநிடதம் - நிறைவே எஞ்சியிருக்கும்
நிறைவிலிருந்து நிறைவை நீக்கினால் நிறைவே எஞ்சியிருக்கும்.
இந்த பூமி எத்தனை பெரியது! வானில் எத்தனை கோடி நட்சத்திரங்கள்! எத்தனை பெரிய கடல், எத்தனை வகையான மீன்கள்! எத்தனை ஜீவராசிகள்!
இந்த பிரபஞ்சமே பிரமாண்டமாக தெரிகிறது. எத்தனை கோடி வருடங்களாக எல்லாம் இருக்கிறதோ நமக்கு தெரியாது. அதன் ஆரம்பமும் முடிவும் யாராலும் சொல்ல முடியாது. ஆனால், நிச்சயமாக நாம் ஒன்று சொல்ல முடியும். நாம் காணும் யாவும் காலபோக்கில் இல்லாமல் போய்விடும்.
இந்த இயற்கையில் எதுவும் நிறைவானது கிடையாது. கூடுதலும் குறைதலும் அதன் இயல்பு.
கணந்தோறும் பல்லாயிரக்கணக்கான விண்மீன்கள் எரிந்து ஒன்றுமில்லாமல் போகின்றன. முற்காலத்தில் வாழ்ந்த எத்தனையோ உயிரினங்கள் இப்போது இல்லாமல் போய் விட்டன. பல ஆறுகள் வற்றி விட்டன. சில மலைகள் பள்ளத்தாக்காகி விட்டன.
நம்முடைய தாத்தா பாட்டி கூட இப்போது இல்லை. நான்கு வீடு வைத்திருந்தோம், இப்போது ஒன்று தான் இருக்கிறது. வங்கியில் பணமும் குறைந்து கொண்டே வருகிறது. வயதாக ஆக, நினைவுத்திறன் கூட குறைந்து விடுகிறது. நம்முடைய அன்பே கூட காலப்போக்கில் மாறிவிடுகிறது. நீங்கள் முன்பு போல் என் மேல் அன்பாக இல்லை என்ற குற்றச்சாட்டை எல்லாரும் கேட்டிருப்போம். அவருக்கு புத்தி கெட்டு போச்சு, அதனால் தான் இப்படி பேசுகிறார் என்று சொல்வார்கள்.
இங்கே ரிஷியோ நிறைவைப் பற்றி பேசுகிறார். ஆச்சரியமாகவும் குழப்பமாகவும் இருக்கிறது இல்லையா? ஏனென்றால், நம் மனதுக்கு தெரிந்ததெல்லாம் கணக்கு தான். ஏழு ரூபாயில் ஐந்து போனால் இரண்டு ரூபாய் தான் மீதி இருக்கும். ஆனால், ரிஷி சொல்லும் கணக்கு வேறு மாதிரி அல்லவா இருக்கிறது! நிறைவிலிருந்து நிறைவை நீக்கினாலும் நிறைவு மிஞ்சியிருக்குமா?
X - X = X
இது எப்படி?
வீட்டில் ஐம்பதாயிரம் ரொக்கமும் இருபது பவுன் நகையும் வைத்திருந்தோம். ஒரு நாள் எப்படியோ அது களவு போய் விட்டது. போலீசில் புகார் கொடுத்தும் மீட்க முடியவில்லை. பத்திரமாக வைக்கத்தெரியாமல் போய் விட்டதே என்று வருத்தப்பட்டு என்ன பயன்? பணம் போனது போனது தான்.
Saturday, June 1, 2024
நிராலம்ப உபநிடதம் - நிறைவிலிருந்து நிறைவு உண்டாகும்
நிராலம்ப உபநிடதம்
சாந்தி பாடம்
இது நாள் வரை பட்ட கஷ்டங்களெல்லாம் போதும். இனியாவது நிறைவாய் வாழவேண்டும் என்று ஏங்கும் மனதுக்கு ஆறுதலாகவும் அதே சமயம் அதிரடியாகவும் வருகிறது - சாந்தி பாடத்தின் இரண்டாவது வரி!
"நிறைவிலிருந்தே நிறைவுண்டாகும்."
