காலில் மிதிபடும் துரும்பென்று எவரையும் இழிவாய் எண்ணாதே!
பறந்து வந்து ஓர் நாள் கண்ணில் விழுந்தால் வலியோ தாங்காதே!
तिनका कबहुँ ना निंदिये, जो पाँव तले होय ।
कबहुँ उड़ आँखो पड़े, पीड गहरी होय ॥
சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்று தமிழில் ஒரு பழமொழி உள்ளது. சிறிய துரும்பு தானே என்று தூக்கி எறிந்துவிடாதே, அதுவும் உனக்கு பல் குத்த உதவும், எனவே தாழ்ந்தவர் என்று எவரையும் ஒதுக்காதே. அவர்களாலும் நன்மை உண்டு என்று பொருள்.
காலடியில் கிடக்கும் துரும்பு தானே என்று ஏளனமாக நினைக்காதே. ஒருவேளை, அது பறந்து வந்து உன் கண்ணில் விழுந்தால், அதன் வலி மிகவும் ஆழமாக இருக்கும் என்கிறார்.
பொதுவாக நாம் நம்மை விட ஏதாவது ஒரு விதத்தில் குறைந்தவர்களை துரும்பைப் போல கேவலமாகத் தான் மதிக்கிறோம். வேலைக்காரி, கூலித் தொழிலாளர்கள், வீதி கூட்டுபவர்கள், டிரைவர்கள், ஏழைகள் போன்றவர்களை நாம் கௌரவமாக நடத்துவதேயில்லை. இவர்கள் நம்மை என்ன செய்து விடப் போகிறார்கள் என்ற இறுமாப்பு காரணமாக இருக்கலாம். நம்முடைய குழந்தைகளைக் கூட பலசமயம் சிறு துரும்பாகத்தான் நடத்தி விடுகிறோம். குழந்தைகள் தானே, நம்மை எதிர்த்துப் பேச முடியுமா? நம்மை விட்டுப் போய்விடத்தான் முடியுமா? அதனால், நம்முடைய எல்லா வன்மங்களையும் அவர்கள் மேல் தாராளமாகக் காட்டுவோம். மனைவியை துரும்பாக மதிக்கும் ஆண்கள் அநேகம். அவர்களை அண்டி இருக்கிறாள் என்ற ஒரே காரணத்தால், அவளை கேவலமாக நடத்துவார்கள்.
பொதுவாக நாம் நம்மை விட ஏதாவது ஒரு விதத்தில் குறைந்தவர்களை துரும்பைப் போல கேவலமாகத் தான் மதிக்கிறோம். வேலைக்காரி, கூலித் தொழிலாளர்கள், வீதி கூட்டுபவர்கள், டிரைவர்கள், ஏழைகள் போன்றவர்களை நாம் கௌரவமாக நடத்துவதேயில்லை. இவர்கள் நம்மை என்ன செய்து விடப் போகிறார்கள் என்ற இறுமாப்பு காரணமாக இருக்கலாம். நம்முடைய குழந்தைகளைக் கூட பலசமயம் சிறு துரும்பாகத்தான் நடத்தி விடுகிறோம். குழந்தைகள் தானே, நம்மை எதிர்த்துப் பேச முடியுமா? நம்மை விட்டுப் போய்விடத்தான் முடியுமா? அதனால், நம்முடைய எல்லா வன்மங்களையும் அவர்கள் மேல் தாராளமாகக் காட்டுவோம். மனைவியை துரும்பாக மதிக்கும் ஆண்கள் அநேகம். அவர்களை அண்டி இருக்கிறாள் என்ற ஒரே காரணத்தால், அவளை கேவலமாக நடத்துவார்கள்.
உங்களுக்கும் வயதாகும். முதுமை வரும். கை, கால் சோர்வடையும். நோய் வாய்ப்படுவீர்கள். அப்போது, அவர்கள் பெரியவர்களாகி இருப்பார்கள். நீங்கள் துரும்பென்று மதித்தவர்கள் உங்கள் கண்ணுக்குள் நுழைந்து உறுத்துவார்கள். உங்களால் வலி தாள முடியாது. பல பெண்கள், ஆண்கள் ரிட்டையர் ஆகும் வரை எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டிருப்பார்கள். கணவர் ரிட்டையர் ஆன பின், பிள்ளைகளிடமிருந்து பணம் வர ஆரம்பித்து விட்டால் போதும், அவர்கள் கை ஓங்கிவிடும். கண்ணின் இமை போல் இருந்தவள், கண்ணில் முள்ளாக மாறி குத்த ஆரம்பித்து விடுவாள்.
