Pages

Wednesday, September 25, 2024

ராம நாமம் கசக்கிறது, காசும் பணமும் இனிக்கிறது.


राम नाम कड़वा लगे, मीठे लगे दाम। 

दुविधा में दोनों गए, माया मिली न राम।।

 "ராம நாமம் கசக்கிறது, காசும் பணமும் இனிக்கிறது.

தடுமாற்றத்தில் தவற விட்டது, ராமன் மாயை இரண்டுமே!"

 ராமன் என்று கபீர் ஐயா சொல்வது, தசரதர் மகன் சீதாவின் கணவன் ராமன் பற்றி அல்ல.  ராமன் என்பது உண்மையை, சத்தியத்தை குறிக்கும் சொல்.  பரம்பொருளை அவர் ராமன் என்று அவர் அழைப்பார்.  ராம நாமம் கசக்கிறது என்றால் உண்மை கசக்கிறது என்று பொருள்.  

யாராவது, நம்மிடம் அமைதி வேண்டுமா அல்லது காசு பணம் வேண்டுமா என்று கேட்டால், எல்லோரும் காசு பணத்தை தான் தேர்ந்தெடுப்போம்.  அமைதி யாருக்கு வேண்டும்?  சுகத்தை அனுபவிக்க வேண்டும் என்று தான் எல்லாருக்கும் விருப்பம். அமைதியை தேர்ந்தெடுப்பவர்கள் மிகமிக குறைவு. ஆனால், உண்மையில், மனது அமைதியை தான் தேடிக்கொண்டிருக்கிறது.  அந்த அமைதியை அடைவதற்காகவே காலம் காலமாக தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. அது எதையாவது செய்தால், அதன் மூலம் அதற்கு ஒரு அமைதி, திருப்தி கிடைக்கவேண்டும். . ஒரு பொருளை வாங்கினால் கூட, அந்த பொருள் மனநிம்மதியை தர வேண்டும். மனிதன் கொலை செய்வது கூட, அவன் செத்தால் எனக்கு நிம்மதி என்று நினைத்து தான்.  

மனதுக்கு அமைதி மேல் அப்படியொரு வேட்கை, ஈர்ப்பு, காதல்.  அந்த அமைதிக்கு கபீர் இட்ட பெயர் தான் ராமன்.  நான் தாகம் என்றால் ராமன் தண்ணீர். நான் ஆறு என்றால், ராமன் கடல். நான் மேகம் என்றால், ராமன் வானம். மனம்  ராமனை விட்டு வேறு எங்கு செல்ல முடியும்?  

மனதுக்கு ராமன் மேல் உள்ளது காதலாக இருக்கலாம், ஆனால்,  அதன் ஆசையோ உலகின் மீது. உலக சுகங்களை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை. .  ராமனோ உலகிற்கு அப்பாற்பட்டவன், தூய்மையான உள்ளமே அவன் இருப்பிடம். ஆசையும், அமைதியும் சேர்ந்து இருக்க முடியாது.  இது தான் மனதின் துவந்தம்.  போராட்டம்.  இந்தப்போராட்டத்தில், பாவம், அது  ராமனையும் தவற விட்டு விடுகிறது, மாயையையும் தவற விட்டு விடுகிறது.  

மாயை என்பது பொய் சுகம்.  ராமனோ  பேரானந்தம். பேரானந்தமும் கிடைக்கவில்லை,  பொய்யான இன்பமும் கிடைக்கவில்லை.  மனது ஓயாமல் ஓடிக்கொண்டே இருக்கிறது, போராடிக்கொண்டே இருக்கிறது. இந்த போராட்டம் எப்போது முடிவுக்கு வரும்? இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். அப்போது தான்.  மனிதர்களுக்கு கிடைத்த மாபெரும் சக்தி, தேர்வு செய்யும் சக்தி.  அதை சரியாக பயன்படுத்தினால் இந்த போராட்டத்திலிருந்து விடுதலை கிடைக்கும்.   உண்மையா, பொய்யா?  ராமனா, மாயையா?  அமைதியா, ஆசையா? முடிவு செய்து விடுங்கள்.

Friday, June 14, 2024

நிராலம்ப உபநிடதம் - ஒளி பொருந்திய பரமாத்மனை வணங்குகிறேன்.



 பிரபஞ்சமற்ற, அமைதி வடிவான - சார்பில்லாத 

ஒளிபொருந்திய பரமாத்மாவை வணங்குகிறேன். 

குருவை வணங்கிய பின் பரமாத்மாவை வணங்குகிறார் ரிஷி.   நம்முள் இருக்கும் உயர்ந்த தத்துவமே குரு. குருவின் அருளால் நம் மனக்குறைகள் தீர்ந்து போகும். தெளிவு பிறக்கும். மிகுந்த நன்மைகள் உண்டாகும் என்று அறிந்தோம்.  பொதுவாக குருவை படகோட்டி என்று சொல்வார்கள்.  நம்மை கரை  சேர்க்கக்கூடியவர்.  அவருடைய உதவியால் தான் வாழ்க்கை என்னும் கடலை கடக்க முடியும்.  கடலைக் கடந்த பின் படகு நமக்கு தேவைப்படாது இல்லையா?   நாம் சேர வேண்டிய இடம் வந்தவுடன் படகை விட்டு இறங்கிவிட வேண்டும்.  எவ்வளவு தான் உபயோகமாக இருந்தாலும், படகு என்பது நாம் சேர வேண்டிய இடம் அல்ல.  

நாம் சேர வேண்டிய இடம் எது?  அது எங்கே இருக்கிறது?  எப்படி போக வேண்டும்?    

உங்களுக்கு  தாகமாக இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்.  வாய் வறண்டு போய் தவித்துக்கொண்டிருக்கிறீர்கள். அங்குமிங்கும் ஏதாவது கிடைக்காதா என்று தேடிக்கொண்டிருக்கிறீர்கள். 

இப்போது உங்களை கேட்கிறேன் சொல்லுங்கள் -  தண்ணீர் என்று ஒன்று உண்டா இல்லையா?  

தண்ணீர் என்று ஒன்று உள்ளது என்று உங்களால்  உறுதியாக சொல்ல முடியுமா?

தண்ணீர் என்று ஒன்று இல்லாமல் கூட போகலாம் அல்லவா? 

கண்டிப்பாக தண்ணீர் இல்லாமல் போகவே முடியாது. ஏனென்றால், உங்களுக்கு  தாகம் இருக்கிறதே!  தாகம் உண்மையானால்  தண்ணீர் இருப்பதும் உண்மையாகும்.  அது போலவே, நாம் வாழ்வில் எதையோ தேடி அலைந்து கொண்டிருக்கிறோம் என்றால், மனநிறைவு  என்ற ஒன்று இருக்கிறது என்று தானே பொருள்.  நம் தேடலே அதற்கு சாட்சி.  அந்த திருப்தியை, மனநிறைவைத்  தான் பரமாத்மா என்கிறோம்.  ஆத்மா என்று சொல்வது கூட சரி தான்.  ஆனால், ஆத்மா என்ற வார்த்தையை பொது மக்களாகிய நாம்  மிகவும் களங்கப்படுத்தி விட்டதால், ரிஷிகள் பரமாத்மா என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளார்கள்.  

எனவே,  நாம் அனைவரும் ஏதேதோ தேடி அலைவது போல் தோன்றினாலும், நமக்கு அதன் மூலமாக தேவைப்படுவது ஒன்று தான், அது, திருப்தி, நிம்மதி, மனநிறைவு.  