அப்படியென்றால் குறைவிலிருந்து குறையே உண்டாகும் இல்லையா? அப்படித்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
நாம் எப்படியோ நம் உலகமும் அப்படியே! நம்மிலிருந்து உண்டானது தான் உலகம். நான் நிறைவாக இருந்தால் உலகமும் நிறைவாக இருக்கும். எனக்கு ஏதோ குறை, நான் சரியில்லை என்றால் என் உலகமும் அது போலவே அமையும்.
உதாரணத்திற்கு, உங்களை நீங்கள் ஒரு குடும்பத்தை சேர்ந்தவராக நினைக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நான், என் மனைவி, இரண்டு குழந்தைகள் இவை தான் என் உலகம். நான்கு சுவர்களுக்கு உள்ளே என் உலகம், சுவருக்கு வெளியே எல்லாரும் மற்றவர்கள், வெளி ஆட்கள், அவர்களுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. மீறி மீறி போனால் நெருங்கிய சொந்த பந்தங்கள் எல்லாரும் சேர்ந்து பத்து பேருக்கு மேல் என் உலகில் இருக்க மாட்டார்கள். இந்த உலகில் குறை தான் இருக்கும். நிறைவு இருக்க முடியாது. நான் வேறு என்று எப்போது பிரிவினையை கொண்டு வந்தோமோ அப்போதே குறை பட்டு விட்டோம். நம் உலகம் குறுகிப்போய் விட்டது.
நீங்கள் ஒரு கார்பொரேட் அலுவலகத்தில் வேலை செய்கிறீர்கள் என்றால், உங்களுக்கு ஒரு அடையாள அட்டை கொடுத்திருப்பார்கள். அதை அணிந்து கொண்டு போனால் தான் உள்ளே விடுவார்கள். உள்ளே போனால் உங்கள் உலகமே வேறு. வீட்டில் அப்பா, அலுவலகத்தில் புராஜெக்ட் மேனேஜர், நண்பர்களுடன் பார்ட்டியில் இருக்கும் போது, அந்த உலகமே வேறு.
நம்மை நாம் எந்தப் பொருளோடு சேர்த்து அடையாளப்படுத்திக்கொள்கிறோமோ, அது போலவே நம் உலகம் உருவெடுக்கும். அது, ஒரு பொருளாக இருக்கலாம், மனிதராக இருக்கலாம், குணமாக இருக்கலாம், அல்லது ஒரு கருத்தாக, சித்தாந்த்தமாக கூட இருக்கலாம். மொத்தத்தில், குறைவு பட்ட ஒரு பொருள். நாம் முன்பே பார்த்தோம் - இவ்வுலகில் உள்ள அனைத்தும் அளவு, எண்ணிக்கை, கால வரையறைக்கு உட்பட்டது. எதுவும் நிரந்தரம் இல்லை. எனவே, குறைபாடானது. நாம் ஏன் நிறைவாய் இருக்க முடியவில்லை என்று இப்போது புரிந்திருக்கும். நாம் விரும்பியதோ நிலைக்க, நீடிக்க, விரிவடைய, ஆனால், நம்மை இணைத்துக்கொண்டதோ நிலைக்காத, நீடிக்காத, குறுகிய பொருட்கள். ஆயிரம் கோடிகள் வங்கியில் இருந்தாலும் அதுவும் கணக்கில் அடங்குவது தானே.
நன்றாக புரிந்து கொள்ளுங்கள் - ஏதாவது ஒன்றை கணக்கிட முடியும், அளவிட முடியும் என்றால் அந்தப்பொருள் உங்களை நிறைவு செய்யாது. இது இயற்கை நியதி!
