Pages

Thursday, November 16, 2023

குறை ஒன்றும் இல்லை

 ராம பக்தியில் உருகி உருகிப் பாடியவர் ராமதாஸ தீர்த்தர்.  அவருடைய பாடல் ஒன்று கேட்டுக் கொண்டிருந்தேன்.   "ஏ தீருக நனு"  என்ற தெலுங்குப் பாடல். அதில் ஒரு வரி மனத்தைத் தைத்தது.    

"ஏ ராமா, நான் கடந்த காலத்தில் எத்தனையோ குரூர கர்மங்களை அறியாமையில் செய்து விட்டேன். ஆனாலும் என்னிடம் குற்றம் பாராட்டாதே, தயவு செய்து என்னை என் ஏழ்மையிலிருந்து காப்பாற்று, மா மணியே."

ராமதாசர் மிகவும் ஏழ்மையில் இருந்தார். அந்நிலையில்  அவர் ராமனை நினைத்துப் பாடிய நெஞ்சை உருக்கும் பாடல் இது.   

போற்றுதலுக்குரிய பெரியோர்கள் எல்லோருமே தான் அறியாமையில் பல குரூரமான செயல்கள் செய்து விட்டதாக தயக்கமின்றி ஒப்புக்கொள்கிறார்கள்.  அவர்கள் கொலை பாதக செயல்கள் எதுவும் செய்ததாகத் தெரியவில்லை, இருந்தாலும்,  குரூரம் என்ற சொல்லை உபயோகப் படுத்த வேண்டிய அவசியம் என்னவாக இருக்கும்? எந்தச் செயலை அவர்கள் குரூரம் என்கிறார்கள்?  வேறு மாதிரி சொல்ல வேண்டுமென்றால், எதனால் நாம் குரூரமான செயல்களை செய்கிறோம்? 

நம்மைப் பொறுத்தவரை நாம் நல்லவர்கள், இந்த உலகம் தான் குரூரமானது.  நம் துன்பத்துக்கெல்லாம் காரணம் உலகம் தான் என்று கருதுகிறோம். ஆனால், உண்மை அறிந்தவர்கள் தன் நிலைமைக்கு உலகம் தான் காரணம் என்று  கை காட்டுவதில்லை, மாறாக அவர்கள் தன்னிடம் தவறு உள்ளதாகவே சொல்கிறார்கள். இது மிகப் பெரிய முரண்பாடாக இருக்கிறது இல்லையா? 

கபீர் தாசர் கூட ஒரு குறளில் கெட்டவர்கள் யார் என்று உலகம் முழுதும் தேடிப் பார்த்தேன், அப்படி ஒருவரும் கிடைக்கவில்லை. என் மனதில் தேடிப் பார்த்தால், என்னை விடக் கொடியவன் யாரும் இல்லை என்று புரிந்தது என்கிறார்.  நான் கொடியவன் என்று நம்மை நாம் எப்போதாவது நினைத்தாவது பார்த்திருக்கிறோமா? 

என் மனத்திலும், உறவுகளிலும் வன்முறை இருப்பதைப் பார்க்கிறேன்.  அதற்குக் காரணாம் உலகம் இல்லை, நான் தான் என்றால், என்னிடம் அப்படி என்ன குறை இருக்கிறது?  எது தெரியாமல், புரியாமல் நான் குரூரமான செயல்களைச் செய்கிறேன்? 

வாழ்வில் எல்லோரையும் போல் நானும் அடிபடுகிறேன். மனதில் கோபமும், வருத்தமும் இருப்பதைப் பார்க்கிறேன். அவற்றுக்குப் பின்னால் நிறைவேறாத ஆசை இருப்பதையும்  பார்க்கிறேன். என் விருப்பப்பதை இவ்வுலகம் நிறைவேற்றாத போது ஏமாற்றம் அடைகிறேன். அந்த ஏமாற்றம் வலியை ஏற்படுத்துகிறது. அந்த வலி தான்  மற்றவர்கள் மேல் வன்முறையாக வெளிப்படுகிறது.  