துப்புரவுத் தொழிலாளர்களை நாம் பெரிதாக மதித்ததில்லை. ஆனால், கொரோனா சமயத்தில், அவர்களுக்கு எப்படிப் பட்ட அதிகாரம் கிடைத்தது என்று நமக்குத் தெரியும். நீங்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், அவர்கள் நினைத்தால் உங்களைக் காப்பாற்றவும் முடியும், கட்டி இழுத்துக் கொண்டு போய் கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில் தள்ளி விடவும் முடியும். உங்களை வீட்டோடு தனிமைப் படுத்தி விடவும் முடியும். நடு வழியில் நிற்க வைத்து உங்களை பரிசோதிக்க முடியும்.
சிறு துரும்பென்று யாரையும் அவமரியாதை செய்யக் கூடாது. அவர்களுக்கென்று ஒரு காலம் வரும் போது அவர்களால் மிகுந்த வேதனையை அனுபவிக்க நேரிடும்.
இன்னும் நுட்பமான முறையில் பார்த்தால், துரும்பு என்பதை எண்ணங்களோடு தொடர்பு படுத்திப் பார்க்கலாம். எல்லா இடங்களிலிருந்தும் எண்ணங்கள் நம் மனதிற்குள் புகுந்து விடுகின்றன தூசியைப் போல். அப்பா சொன்னது, அம்மா சொன்னது, சினிமாவில் பார்த்தது, டிவி யில் கேட்டது, பேஸ் புக் போன்ற வலைத்தளங்களில் பார்த்தது, மூதாதையர் சொன்னது என்று குப்பை போல் எண்ணங்கள் நமக்குள் வந்து குமிந்து கொண்டிருக்கிறது. இவை சாதாரண எண்ணங்கள் தானே என்று விட்டு விட்டால், அவை நமக்குள் ஊடுருவி நம் வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விடும்.
மந்தரை சொன்ன சொல்லைக் கேட்டதால், கைகேயியின் மனதில் தவறான எண்ணம் புகுந்தது. அது அவள் கணவனின் உயிரையும் குடித்தது. மாய மான் வேண்டும் என்ற எண்ணத்தால் சீதா பட்ட கஷ்டங்கள் எவ்வளவு என்று நமக்குத் தெரியும்.
எண்ணங்கள் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும், அவற்றிற்கு யானை பலம் உண்டு. மனதில் என்ன எண்ணம் ஓடிக்கொண்டிருக்கிறது என்று கவனிக்க வேண்டும். எண்ணம் தானே யாருக்குத் தெரியப் போகிறது என்று அசால்டாக இருந்து விட்டோமென்றால் அது கண்ணுக்குள் நுழைந்த தூசி போன்று ஆகி விடும். நம் பார்வையை மறைத்து விடும். கண்ணில் விழுந்து விட்டால் கூட வெளியே எடுத்துவிடலாம். ஆனால், மனதுக்குள் ஒரு எண்ணம் விழுந்து விட்டால் வெளியே எடுப்பது மிகவும் கடினம். சிறுதுறும்பை விடவும் சிறியது அணு, அதை விடவும் சிறியது எண்ணம். ஆனால், ஒரே ஒரு எண்ணம் போதும். எண்ணத்தால் பேரரசுகள் கவிழ்த்துள்ளன , பெரும்போர்கள் மூண்டுள்ளன! குடும்பங்கள் பிரிந்துள்ளன!
மனதில் ஒரு எண்ணம் வருவது தெரிந்தவுடன், அதை அப்படியே ஏற்றுக்கொள்ளக் கூடாது. சீர் தூக்கிப் பார்க்க வேண்டும். இந்த எண்ணம் சரிதானா? இதில் உண்மை இருக்கிறதா? அல்லது யாரோ சொல்வதை நம்புகிறேனா? இப்படி எண்ணத்தை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
மதிப்பு என்ற வார்த்தைக்கு பொருள் என்ன தெரியுமா? நான் இந்த மலையை மதிக்கிறேன் என்றால் மலையை கவனிக்கிறேன் என்று பொருள். ஒரு கவிஞரை மதிக்கிறேன் என்றால் அவருடைய கவிதையை கவனித்துப் படிக்கிறேன் என்று பொருள்.
நம் வாழ்க்கையில் நாம் சந்திக்கும் நபர்கள், நிகழ்வுகள் எல்லாம் நம் மதிப்புக்குரியவை. அதவாது நம் கவனத்துக்குரியவை. கவனமின்றி இருக்கும் தருணத்தில் ஆணவம் பிறப்பெடுக்கிறது. ஆணவத்தின் பலன் என்னவென்று அனுபவித்த எல்லோருக்குமே தெரியும். புதிதாக எதுவும் சொல்ல வேண்டியதில்லை. ஆணவத்தில் அழிந்து போனான் என்று சொல்வழக்கே இருக்கிறது.
சின்ன சின்ன விஷயங்களிலும் கவனமாக இருங்கள். சின்னச்சின்ன மனிதர்களையும், சின்னச் சின்ன விலங்குகள், பறவைகள், புழு பூச்சிகளையும் கூட அக்கறையோடு பாருங்கள்.
No comments:
Post a Comment
To maintain goodness, all comments have been set to require moderation by the Admin