ஆசைகளே துன்பத்துக்கு காரணம் என்பார்கள். ஆனால், அதற்கும் முன்பாக, ஒரு காரணம் இருக்கிறது. அதைபற்றி யாருமே நமக்கு சொல்லவில்லை. சும்மா நமக்கு காரணமில்லாமல் ஆசை வருவதில்லை. ஆசை வரவும் ஒரு காரணம் இருக்கிறது. நமக்குள் இருக்கும் உணர்வு அது. இன்னதென்று சொல்ல முடியாத ஒரு தவிப்பு நம் எல்லோருக்குள்ளும் இருக்கிறது. அந்த தவிப்பு நம்மை நிம்மதியாக இருக்க விடுவதில்லை. ஏதாவது செய்து அதன் துன்பத்தை தனித்தாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அது தன்னை நிறைவு செய்து கொள்வதற்காக பல பொருட்களோடு சம்பந்தம் ஏற்படுத்துகிறது. பொருட்கள் இயல்பிலேயே குறையானவை. அதனால், இந்த சம்பந்தங்கள் யாவும் அதன் குறையை தீர்ப்பதற்கு பதிலாக, அதை மேலும் மேலும் பந்தப்படுத்தி விடுகின்றன. இது நம் ஒவ்வொருவரின் கதை ஆகும். அந்த உணர்வை "சேதனா" என்றும் "விழிப்புணர்வு" என்றும் "Consciousness" என்று சொல்வார்கள்.
"நிறைவிலிருந்து நிறைவு உண்டாகும்" என்று ரிஷிகள் சொல்வதன் அர்த்தம் என்ன?
நிறைவு என்றால் நம் கண்முன் ஒரு குடம் தண்ணீரால் நிறைந்திருப்பது போலவும், வீட்டில் நகை, பணம், பொருட்கள் யாவும் நிறைந்திருப்பது போலவும், ஆசைப்பட்டதெல்லாம் அடைந்து விட்டதை போலவும் கற்பனை வரும். இப்படிப்பட்ட கற்பனைகளால் தான், பிரமைகளால் தான் இப்போது இவ்வளவு பெரிய கஷ்டத்தில் சிக்கிக்கொண்டிருக்கிறோம்.
உண்மையில் நிறைவு என்றால், புதிதாக வெளியிலிருந்தது ஏதோ ஒன்றை கொண்டு வந்து நிறைப்பது கிடையாது. ஏற்கனவே நிறைந்து கிடக்கும் குப்பைகளை ஒதுக்கி தள்ளுவதாகும்.
உதாரணத்திற்கு, ஆரோக்கியம் என்பது வெளியிலிருந்து வருவதா அல்லது நமக்கு இயல்பாக இருப்பதா? ஆரோக்கியமாக இருக்கவென்று எந்த மருந்தும் மாத்திரையும் கிடையாது. நோய்க்கு தான் மருந்தும் மாத்திரைகளும். நோய் நம்மை விட்டுப் போனால் ஆரோக்கியம் தானாக இருக்கும். சுத்தம் என்பதை ஏற்படுத்த முடியாது. குப்பைகளைத் தான் வெளியில் வீச வேண்டும். குப்பைகளை ஒழித்தால் வீடு தானாக சுத்தமாகி விடும்.
மனநிறைவும் அது போலத்தான். நீங்கள் மனநிறைவை கொண்டு வர முடியாது. ஆனால், குறைகளை களைந்தால் மனநிறைவு தானாக ஏற்படும். அப்படிப்பட்ட நிறைவான மனத்திலிருந்து நிறைவான உலகம் உருவாகும்.
நம் உலகம் இப்போது இருக்கும் நிலைக்கு காரணம், நாம் நம்மை நிறைவு படுத்த இயற்கையை அழித்த காரணம் தான். துன்பத்தில் இருப்பவனிடம் அன்பை, கருணையை எதிர்பார்க்க முடியாது. அவன் தன் துன்பத்தை தீர்த்துக்கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்வான். அதனால் தான், நம் ரிஷிகள் துன்பத்திலிருந்து விடுதலை என்பதையே வாழ்வின் குறிக்கோளாக வைத்தார்கள்.
நம் குறைகள் நீங்கி, நாமும் நிறைவான வாழ்க்கை வாழ முடியும். நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்திருக்கிறீர்கள். உங்கள் உலகத்தில் உபநிடதங்கள் வந்து விட்டன என்றால், உங்கள் வாழ்க்கை மேன்மையடைய ஆரம்பித்து விட்டது என்று தெரிந்து கொள்ளுங்கள்.