"அவசரத் தேவை என்று நண்பருக்கு பத்தாயிரம் ரூபாய் கொடுத்தோம். இரண்டு மாதத்தில் திருப்பித் தந்து விடுவதாக சொன்னார். அவர் நன்றி உணர்வுடன் இருப்பார் என்று நினைத்தோம். அது இல்லை என்றால் கூடப்  பரவாயில்லை, பணத்தைக்  குறிப்பிட்ட நேரத்தில் திருப்பிக் கொடுத்து விட்டால் கூட போதும். ஆனால், ஆறு மாதம் ஆகி விட்டது,  பணத்தைப் பற்றி பேச்சே எடுக்க மாட்டேன் என்கிறார்.  நம்மை கண்டால் எதிரி போல் வேறு பார்க்கிறார். சரி போனால் போகிறது கொடுக்கும் போது கொடுக்கட்டும் என்று விட்டு விடலாம் என்று நினைத்தால் நம்மைப் பற்றி நாலு பேரிடம் அவதூறாக வேறு பேசிக்கொண்டிருக்கிறார்." 

"வேலைக்காரி காசை வாங்கி கொண்டு சொல்லாமல் ஓடி விட்டாள். அவளுக்கு எத்தனை நல்லது செய்திருப்பேன். நினைத்துப் பார்த்தாளா?  நன்றி கெட்டவள்."

"சாலை விதிகளை யாரும் மதிப்பதில்லை. அவனவன் அப்பன் வீட்டு ரோடு போல் போகிறான்.  கார் மேல் வந்து இடித்து விட்டு ஒரு சாரி கூட சொல்லவில்லை, எத்தனை திமிராக போகிறான் பார்."

"வாடகைக்கு குடியிருந்தவர்கள் வீட்டை நாசக்கேடு பண்ணியது மட்டுமில்லாமல் அட்வான்ஸ் பணத்தை அப்படியே கொடுக்க வேண்டும் என்று சண்டைக்கு வேறு வருகிறார்கள்."

"கணவருக்காக, குடும்பத்துக்காக மாய்ந்து மாய்ந்து எல்லாம் செய்தாலும், உடம்பு சரியில்லாத போது ஏம்மா, எப்படி இருக்குது என்று கேட்பது கூட இல்லை, மகளாவது என்னம்மா, தலை அழுத்தி விடட்டுமா என்று கேட்கிறாளா? அதுவும் இல்லை." 

"ராத்திரி பகலாக வேலை செய்தது நான், ஆனால், சக ஊழியர் ஒருவர்  தான் செய்ததாக பொய் சொல்லி எனக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வும், ஊதிய உயர்வையும் தட்டிக் கொண்டு போய் விட்டார்." 

இவை எல்லாம் நாம் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகள். நமக்கு  நாம் விரும்பிய படி எதுவும் நடக்கவில்லையே  என்ற வருத்தம்,  கோபம். கோபத்திலிருந்து  வன்முறை.  ராமதாசர் சொல்வது போல் குரூரமான செயல்கள்.   

உலகம் நியதிப் படி நடக்கவில்லை அதனால் தான் கடுப்பாகிறேன் என்பது சரியல்ல.  உலகத்திடமிருந்து நாம் எதிர்பார்த்தோம், ஏமாந்தோம்.  அவ்வளவு தான். அதற்கு நியாயம், தர்மம் என்று பேர் சொல்லிக்கொண்டாலும், உண்மையில் என் எதிர்பார்ப்பு ஈடேறவில்லை. நாட்டில்  எத்தனையோ பேருக்கு அநீதி இழைக்கப் படுகிறது. அப்போதெல்லாம் வாயை மூடிக்கொண்டு சும்மா இருந்தோம்.  நமக்கு ஏதாவது சின்ன பிரச்சினை வந்து விட்டது என்றால் உலகம் குரூரமானது என்று பொருமுவோம் .  உலகம் அதன் போக்கில் போய்க்கொண்டுதான் இருக்கும்.  நாம் விரும்பியபடி எல்லாம்  நடக்க வேண்டும் என்று அதற்கு ஒன்றும் நிர்பந்தம் கிடையாது.  