தேடிய பொருள் கிடைத்தது, ஆனால் ஆசை மட்டும் அடங்கவில்லையென்றால் தேடி அடைந்ததில் பயனே இல்லை.  

அந்த ஆசையற்ற தன்மை தான் பரமாத்மா.  மௌனமே அதன் மொழி.  

பிரபஞ்சம் என்றால் என்ன? 

உலகம். 

நம்மால் உணர முடியக்கூடிய அத்தனையும் பிரபஞ்சம் என்ற ஒரு சொல்லில் அடக்கி விடலாம்.  நாம் பார்த்து, தொட்டு, முகர்ந்து, கேட்டு, உணர்ந்து வெளியே அறிந்து கொள்ளக்கூடியதும், , நமக்குள் எண்ணம், உணர்வுகள்,  நினைவுகள் என்று நமக்கு உள்ளே நாம் அறிந்து கொள்ளக்கூடியவை அனைத்தும் சேர்ந்தது தான்  உலகம்.

மொத்தத்தில், அறிந்து கொள்ள முடிந்தது யாவும்  பிரபஞ்சத்துக்குள் அடக்கம்.  பரமாத்மா பிரபஞ்சமற்றது.  

இந்த பிரபஞ்சத்தில் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சார்ந்து தான் இருக்கும்.  உதாரணத்துக்கு, உங்களையும் இந்த உலகத்தையும் பிரித்தே பார்க்க முடியாது.  நீங்கள் இருக்க வேண்டுமென்றால், ஏதோ ஒரு இடத்தில் தான் இருக்க வேண்டும்.  இடம் என்று ஒன்று இல்லாமல், நீங்கள் மட்டும் தனித்து இருக்க முடியாது.  அதே போல், நீங்கள் இல்லாவிட்டால், இந்த உலகம் இருக்க முடியாது. நீங்கள் இருப்பதால் தான் உலகத்தை பார்த்து இருக்கிறது என்கிறீர்கள்.  எனவே, நீங்களும் உலகமும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கிறீர்கள்.  

பிரபஞ்சமற்ற, சாராத, அந்த ஒளிவீசும் பரமாத்மவை வணங்குவோம்!  இப்படி,  நேர்மறையாகத்தான் பரமாத்மாவை விவரிக்க முடியும்.  சுத்தம் என்பதை எப்படி நேரடியாக சொல்லி புரிய வைப்பீர்கள்?  குப்பைகள் இல்லையென்றால் சுத்தம்.  வெளிச்சம் என்றால் என்ன? இருட்டு இல்லையென்றால் வெளிச்சம்.  அது போலவே, பரமாத்மா, 

பிரபஞ்சம் அற்றது! சார்பு அற்றது!  மௌனம்! ஒளி! 

நாம் தண்ணீர் எப்படி இருக்கும் என்று கனவு காண்பதை விட, அது பற்றி புத்தகங்களில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்று  ஆராய்ச்சி செய்து கொண்டு உட்கார்ந்திருப்பதை  விட, தண்ணீர் எங்கே என்று தெரிந்து கொண்டு அதை நோக்கி பயணம் செய்வது நல்லது.  ஏனென்றால், நாம் இருக்கும் நிலையில், நாம் இருக்கும் இடத்தில் தாகமும், தவிப்புமே நம் அனுபவமாக இருக்கிறது.  நம் தாகம் தீர வேண்டுமென்றால், விசாரிக்க வேண்டும்.  எங்கே தண்ணீர் உள்ளது?  எப்படி அங்கே செல்வது?  ஒரு நல்ல குருவின்  உதவியோடு  நாம் நம்  பயணத்தை மேற்கொள்ள ஆரம்பிப்போம்.  

இந்தப்பயணம் வெளியுலகத்தை நோக்கிய பயணம் அல்ல.  நமக்குள் நம்மை நோக்கிய பயணம்.  

போகுமிடம் தொலைவிலும்  இல்லை, அருகாமையிலும் இல்லை.  

மௌனம் நம்மிலிருந்து எத்தனை தொலைவில் உள்ளது?  

அதை அடைய எவ்வளவு தூரம் போக வேண்டும்?  

இந்தக் கேள்விகளுக்கு  பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.  இப்போதைக்கு இந்தக் கேள்விகள்  உங்களுக்குள் இருக்கட்டும். 







Thursday, June 13, 2024

நிராலம்ப உபநிடதம் - குரு வணக்கம்


நிராலம்ப உபநிடதம்

கீதம்  1

குரு வணக்கம்

ஓம்!
மெய்யுணர்வாய்  ஆனந்த உருவாய் - நலம்தரும் 
குருவான சிவத்தை வணங்குகிறேன்.
பிரபஞ்சமற்ற, அமைதி வடிவான - சார்பில்லாத 
ஒளிபொருந்திய பரமாத்மாவை வணங்குகிறேன். 

சார்பில்லாததை சரணடைந்து  
சார்ந்திருத்தலை  விட்டொழித்த 
யோகியும் சன்யாசியுமான 
அவனே விடுதலை அடைகிறான்.

அமைதி வேண்டி பிரார்த்தனை செய்த பிறகு, குரு வணக்கத்துடன் தொடங்குகிறது நிராலம்ப உபநிடதம்.  அறியாமையை அகற்றும் அறிவொளியையே முதன்மையான குரு என்று உபநிடதங்கள் கூறுகின்றன.   எவ்வளவு பெரிய அறிவுரையை கேட்டாலும் , அதன் பொருள் என்னவென்று புரிந்து கொள்ளக்கூடிய ஒரு தத்துவம் நம் எல்லோருக்குள்ளும் இருக்கிறது.  அதன் இருப்பில் தான், ஆமாம், எனக்கு விளங்குகிறது,  சரி தான், என்று நாம் சொல்கிறோம்.  இந்த வாக்கியத்தை கூட, உங்களால் புரிந்து கொள்ள முடிகிறது என்றால், குரு என்ற தத்துவத்தால்(principle) தான்.  

நம்முடைய சந்தேகங்களுக்கெல்லாம் விளக்கம் வெளியிலிருந்து தான் வருகிறது என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மையில், நமக்குள்ளே உள்ள குரு தத்துவம் அனைத்தையும் அறியும் தகைமை கொண்டது.  வெளியிலிருந்து ஒரு பொருளை கேட்டாலும் கூட, அது சரியா தவறா என்று உள்ளுணர்வே அறிவிக்கிறது. அந்த உள்ளுணர்வையே குரு என்கிறோம்.  நாம் குருவைத்தேடி  எங்கும் தேடி அலைய வேண்டியதில்லை, நமக்குள்ளே இருக்கக்கூடிய  புரிந்து கொள்ளும் ஆற்றலே முதல் குரு ஆவார். அந்த குருவே மெய்யான குரு என்கிறார் உபநிடத ரிஷி. 
  

எனவே, முதலில் நாம் நமக்குள் உள்ள குருவை வணங்க வேண்டும்.  அப்படியென்றால், அந்த குரு எப்படி இருப்பார்?  மனது எல்லாவற்றிற்கும் ஒரு உருவம் கொடுக்க நினைக்கும்.  உருவமில்லாத ஒன்றை நினை என்றால் அதனால் அப்படி நினைக்க முடியாது.  யானை என்றவுடன், நம் மனக்கண் முன்னே யானை வந்து நிற்கும்.  பட்டாம்பூச்சி என்றவுடன் வண்ணமயமான சிறகுடன் ஒரு பட்டாம்பூச்சி மனதுக்குள் வந்து விடும்.  குரு என்றவுடன், ஒரு முனிவரோ, வயதான பெரியவரோ, அல்லது நம்முடைய ஆசிரியரோ ஞாபகத்துக்கு வருவார்.  உபநிடத முனிவர், குருவின் வடிவம் எப்படி இருக்கும் என்று மூன்று வார்த்தைகளில் சொல்கிறார். 

முதலில் குரு நமக்குள்ளே உள்ள ஒரு தத்துவம் என்று பார்த்தோம். 

உண்மை

இருக்கிறேன் என்ற உணர்வு,  

இயல்பு  நிலை அதை ஆனந்தம் என்றும் சொல்லலாம். 

கண்களை  மூடிக்கொண்டோ அல்லது திறந்து கொண்டோ, எல்லா எண்ணங்களையும் ஒரு  ஓரமாக வைத்துவிட்டு, ஒரே ஒரு நொடி நம்மால் சும்மா இருக்க முடியுமா?  ஒன்றுமே நினைக்காமல், வெறுமனே இருக்க முடியுமா?  ஒரே ஒரு நொடி மட்டும் தான். கண்டிப்பாக முடியும் இல்லையா?  அந்த ஒரு நொடியில், நாம் இருந்தோமா அல்லது இல்லாமல் போய் விட்டோமா?  எல்லாவற்றையும் மறந்து விட்டால் கூட,  இருக்கிறேன் என்ற உணர்வு இருந்தது இல்லையா?  அந்த ஒரு நொடியில் நமக்கு எந்த கவலையாவது இருந்தா?   அது உங்களுக்கு புதிதான ஒன்றா அல்லது எப்போதுமே நீங்கள் அப்படி தான் இருந்திருக்கிறீர்களா?  ஒரு வேளை, நீங்கள் நாளை அமெரிக்கா போய் விட்டால் அது இல்லாமல் போய் விடுமா?  எல்லா காலங்களிலும், எல்லா இடங்களிலும், மாறாமல்  இருக்கக்கூடிய உள்ளுணர்வை உங்களால் அடையாளம் காண முடிகிறதா?  எளிமையாக இருக்கிறது இல்லையா?  இயல்பானதாக இருக்கிறது இல்லையா? ஆனால், இதையே சமஸ்கிருதத்தில் சத், சித், ஆனந்தம் என்று சொன்னால் ஒன்றுமே புரியவில்லையே என்று குழம்பிப்போய் விடுவோம். என்னவோ தத்துவமெல்லாம் பேசுகிறார்கள், எனக்கு சமஸ்கிருதம் தெரியாது, என்னால் புரிந்து கொள்ளவே முடியாது என்று புத்தகத்தை  மூட்டை கட்டி வைத்து விடுவோம்.  

நமக்கு எளிமையாக நம் மொழியில் சொன்னால் புரிகிறது இல்லையா?  அவ்வளவு தான்.  

குருவின் பார்வை பட்டால் துன்பங்கள் அனைத்தும் விலகும் என்பார்கள். கை விளக்கின்  ஒளி பட்டவுடன் இருள் விலகுவது போல் குருவின் அறிவொளி பட்டவுடன் அறியாமை அகன்று விடும்.  

குரு என்பது நமக்குள் உள்ள உயர்ந்த தத்துவம்.  நம்மை வழிநடத்தும் நல்லறிவு.  அந்த நல்லறிவை துணை கொண்டே இந்த உலகம் என்னும் பெருங்கடலை நீந்திக் கடக்க முடியும். அந்த குருவுக்கு தலை வணங்குவோம். குருவே சிவம். 

குருவை பணிந்தால், வேறு யாருக்கும் பணிய  வேண்டிய கட்டாயம் வராது.  அப்படிப்பட்ட குருவை சரணடைதலே நலமாக வாழும் வழியாகும். 

வாழ்வில் நமக்கு எத்தனையோ அனுபவங்கள் ஏற்படுகின்றன.  ஆனால், நாம் அனைவரும்  அவற்றிலிருந்து பாடங்கள் கற்றுக்கொள்வதில்லை.  யாரோ ஒரு நியூட்டனுக்கு மட்டுமே புவிஈர்ப்பு விசை பற்றிய அறிவு கிடைத்தது.  யாரோ ஒரு புத்தருக்கு மட்டும் வாழ்வின் நிலையாமை புரிந்தது.  நம்முடைய அனுபவங்கள் நம்மை (wise) மாண்புடையவர்களாக ஆக்கவில்லை. எனக்கு  நல்ல குரு கிடைக்கவில்லை, அதனால் தான் நான் அறியாமையில் இருக்கிறேன் என்பது சரியல்ல. நம் அறியாமைக்கு காரணம்,  நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்று  விரும்பவே  இல்லை.  நாம் கேள்விகளே கேட்கவில்லை.  உண்மை அறிவை ஒதுக்கி விட்டு, மற்றவர்கள் கூறுவதையும்,  வழக்கத்திலுள்ளவைகளையும் அப்படியே ஏற்றுக்கொண்டு விட்டோம்.  மாணவன் அழைத்தால் தான் குரு வருவார்.  

எனக்கு தெரியாது என்று முதலில் தெரிந்து கொள்வதே அறிவதற்கு முதல் படி.  எனக்கு எல்லாம் தெரியும் என்றால், புதிதாக எதையும் கற்றுக்கொள்ளவே முடியாது. 

எதையும் அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், இது  என்ன?  எப்படி?  எங்கே? யார்?  என்று நேர்மையுடன்  கேள்விகள் கேட்டுப்பழக வேண்டும்.   அப்போது  தான் குரு தன்னை வெளிப்படுத்திக்கொள்வார்.  உள்ளே வடிவமற்றும், வெளியே வடிவத்துடனும்.   

மேலும் விளக்கமாக அடுத்த வகுப்பில் பார்ப்போம். 

















 



Wednesday, June 5, 2024

பாரதியின் மாயை பாட்டு

 




1. உன்னை அறிந்தவர் உன்னை கணிப்பாரோ மாயையே - மனத் 

திண்மையுள்ளாரை  நீ செய்வதும் ஒன்றுண்டோ மாயையே!


2. எத்தனை கோடி படை கொண்டு வந்தாலும் மாயையே - நீ 

சித்தத் தெளிவென்னும் தீயின் முன் நிற்பாயோ மாயையே!


3. என்னை கெடுப்பதற்கு எண்ணமுற்றாய் கெட்ட மாயையே - நான் 

உன்னை கெடுப்பது உறுதியென்றே உணர் மாயையே!


4. சாகத் துணியிற் சமுத்திரம் எம்மட்டு மாயையே - இந்தத் 

தேகம் பொய்யென்றுணர் தீரரை என்செய்வாய்? மாயையே!


5. இருமை அழிந்த பின் எங்கிருப்பாய், அற்ப மாயையே! - தெளிந்

தொருமை கண்டார் முன்னம் ஓடாது நிற்பையோ மாயையே !


6. என்னிச்சை கொண்டுனை எற்றி விட வல்லேன் மாயையே - இனி 

உன்னிச்சை கொண்டனக் கொன்றும் வராது காண் மாயையே!


7. யார்க்கும் குடியல்லேன் யானென்ப தோர்ந்தனன் மாயையே - உன்றன் 

போர்க்கஞ்சு வேனோ பொடியாக்குவேன் உன்னை - மாயையே!