என் அனுபவத்தில் நான் புரிந்து கொண்டது இது தான். 

என் விருப்பங்களை உலகம் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற மனோபாவத்தில் நான் எந்த செயலை செய்தாலும் அதில் வன்முறை இருப்பதைக் காண்கிறேன்.  என் விருப்பத்தை நிறைவேற்று என்று நான் உலகைக் கட்டாயப்படுத்துகிறேன், வற்புறுத்துகிறேன், பலவந்தப் படுத்துகிறேன். அது தான் வன்முறை. 

எனக்குப்  பிடிக்கிறது, என் ஆசை இது என்று ஆசையை சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம். ஆசையின் உண்மையான சொரூபம் நமக்குத் தெரியவில்லை.  அது என்னை மட்டும் அல்ல, இந்த உலகத்தையே அழித்துக் கொண்டிருக்கிறது என்பதை அறிவோமா?  உங்களுக்கு பால் டீ, காபி பிடிக்குமா?  உங்களுக்கு பிடித்ததினால் எத்தனை மாடுகள் சிறையில் அடைபட்டு செத்துச்  சீரழிந்து கொண்டிருக்கின்றன என்று தெரியுமா?  சிக்கன் பிடிக்கும் என்கிறீர்கள், கோழிப்பண்ணையில் கோழிகள் படும் அவலம் தெரியுமா?  நாம் எதையாவது விரும்பி விட்டால்,  அவற்றை அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப் படுகிறோம்.  அனுபவிப்பது என்றால் அழிப்பது, வன்முறை. நாம் குடிக்கும் பால் வன்முறை, உண்ணும் உணவு வன்முறை, உறவுமுறைகளில் வன்முறை. இந்த வன்முறைகளுக்கெல்லாம் காரணம் ஒன்று தான் -  ஆசை. 

 அன்பே கடவுள் என்கிறார்கள். நம் குடும்பம் அன்பான குடும்பம் பெருமைப் பட்டுக் கொள்கிறோம்.  குடும்பத்தில்  கடவுள் இருந்தால் இத்தனை  கஷ்டங்கள் எப்படி வரும்? நம் வீடுகளில் கடவுள் இல்லை.  நாம் அன்பை அறியவில்லை. அன்பு என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒரு உருவம் கொடுத்திருக்கிறோம்.  இனிமையாக பேசினால் அன்பு, தியாகம் செய்தால் அன்பு, நம்மையே நினைத்துக் கொண்டிருந்தால் அன்பு, நமக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்னால் அன்பு, இல்லையென்றால் வம்பு - இப்படி பலவித எதிர்பார்ப்புகளை வைத்துக் கொண்டு  நம் வாழ்க்கையையும் மற்றவர்கள் வாழ்க்கையையும் சீரழித்துக்கொண்டிருக்கிறோம். பெரும்பாலும் கணவன் மனைவி, பெற்றோர் - பிள்ளைகள்,அக்காள் தங்கை, அண்ணன் தம்பி,  நண்பர்கள், உறவினர்கள் போன்ற எல்லா நெருங்கிய உறவுமுறைகளிலும் அன்பு என்ற போர்வைக்குள் வன்முறை மறைந்துள்ளது. அதனால் தான் நம் உறவு முறைகள் எல்லாம் அச்சம், வெறுப்பு, கோபம், ஏமாற்றம், வலி, வேதனை அளிப்பதாகவே  இருக்கிறது. 

வேதாந்தத்தில் மனக்குறைக்கு ஒரு பெயர் கொடுத்திருக்கிறார்கள், அகங்காரம்.  நிறைந்த மனதுக்கு ஒரு பெயர் கொடுத்திருக்கிறார்கள், ஆத்மா. 

நாம் ஏன் குரூரமான செயல்களை செய்கிறோம் என்று சிந்தனையை ஆரம்பித்தோம் இல்லையா?  இதோ இப்படித்தான்.