Tuesday, June 4, 2024

நிராலம்ப உபநிடதம் - அமைதி உண்டாகட்டும்!



சாந்தி பாடம் 

ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி என்று மூன்று முறை உச்சரித்து நிறைவு பெறுகிறது. சாந்தி என்றால் அமைதி.  மூன்று முறை அமைதியை வேண்டுகிறார்கள்.

எந்த செயலையும் தொடங்கும் போது அமைதியான மனதுடன் தொடங்க வேண்டும்.  மனம் சஞ்சலமாக இருந்தால் நம்மால் செயலை சரியாக செய்ய முடியாது.  இப்போது நாம் உபநிடதம்ப டிக்க ஆரம்பிக்கப் போகிறோம். கவனத்துடன் பாடங்களை படிக்க வேண்டும்.  

பொதுவாக மூன்று விதமான கவனக்கலைப்பு இருப்பதாக சொல்கிறார்கள்.  சுற்றுப்புற சூழ்நிலை, உடல் மற்றும் மனம்.  ஒருவேளை, நம் வீட்டில் எல்லோரும் சண்டையிட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்.  நம்மால் அங்கே உட்கார்ந்து படிக்க முடியாது இல்லையா?  இது சூழ்நிலையால் வந்த தொந்தரவு.  

நீங்கள் படிக்கலாம் என்று உட்காரும் போது தான்  முட்டு வலி,  வயிற்று வலி என்பது போல் வலிகள் வரும். நம் கவனமெல்லாம்  உடம்பின் மேல் தான் இருக்கும். இது உடலால் ஏற்படும் தடை.  

மூன்றாவது, நம் மனமே அலைபாய்ந்து கொண்டிருப்பது. நடந்ததையோ, நடக்கப்போவதையோ எண்ணிக்கொண்டு கற்பனையில் இருப்பது, எதையாவது  நினைத்து வருத்தப்பட்டுக்கொண்டு இருப்பது, இதெல்லாம் மனதளவில் உள்ள தடைகள்.  இந்த மூன்று விதமான தடைகளும் நீங்கி, மனது அமைதியோடு இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறார்கள்.  

இதற்கு, ஆழ்ந்த மற்றொரு விளக்கமும் உள்ளது.  நமக்கு மூன்று விதமான துன்பங்கள் ஏற்படுகிறது. அந்த மூன்று விதமான துன்பங்களிலிருந்தும் மனம் விடுதலை பெற்று அமைதி அடைய வேண்டி பிரார்த்திக்கிறார்கள்.

மூன்று விதமான துன்பங்கள் என்னென்ன?

அறிந்தது, அறியாதது, அறிய முடியாதது என் மூன்று விதமான துன்பங்கள் நமக்கு ஏற்படுகின்றன.

சில துன்பங்களுக்கு காரணம் நமக்கு நன்றாகவே  தெரியும்.  என் மொபைல் போன் காணாமல் போய் விட்டது, அதனால் கவலையாக இருக்கிறேன்.  பிசினஸில் நஷ்டம் ஆகி விட்டது.  உடம்பு சரியில்லை.  இந்த வகையான துன்பங்களுக்கான காரணங்கள் வெளிப்படையாக தெரிகின்றன.  இவை அறிந்த துன்பங்கள். 

சில துன்பங்களுக்கு நமக்கு காரணம் அப்போதைக்கு தெரியாது.  எதற்கு வந்தது, ஏன் வந்தது என்று புரியாது.  நன்றாக படித்துக்கொண்டிருந்த  மகன் திடீரென்று படிப்பில் ஆர்வம் இல்லாமல் சோர்ந்து சோர்ந்து படுத்துக்கொள்கிறான், சாப்பிட மாட்டேங்கிறான், எரிச்சலாக பேசுகிறான். நமக்கு ஒரே கவலையாக இருக்கும். இந்த மாற்றம் எதனால் வந்தது, என்ன காரணம் என்று புரியாது.  நாமும் பல வகையில் அவனை சரிப்படுத்த முயற்சி செய்து கொண்டிருப்போம்.  பின்னால் ஒரு நாள், எதற்கோ ரத்த பரிசோதனை செய்து பார்க்கும் போது ஹீமோகுளோபின் ரத்தத்தில் சிவப்பணுக்கள் மிகவும் குறைந்து போனதால், ரத்தசோகை ஏற்பட்டிருக்கிறது. அதன் பக்க விளைவாக தான் இந்த மன அழுத்தம் என்று தெரிய வரும்.  அல்லது, ஏதோ  ஒரு தகாத நட்பு ஏற்பட்டிருக்கிறது என்று தெரிய வரும்.  இம்மாதிரியான துன்பங்களுக்கு காரணம் உடனடியாக தெரியாது.  ஆனால், தேடிப்பார்த்தால் காலம் வரும் போது தெரிந்து விடும்.  இவை அறியா துயரங்கள்.  

மூன்றாவது, அறிய முடியாத துயரங்கள்.  நமக்கு எந்த குறையும் இருக்காது. வாழ்க்கை வசதி, உடல் ஆரோக்கியம், ஊரில் நல்ல பேர், வண்டி வாகனம் , நல்ல மனைவி, மக்கள்  எல்லாமே இருக்கும்.  ஆனாலும், என்னவோ குறையாக இருப்பது போல் தோன்றும்.  ஏதோ இனம் புரியாத வருத்தம் மனதில் இருந்து கொண்டே இருக்கும்.  என்ன காரணம் என்று நம்மால் கண்டு பிடிக்கவே முடியாது.  இப்படிப்பட்ட துன்பங்களை ஆன்மீக துன்பம் என்று சொல்வார்கள்.  

பதினாறு வயதில் இராமனுக்கு அப்படிப்பட்ட துயரம் வந்தது.  அன்பான தாய், தந்தை, அழகன்,  மக்களின் பிரியத்துக்குரிய இளவரசன், உயர் கல்வி கற்றவன். இவை எல்லாமே இருந்தும் இராமன் சில நாட்களாக ஏதோ பறிகொடுத்தவன் போல எதிலும் ஆர்வமில்லாமல், சாப்பிடாமல், தூங்காமல் வாழ்வில் பற்றிழந்து காணப்பட்டான்.  அவனுடைய இந்த மன அழுத்தத்திற்கு  காரணம் என்னவென்று தந்தை தசரதரால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.  ஆனால், குரு விஸ்வாமித்திரருக்கு புரிந்து விட்டது.  இந்த வைராக்கியத்துக்கு காரணம் சில நாட்களுக்கு முன் தான் இராமன் புனிதப்பயணம் மேற்கொண்டு திரும்பியிருந்தார்.  மனித வாழ்வின் அவலங்களை நேருக்கு நேர் பார்த்தது மனதில் நீங்காத துன்பத்தை ஏற்படுத்தி விட்டது. 


எல்லோரும் தான் நோய் கொடுமையை, மரணத்தை அன்றாடம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.  ஆனால், புத்தருக்கு உண்டான துன்பம் நமக்கு ஏற்படவில்லையே!  வாழ்வின் கொடுமைகளை கண்டும் காணாமல் விட்டு விடுகிறோம். சிலருக்கு மட்டுமே  வலியும் வேதனையும் உண்டாகிறது. ஏன் என்று தெரியாது. இந்த துன்பம் வரவேற்க தக்கது.  மனவியல் துறையில் சொல்வது போல் மனநோய் கிடையாது. நாம் பாகுபடுத்திப்பார்க்க தெரிந்து கொள்ள வேண்டும்.  சிரித்துக்கொண்டு சந்தோஷமாக வாழ்வில் வெற்றி பெற்றவர்கள் யாருமில்லை.  துன்பம் வந்ததால் தான்
உபநிடதம் பக்கமே திரும்பிப் பார்த்திருக்கிறோம் இல்லையா?

இப்படி மூன்று விதமான வேதனைகளையும் தீர்ப்பதற்காக வந்தது தான் உபநிடதம்.  மூன்று விதம் என்று பொதுவாக பிரிக்கப்பட்டுள்ளது.  நாம் இதை பலவிதமான துன்பங்கள் என்று வைத்துக்கொள்ளலாம்.  அனைத்து துன்பங்களும் நீங்கி அமைதியை இந்த உபநிடதம் தர வேண்டும் என்று குருவும் சீடனும் சேர்ந்து வணங்குகிறார்கள்.  

ஓம்!

அமைதி உண்டாகட்டும்!

அமைதி உண்டாகட்டும்! 

அமைதி உண்டாகட்டும்!  




Sunday, June 2, 2024

நிராலம்ப உபநிடதம் - நிறைவே எஞ்சியிருக்கும்

 நிறைவிலிருந்து நிறைவை நீக்கினால் நிறைவே எஞ்சியிருக்கும். 

இந்த பூமி எத்தனை பெரியது! வானில் எத்தனை கோடி நட்சத்திரங்கள்! எத்தனை பெரிய கடல், எத்தனை வகையான  மீன்கள்! எத்தனை  ஜீவராசிகள்!

இந்த பிரபஞ்சமே பிரமாண்டமாக தெரிகிறது.  எத்தனை கோடி வருடங்களாக எல்லாம் இருக்கிறதோ நமக்கு தெரியாது.  அதன் ஆரம்பமும் முடிவும் யாராலும் சொல்ல முடியாது.  ஆனால், நிச்சயமாக நாம் ஒன்று சொல்ல முடியும்.  நாம் காணும் யாவும் காலபோக்கில் இல்லாமல் போய்விடும்.  

இந்த இயற்கையில் எதுவும் நிறைவானது கிடையாது.  கூடுதலும் குறைதலும் அதன் இயல்பு.  

கணந்தோறும் பல்லாயிரக்கணக்கான விண்மீன்கள் எரிந்து ஒன்றுமில்லாமல் போகின்றன.  முற்காலத்தில் வாழ்ந்த எத்தனையோ உயிரினங்கள் இப்போது இல்லாமல் போய் விட்டன.  பல ஆறுகள் வற்றி விட்டன. சில மலைகள் பள்ளத்தாக்காகி விட்டன.  

நம்முடைய தாத்தா பாட்டி  கூட இப்போது இல்லை.  நான்கு வீடு வைத்திருந்தோம், இப்போது ஒன்று தான் இருக்கிறது. வங்கியில் பணமும் குறைந்து கொண்டே வருகிறது.  வயதாக ஆக,  நினைவுத்திறன் கூட குறைந்து விடுகிறது.  நம்முடைய அன்பே கூட காலப்போக்கில் மாறிவிடுகிறது.  நீங்கள் முன்பு போல் என் மேல் அன்பாக இல்லை என்ற குற்றச்சாட்டை  எல்லாரும் கேட்டிருப்போம்.  அவருக்கு புத்தி கெட்டு போச்சு, அதனால் தான் இப்படி பேசுகிறார் என்று சொல்வார்கள்.    

இங்கே ரிஷியோ நிறைவைப்  பற்றி பேசுகிறார்.  ஆச்சரியமாகவும் குழப்பமாகவும் இருக்கிறது இல்லையா? ஏனென்றால், நம்  மனதுக்கு தெரிந்ததெல்லாம் கணக்கு தான்.  ஏழு ரூபாயில் ஐந்து போனால் இரண்டு ரூபாய்  தான் மீதி இருக்கும். ஆனால், ரிஷி சொல்லும் கணக்கு வேறு மாதிரி அல்லவா இருக்கிறது!  நிறைவிலிருந்து நிறைவை நீக்கினாலும் நிறைவு மிஞ்சியிருக்குமா?  

 X - X = X 

இது எப்படி?  

வீட்டில் ஐம்பதாயிரம்  ரொக்கமும் இருபது பவுன் நகையும் வைத்திருந்தோம். ஒரு நாள் எப்படியோ அது களவு போய் விட்டது. போலீசில் புகார் கொடுத்தும்  மீட்க முடியவில்லை.  பத்திரமாக வைக்கத்தெரியாமல் போய் விட்டதே என்று வருத்தப்பட்டு என்ன பயன்? பணம் போனது போனது தான். 

கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போம். பணமும் நகையும் வைத்திருந்த போது அது இருக்கிறது என்று நமக்கு தெரிந்தது.  ஒரு நாள் அது காணாமல் போய் விட்ட பிறகு காணாமல் போய் விட்டது என்றும் தெரிந்தது.  இந்த சம்பவத்தால் எத்தனை உறவுகள் பரீட்சைக்கு உள்ளாயின , எப்படிப்பட்ட உளைச்சல்கள் ஏற்பட்டன, இவை அத்தனையும் பார்க்க முடிந்தது. பணம், நகை, மக்கள் மேல் வைத்திருந்த நம்பிக்கை யாவும் இழந்து விட்டது தெரிந்தது.  ஆனாலும், ஒன்று மட்டும் மாறவே இல்லை. கவனித்தீர்களா?  இருக்கும் போது இருக்கிறது என்று தெரிந்து கொள்ள முடிந்தது.  இல்லாத போது இல்லை என்றும் தெரிந்து  கொள்ள முடிந்தது.  தெரிந்து கொள்தல் மட்டும் மாறவே இல்லை! அறிவது என்பது முன்பும் இருந்தது, பின்பும் இருந்தது.   

இதே போல் தான், மௌனமும்.  வீட்டுக்குள் மெளனமாக இருந்தோம். கடைவீதியில் மெளனமாக நடந்தோம்.  கோவிலிலும் மெளனமாக உட்கார்ந்திருந்தோம்.  இடங்கள் வேண்டுமானால் மாறுபடலாம்.  சின்ன இடத்தில் சின்ன மௌனம், பெரிய இடத்தில் பெரிய மௌனம் என்று மௌனத்தை அளக்க முடியுமா என்ன?  

மௌனத்தில் சிறியது, பெரியது என்று கிடையாது.  மௌனம் குறைவில்லாதது.  

நமக்குள் உண்மை,  மௌனம், அன்பு, கருணை, நேர்மை, அறிவு போல் மாறாத ஒன்று மையமாக இருக்குமானால், நிறைவான வாழ்வு வாழலாம்.  

உங்கள் வாழ்வு எதை மையமாக வைத்து சுழன்று கொண்டிருக்கிறது? உங்கள் வாழ்வில் மகத்துவம் வாய்ந்ததாக எதை வைத்துக்கொண்டிருக்கிறீர்கள்? எதற்காக வாழ்வை அர்பணித்திருக்கிறீர்கள்? அதை  அளவிட முடியுமா? அது காலத்தால் அழியக்கூடியதா?  உங்களுக்கே காரணம் புரிந்து விடும். 

"பூர்ணமத பூர்ணமிதம் பூர்னாத் பூர்ணமுதச்சதே 
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ண மேவா வசிஷ்யதே"

ஓம் சாந்தி சாந்தி சாந்தி!