அறியாமையிலிருந்து அகம்பாவம். அகம்பாவத்திலிருந்து ஆசை. நிறைவேறாத ஆசையினால் கோபம்.கோபத்தினால் அறிவு கெட்டுப்போவது.  அறிவு கெட்டுப்போவதால்  ஏற்படும் அழிவு. 

பிறவியிலிருந்தே நம்மிடம் ஏதோ குறை இருப்பதாக உணர்கிறோம். அந்தக் குறையை நிறைவு படுத்தவே ஓயாமல் ஓடிக் கொண்டிருக்கிறோம்.  உலகத்தில் உள்ள பொருட்களும், மனிதர்களும் அந்தக் குறையை தீர்ப்பார்கள் என்று நம்பிப் போகிறோம், ஆனால் எதுவும் முடிவாக, முழுமையாக நம்மை திருப்திப் படுத்துவதில்லை. எல்லாக் கதவுகளும் ஏமாற்றத்தையே தருகின்றன. எங்கும் நிம்மதி கிடைக்கவில்லை.  இந்த ஏமாற்றத்தின் விளைவே வன்முறை.  

நம் வாழ்வின் குறிக்கோள் என்ன என்று கேட்டால் ஒரே வரியில் சொல்லி விடலாம். தனித்தனி குறிக்கோள்கள் எல்லாம் இல்லை. எல்லோருக்கும் பொதுவாக ஒரே ஒரு குறிக்கோள் தான். 

  நான் சரியில்லை, எனக்கு ஏதோ குறை இருக்கிறது, என்னை முழுமை படுத்தக் கூடிய பொருள் இந்த உலகத்தில் இருக்கிறது, அதைத் தேடி அடைவது தான் என் வாழ்க்கையின் குறிக்கோள். தேடும் பொருள் வேண்டுமானால் மனிதனுக்கு மனிதன் மாறுபடலாம்.  ஆனால், தேடல் ஒன்று தான்.   

உண்மையில் நமக்கு மனக்குறை என்று ஒன்று உள்ளதா? யார் சொன்னார்கள் நாம் சரி இல்லை என்று?   இதைப் பற்றி நாம் எப்போதும் சந்தேகப்பட்டதே கிடையாது. ஒருவேளை, நான் குறைபட்டவன் என்று நம்புவது பொய்யாக இருந்தால்? அது வெறும் கற்பனையாக இருந்து விட்டால்? இப்படி எல்லாம் கேள்வி கேட்டதே இல்லையே?   என்னிடம்  குறை இருப்பதாகத் தானே அனைவரும் சொல்கிறார்கள்? 

ஒரே  குழப்பமாக இருக்கிறதா? சரி, விடுங்கள். இப்போதைக்கு  மனக்குறை  இருப்பதாகவே வைத்துக் கொள்வோம். ஏனென்றால் திருப்தி இல்லை என்பது தான் நம் யதார்த்தமான உண்மையாக இருக்கிறது இல்லையா?  

ஆன்மிகம் என்பது மனக்குறையிலிருந்து விடுதலை.  

இவ்வளவு நேரம் நாம் நம்மைப் பற்றி பல விஷயங்களை தெரிந்து கொண்டோம் அல்லவா? நம் விருப்பங்கள் நமக்கு நல்லது செய்வதில்லை என்று புரிந்தது இல்லையா? இப்போது எவ்வளவு நிம்மதியாக இருக்கிறது!!!  இந்த புரிந்து கொள்ளும் திறன் தான் ஆன்மிகம்.  ஏன் புரிந்து கொள்ள வேண்டும்?  ஏனென்றால், புரியாவிட்டால் துன்பப்படுகிறோம். துன்பம் என் சுபாவம் இல்லை, அது எனக்குப்  பிடிக்கவில்லை. புரிந்து கொள்வது என் இயல்பு. அதனால் புரிந்து கொள்ள வேண்டும்.

~பரமேஸ்வரி 

பரம்அத்வைத்.



 


No comments:

Post a Comment

To maintain goodness, all comments have been set to require moderation by the Admin