மூன்று முறை அமைதி அமைதி அமைதி என்று உச்சரித்து இந்த பாடல் நிறைவடைகிறது.  அது என்ன மூன்று முறை அமைதி?  அதை நாம்  அடுத்த வகுப்பில் பார்க்கலாம். 






 

Saturday, June 1, 2024

நிராலம்ப உபநிடதம் - நிறைவிலிருந்து நிறைவு உண்டாகும்

நிராலம்ப உபநிடதம் 

சாந்தி பாடம் 

இது நாள் வரை  பட்ட கஷ்டங்களெல்லாம் போதும்.  இனியாவது நிறைவாய் வாழவேண்டும் என்று ஏங்கும் மனதுக்கு ஆறுதலாகவும் அதே சமயம் அதிரடியாகவும்  வருகிறது -  சாந்தி பாடத்தின் இரண்டாவது வரி!

"நிறைவிலிருந்தே நிறைவுண்டாகும்."

அப்படியென்றால் குறைவிலிருந்து குறையே உண்டாகும் இல்லையா? அப்படித்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். 

 நாம் எப்படியோ  நம் உலகமும் அப்படியே!   நம்மிலிருந்து உண்டானது தான் உலகம்.  நான் நிறைவாக இருந்தால் உலகமும் நிறைவாக இருக்கும். எனக்கு ஏதோ குறை, நான் சரியில்லை என்றால் என் உலகமும் அது போலவே  அமையும்.

உதாரணத்திற்கு, உங்களை நீங்கள் ஒரு குடும்பத்தை  சேர்ந்தவராக நினைக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.  நான், என் மனைவி, இரண்டு குழந்தைகள் இவை தான் என் உலகம்.  நான்கு சுவர்களுக்கு உள்ளே என் உலகம், சுவருக்கு வெளியே எல்லாரும் மற்றவர்கள், வெளி ஆட்கள், அவர்களுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை.  மீறி மீறி போனால் நெருங்கிய சொந்த பந்தங்கள் எல்லாரும் சேர்ந்து பத்து பேருக்கு மேல் என் உலகில் இருக்க மாட்டார்கள்.  இந்த உலகில் குறை தான் இருக்கும். நிறைவு இருக்க முடியாது.  நான் வேறு  என்று எப்போது  பிரிவினையை கொண்டு வந்தோமோ அப்போதே  குறை பட்டு விட்டோம். நம் உலகம் குறுகிப்போய் விட்டது. 

நீங்கள் ஒரு கார்பொரேட் அலுவலகத்தில் வேலை செய்கிறீர்கள் என்றால், உங்களுக்கு ஒரு அடையாள அட்டை கொடுத்திருப்பார்கள்.  அதை அணிந்து கொண்டு போனால் தான் உள்ளே விடுவார்கள்.  உள்ளே போனால் உங்கள் உலகமே வேறு.  வீட்டில் அப்பா, அலுவலகத்தில் புராஜெக்ட் மேனேஜர், நண்பர்களுடன் பார்ட்டியில் இருக்கும் போது,  அந்த உலகமே வேறு. 

நம்மை நாம் எந்தப் பொருளோடு  சேர்த்து அடையாளப்படுத்திக்கொள்கிறோமோ, அது போலவே நம் உலகம் உருவெடுக்கும்.  அது, ஒரு பொருளாக இருக்கலாம், மனிதராக இருக்கலாம், குணமாக இருக்கலாம், அல்லது ஒரு கருத்தாக, சித்தாந்த்தமாக  கூட இருக்கலாம்.  மொத்தத்தில், குறைவு பட்ட ஒரு பொருள்.  நாம் முன்பே பார்த்தோம் -  இவ்வுலகில் உள்ள அனைத்தும் அளவு, எண்ணிக்கை, கால வரையறைக்கு உட்பட்டது.  எதுவும் நிரந்தரம் இல்லை. எனவே, குறைபாடானது.    நாம் ஏன் நிறைவாய் இருக்க முடியவில்லை என்று இப்போது புரிந்திருக்கும்.  நாம் விரும்பியதோ  நிலைக்க, நீடிக்க, விரிவடைய, ஆனால், நம்மை இணைத்துக்கொண்டதோ நிலைக்காத, நீடிக்காத, குறுகிய பொருட்கள். ஆயிரம் கோடிகள் வங்கியில்  இருந்தாலும் அதுவும் கணக்கில் அடங்குவது தானே.  

நன்றாக புரிந்து கொள்ளுங்கள் - ஏதாவது ஒன்றை கணக்கிட முடியும், அளவிட முடியும் என்றால் அந்தப்பொருள் உங்களை நிறைவு செய்யாது. இது இயற்கை நியதி!

ஆசைகளே துன்பத்துக்கு காரணம் என்பார்கள்.  ஆனால், அதற்கும் முன்பாக,  ஒரு காரணம் இருக்கிறது.  அதைபற்றி யாருமே நமக்கு சொல்லவில்லை.  சும்மா நமக்கு காரணமில்லாமல்  ஆசை வருவதில்லை. ஆசை வரவும் ஒரு காரணம் இருக்கிறது. நமக்குள் இருக்கும் உணர்வு அது. இன்னதென்று சொல்ல முடியாத ஒரு தவிப்பு நம் எல்லோருக்குள்ளும் இருக்கிறது.  அந்த தவிப்பு நம்மை நிம்மதியாக இருக்க விடுவதில்லை.  ஏதாவது செய்து அதன் துன்பத்தை தனித்தாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது.  அது தன்னை நிறைவு செய்து கொள்வதற்காக பல பொருட்களோடு சம்பந்தம் ஏற்படுத்துகிறது.  பொருட்கள் இயல்பிலேயே குறையானவை. அதனால்,  இந்த சம்பந்தங்கள் யாவும் அதன் குறையை தீர்ப்பதற்கு பதிலாக,  அதை மேலும் மேலும் பந்தப்படுத்தி விடுகின்றன.  இது நம் ஒவ்வொருவரின் கதை ஆகும்.  அந்த உணர்வை "சேதனா" என்றும் "விழிப்புணர்வு" என்றும் "Consciousness" என்று சொல்வார்கள்.  

"நிறைவிலிருந்து நிறைவு உண்டாகும்" என்று ரிஷிகள்  சொல்வதன் அர்த்தம் என்ன?

நிறைவு என்றால் நம் கண்முன் ஒரு குடம் தண்ணீரால் நிறைந்திருப்பது போலவும், வீட்டில் நகை, பணம்,  பொருட்கள்  யாவும் நிறைந்திருப்பது  போலவும், ஆசைப்பட்டதெல்லாம் அடைந்து விட்டதை போலவும் கற்பனை வரும். இப்படிப்பட்ட கற்பனைகளால் தான், பிரமைகளால் தான் இப்போது இவ்வளவு பெரிய கஷ்டத்தில் சிக்கிக்கொண்டிருக்கிறோம். 

 உண்மையில் நிறைவு என்றால்,  புதிதாக வெளியிலிருந்தது ஏதோ ஒன்றை கொண்டு வந்து நிறைப்பது கிடையாது.  ஏற்கனவே  நிறைந்து கிடக்கும் குப்பைகளை ஒதுக்கி தள்ளுவதாகும்.   

உதாரணத்திற்கு, ஆரோக்கியம் என்பது வெளியிலிருந்து வருவதா அல்லது நமக்கு இயல்பாக இருப்பதா?  ஆரோக்கியமாக இருக்கவென்று எந்த மருந்தும் மாத்திரையும் கிடையாது.  நோய்க்கு தான் மருந்தும் மாத்திரைகளும்.  நோய் நம்மை விட்டுப் போனால் ஆரோக்கியம் தானாக இருக்கும்.   சுத்தம் என்பதை ஏற்படுத்த முடியாது.  குப்பைகளைத் தான் வெளியில் வீச வேண்டும். குப்பைகளை ஒழித்தால் வீடு தானாக  சுத்தமாகி விடும்.  

மனநிறைவும் அது போலத்தான்.  நீங்கள் மனநிறைவை கொண்டு வர முடியாது.  ஆனால், குறைகளை களைந்தால் மனநிறைவு தானாக ஏற்படும். அப்படிப்பட்ட நிறைவான மனத்திலிருந்து நிறைவான உலகம் உருவாகும்.  

நம் உலகம் இப்போது இருக்கும் நிலைக்கு காரணம், நாம் நம்மை நிறைவு படுத்த இயற்கையை அழித்த காரணம் தான்.  துன்பத்தில் இருப்பவனிடம் அன்பை, கருணையை எதிர்பார்க்க முடியாது.  அவன் தன் துன்பத்தை தீர்த்துக்கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்வான்.  அதனால் தான், நம் ரிஷிகள் துன்பத்திலிருந்து விடுதலை என்பதையே வாழ்வின் குறிக்கோளாக வைத்தார்கள்.  

நம் குறைகள் நீங்கி, நாமும் நிறைவான  வாழ்க்கை வாழ முடியும்.  நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்திருக்கிறீர்கள்.  உங்கள் உலகத்தில் உபநிடதங்கள் வந்து விட்டன என்றால், உங்கள் வாழ்க்கை மேன்மையடைய  ஆரம்பித்து விட்டது என்று தெரிந்து கொள்ளுங்கள். 








Thursday, May 30, 2024

நிராலம்ப உபநிடதம் - சாந்தி பாடம்.

 நிராலம்ப உபநிடதம் ஆரம்பம் 


முதல் பாடல்  - சாந்தி பாடம்


ஓம் பூர்ணமத பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்சதே 

பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ண மேவா வஷிஷ்யதே 


ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி!


ஓம் 

அதுவும் நிறை இதுவும் நிறை  

நிறைவிலிருந்து நிறைவுண்டானது 

நிறைவிலிருந்து  நிறைவை நீக்கினாலும் 

நிறைவே எஞ்சியிருக்கும்.


அமைதி! அமைதி! அமைதி! 


அனைத்து உபநிடதங்களும் கடவுள் வணக்கத்துடன்  தொடங்குகின்றன. அதை சாந்தி பாடம் என்பார்கள்குறிப்பிட்டு எந்த ஒரு கடவுள் பெயரோ, பரமண்டலத்தில் வாழும் பரம  பிதா என்றோ, நம்மை மீறிய ஒரு சக்தி என்றோ எந்த விதத்திலும் இறைவனை பற்றி பேசுவதில்லைஉண்மை, சத்தியம் அல்லது பிரம்மம்  என்ற வார்த்தைகளை நாம் காணலாம். இவை அனைத்தும் ஒரே பொருளில் பேசப்படுகிறதுஎனவே, உபநிடதங்கள் படிக்க கடவுள் நம்பிக்கை அவசியமில்லைகடவுள் நம்பிக்கை இல்லாவிட்டால் இன்னமும் உத்தமம் என்றே சொல்வேன்ஏனென்றால், நம்பிக்கை என்பது உண்மையை அறிவதற்கு தடையாகத்தான் இருக்கும்ஒன்றை நம்பி விட்டால், அதை கேள்வி கேட்காமல், ஆராயாமல் ஏற்றுக்கொண்டு விட்டோம் என்று ஆகிறதுஉபநிடதங்களின் முழு செயல்முறையுமே , கேள்வி கேட்டு, ஆராய்ந்து பகுத்தறிவின் துணை கொண்டு விளங்கிக்கொள்ளும் செயல் முறையாகும்ஒரு குழந்தையின் ஆர்வத்தோடு, நல்ல மாணவனின் சிரத்தையோடு, நேர்மையாக சிந்திக்க தயாராக உள்ள அனைவரையும் உபநிடதங்கள் அன்போடு  வரவேற்கின்றன.  


வாழ்வில் தான் அறிந்துகொண்ட அறிவின் சாரத்தை இரத்தின சுருக்கமாக, மனித குலம் படித்து பயன் பெறுவதர்காக பல ரிஷிகளும் இந்த பாடல்களை நமக்காக விட்டுச்சென்றிருக்கிறார்கள்இது கிடைப்பதற்கரிய மாபெரும் பொக்கிஷம்.  


நிராலம்ப என்றால் சார்ந்திருக்காமல் இருப்பது. Non - Dependency  சார்ந்திருப்பதே துன்பத்துக்கு காரணம் என்பது இந்த உபநிடதத்தின் மையக்கருத்தாகும். இதை தெளிவு படுத்தவும், நம்மை தற்சார்புடையவர்களாக வாழ வழி சொல்வதும் தான் இந்த உபநிடதத்தின்  நோக்கமாகும்


உபநிடதத்தின் முதல் பாடலே அருமருந்தாக அமைந்திருக்கிறது.  


பூரணம் என்றால் முழுமை, நிறைவு.  


அதுவும் நிறை, இதுவும் நிறை! - இப்படி தான் ஆரம்பிக்கறது நிராலம்ப உபநிடதத்தின்  சாந்தி பாடம்.


 ரிஷிகளின் மொழி கோட் வர்ட் (code word) போல் நுட்பமானதாக இருக்கும். அனைவருக்கும் விளங்காது. எனவே தொடக்கத்தில் நமக்கு இதை விளக்கி சொல்ல தகுதியான ஒரு குருவின் உதவி தேவைப்படும்பிறகு நாமே சுலபமாக படித்து புரிந்து கொண்டுவிட முடியும். அதனால் தான் இதை "மறை பொருள்" என்று சொல்கிறார்கள்


அது, இது என்றால் எது? இங்கே இருக்கும் நானும், அங்கே இருக்கும் உலகமும். அதாவது, நானும் நிறை, இவ்வுலகமும் நிறை என்கிறார்சாதாரனனமாக, நமக்கு எப்படி தோன்றுகிறதுநாம் நிறைவாக இருப்பதாக தோன்றுகிறதாஅல்லது, இந்த உலகம் தான் நிறைவாக இருப்பதாக தோன்றுகிறதாஇரண்டுமே கிடையாதுநான் குறையோடிருக்கிறேன், இந்த உலகமும் குறைபாடானது. இது தான் நம்முடைய அனுபவமாக இருக்கிறதுநாம் எப்போதுமே நிறைவாய் இருப்பதாக உணர்ந்ததில்லைநான் சரியில்லை என்பது தான் நம் ஆழமான நம்பிக்கைஅதே போல், இந்த உலகமும் சரியில்லை என்றே நினைக்கிறோம்நிறைவு என்றால், எந்தக்குற்றமும் குறையும் இல்லாமல் முழுமையாக இருப்பதுநமக்கோ குற்றம் குறை தான் வாழ்க்கையேஇந்த ரிஷியோ அதுவும் நிறை, இதுவும் நிறை என்று சொல்லி முதல் வரியிலேயே நம் நம்பிக்கையை கேள்விக்குரியதாக ஆக்குகிறார்நம்மால் நம்பவே முடியவில்லைஎன் குறைகள் தான் நன்றாக தெரிகிறதேநான் குள்ளம், அறிவில்லாதவன், சோம்பேறி,கோபக்காரன் - நான் எப்படி நிறைவாக  இருக்க முடியும்?  


இது நிறைவாய் இருந்தால் அதுவும் நிறைவே


நம்மிடம் உள்ள குறைகளே நமக்கு பெரிதாக தெரிந்தாலும்நிறைவான ஒன்றிற்காக நாம் ஒவ்வொருவரும் ஏங்கிக்கொண்டிருக்கிறோம். மனநிறைவு வேண்டும் என்று தானே எல்லா வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறோம். எதற்காக பணம் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறோம்? நிறைவாய் வாழலாம் என்று தானேஎதற்காக நிறைய படிக்கிறோம்மனநிறைவுக்காக தானேவீடு, மனைவி, மக்கள், செல்வம், பதவி, புகழ், மதிப்பு, மரியாதை, கலை, அறிவியல் எல்லாம் எதற்காகநமக்குள் ஏதோ ஒரு குறை இருக்கிறது அல்லவா, அந்த குறை நீங்கி மனம் நிறைவடைய வேண்டும் என்பதற்காக தானே!  


ரிஷி சொல்கிறார் - நீ நிறைவாக இருந்தால் உலகமும் நிறைவாக இருக்கும்.  


எப்படி?


உண்மையில் குறை என்று ஒன்று இருந்தால், அதை நிரப்புதல் கடினமான காரியம் கிடையாது. எத்தனையோ அரசர்களும், பணக்காரர்களும் , அறிவியல் ஆராய்ச்சியாளர்களும், கலைஞர்களும்இவ்வுலகில் வாழ்ந்திருக்கிறார்கள்யாராவது ஒருவராவது குறை இல்லாமல் வாழும் வழியை கண்டுபிடித்திருப்பார்கள். அப்படி யாருமே கண்டுபிடித்ததாக தெரியவில்லைகடைசி வரை ஏதாவது குறையோடே தான் இருந்திருக்கிறார்கள்நம்முடைய அனுபவத்தையே எடுத்துக்கொள்ளுங்களேன்இருபது வருடங்களுக்கு முன் நாம் ஆசைப்பட்டதெல்லாம் இப்போது ஏறக்குறைய அடைந்து விட்டோம்பைக்கில் போய்க் கொண்டிருந்தோம், இப்போது காரில் போகிறோம், வாடகை வீட்டில் இருந்தோம், இப்போது சொந்த வீட்டில் இருக்கிறோம், கையில் காசில்லாமல் மாதக்கடைசியில் கடன் வாங்குவது போய், வங்கி கணக்கில் கோடிகளை தொட்டு விட்டோம்நம் குறைகள் தீர்ந்து விட்டதா என்னநன்றாக யோசித்துப்பாருங்கள், நம் குறைகள் இன்னும் ஆழமாகி விட்டது தெரியும்கயிற்று கட்டிலில் நிலாவை பார்த்துக்கொண்டு படுத்திருந்த நிம்மதி  இப்போது ஏசி அறையில் தேக்கு மரக் கட்டிலில்  படுத்திருக்கும் போது  இல்லை.  


நாம் நம் குறைகளை தீர்த்துக்கொள்வதற்காக  இவ்வுலகில் தேடி அடைந்ததெல்லாம், மேலும் மேலும் குறைபாடே!  


பொருள் என்பதன் இலக்கணமே குறை, limitation. பொருளுக்கு  எல்லை உண்டுஅதன் எல்லையே அதன் குணம். எல்லா பொருட்களும்  நீளம், அகலம், நிறம், பண்புகாலம் என்ற எல்லைகளுக்குட்பட்டவைஅதாவது, இவ்வுலகில் உள்ள பொருட்கள் அத்தனையும் குறையானது தான்முழுமை என்று எதுவும் இருக்க முடியாதுஇந்த உலகில் உள்ள பொருட்கள், மனிதர்கள், சூழ்நிலைகள் யாவுமே அளவுக்கு உட்பட்டதுஎண்ணிக்கைக்குள் அடக்கி விடலாம்.  


குறைபட்ட மனது தன் குறையை தீர்த்துக்கொள்ள உலகில் ஏதாவது ஒரு பொருளை  நோக்கி பாய்கிறதுஅந்த பாய்ச்சலுக்கு பெயர் தான் ஆசை.   


குறையையே தன் குணமாக கொண்ட உலகப்பொருட்கள்  நிறைவை ஏற்படுத்த முடியாது


அது இயற்கை விதியின் படி சாத்தியமில்லாத ஒன்று.  


அதனால் தான் துக்கம். இதுவே துக்கம்


இந்த உடல் என்பது ஒரு பொருள்இது எல்லைக்குட்பட்டதுஇன்னும் சில வருடங்களில் இல்லாமல் போய் விடும்இந்த உடலே நான் என்று நினைப்பதால் நான் குறையானவன் என்ற நினைப்பு வருகிறதுநான் கருப்பு, நான் அழகில்லை, எனக்கு வயசாகி விட்டது, நான் ஆரோக்கியமாக இல்லை என்றெல்லாம் சொல்கிறோம்உண்மையில், உடலை "நான்" என்று நினைத்ததே குறை உணர்வை ஏற்படுத்தி விட்டதுஉடலின் குறைகள் எல்லாம் நம் குறைகள் என்று ஆகி விடுகிறதுஇதைக் குறை உணர்வு என்பது பசி போன்றதுஇதை தீர்ப்பதற்காக நாம் என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராகி விடுவோம். எத்தை தின்னா பித்தம் தெளியும் என்ற ஒரு பழமொழி இருக்கிறதில்லயா, அது போல் தான்நம் குறை உணர்வு தன்னை நிறைவு செய்து கொள்ள, உலகை நோக்கி பாய்கிறது. இதுவே ஆசை


இப்போதுள்ள  உலகை பாருங்கள். உலகம் நம் ஆசைகளின் பலிகடாவாகி (victim ) விட்டது தெரியவில்லையா?


இயல்பில் நமக்கு குறையொன்றும் இல்லைஇதை புரிந்து கொண்டால்இவ்வுலகிலும் குறைகள் இருக்காது. 


குறை என்பது உண்மையில் கிடையாதுஅது நம்முடைய கருத்தாக்கம்கற்பனை!


இந்த உலகில் எல்லாமே அளவுக்குட்பட்டது, எண்ணிக்கையில் அடங்குவதுஆனால், நம்முடைய இருத்தல் அளவுக்குட்படாததுஎவ்வளவு சம்பளம்  என்று கேட்டால் எண்ணிக்கையில் சொல்லி விடலாம், ஆனால், எவ்வளவு அன்போடு  அந்த வேலையை செய்கிறீர்கள் என்று கேட்டால் அதை அளவீடு செய்ய முடியாதுஅம்மாவை உனக்கு எவ்வளவு பிடிக்கும் என்று குழந்தையிடம் கேட்டால் அந்த குழந்தை பதில் சொல்ல தடுமாறும்நமக்கே பதில் தெரியாது, இல்லையாஅன்பை அளக்க முடியாதுஅது குறைவில்லாதது


இனி அடுத்த வரி 


"நிறைவிலிருந்தே நிறைவு உண்டாகிறது."