Pages

Thursday, November 2, 2023

மனம் குளிராதோ!

 "அகத்தீயை அணைக்கும் சொற்களைப் பேசுங்கள் 

பிறரும் குளிர்ந்து தானும் குளிருமாறு."

ऐसी वाणी बोलिए मन का आप खोये ।

औरन को शीतल करे, आपहुं शीतल होए ।

~கபீர் தாசர்.

கபீர் தாஸரின் இந்தக்குறள் நம் பேச்சு எப்படி இருக்க வேண்டும் என்று விளக்குகிறது. பொதுவாக இதை மொழிபெயர்ப்பவர்கள், "நாம் பேசும் வார்த்தைகள் இனிமையாக இருக்க வேண்டும், மனம் சங்கடப்படுவது போல்  பேசக்கூடாது. பிறரின் மனம் குளிருமாறு இருக்க வேண்டும், அதே சமயம், நம் மனமும் குளிரவேண்டும்." என்று மொழிபெயர்க்கிறார்கள். 

பேசுவது என்பது ஒரு நடத்தை (behavior ). காலம் காலமாக நம் பெற்றோர்களும் ஆசிரியர்களும் நமக்கு எப்படி பேச வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லிகொடுத்திருக்கிறார்கள். வணக்கம் சொல்ல வேண்டும், வாங்க போங்க என்று 'ங்க' போட்டு தான் பேச வேண்டும்,  மற்றவர்கள் மனம் புண் படுவது போல் பேசக்கூடாது. மற்றவர்கள் மனம் மகிழ்வது போல் பேச வேண்டும் என்றெல்லாம் சொல்லி சொல்லி  வளர்த்தார்கள். நாமும் குழந்தைகளுக்கு  மூன்று மாஜிக் வார்த்தைகள் பேச சொல்லிக்கொடுக்கிறோம்  - தேங்க்ஸ், ப்ளீஸ், சாரி. அவ்வளவு தான்.  வெறும் பேச்சை மாற்றி விட்டால் போதும், வேறு ஒன்றும் செய்ய தேவையே இல்லை. 

மனதில் என்ன இருந்தாலும் சரி, இனிமையாக பேச வேண்டும், குறை சொல்லக்கூடாது, புகழ வேண்டும்.  நமக்கும் அது  சுலபமாகப்  போய் விட்டது.   இன்முகம், இனிமையான பேச்சு என்ற முகமூடியை மாட்டிக்கொண்டோம்.  சுமூகமான உறவு முறைக்கு இது போதும்.  எதற்கு வம்பு!!! நல்லா இருக்கீங்களா? வீட்டில் எல்லோரும் சௌக்கியமா?  உங்க ஆசீர்வாதத்தில்  நானும் நல்லா இருக்கேன். உங்களை போல் நல்ல மனிதர்களை பார்ப்பதே அபூர்வமா போச்சு.  உங்க குணம் யாருக்கு வரும்!!  புது கார் சூப்பர் சார், நல்ல செலக்க்ஷன். உங்களை நினைக்காத நாளே இல்லைங்க சார். உங்க முக ராசி சார் எல்லாம்!!!   வாய்ப் பேச்சில் வல்லவர் ஆகி விட்டோம்.  தேனை தடவிப் பேசு, நாலு வார்த்தை புகழ்ந்து பேசு, அவ்வளவு தான். நடத்தையில் சிறிது மாற்றம் கொண்டு வந்தால் போதும், எல்லாம் சரியாகி விடும். இது தான் நம்மமுடைய  கருத்து. அப்படிதான் நாம் வாழ்ந்து கொண்டும் இருக்கிறோம். 

கபீர் தாசர் சொல்ல வரும் அறிவுரை இது அல்ல. இந்தக்குறளில் முக்கியத்துவம் வாய்ந்த சொல், பேசுவது அல்ல, மனதின் குளிர்ச்சி.  கபீர் சொல்கிறார், "குளிர்ந்த மனதிலிருந்து வரும் சொற்கள் மட்டுமே மற்றவர்களின் உள்ளத்தில் கனன்று எரியும் தீயை அணைக்கும்.  அப்படிப்பட்ட  சொற்கள் நம்முடைய மனதையும் குளிர்விக்கும், மற்றவர் மனதையும் குளிர்விக்கும்". மனம் குளிர்ந்திருக்க வேண்டும்.  அது தான் முக்கியம். அப்படிப்பட்ட குளிர்ந்த மனதிலிருந்து எப்படிப்பட்ட சொல் வந்தாலும் சரி, அது கடுமையாக  இருக்கலாம், கண்டிப்பதாக  இருக்கலாம், கோபமாகக்கூட இருக்கலாம். அது நம் மனதை குளிர்விக்கும் மாமருந்து. 

எல்லாருடைய மனதும் வருத்தத்தில், ஆதங்கத்தில், ஏமாற்றத்தில் கனன்று கொண்டிருக்கிறது.  இந்த நெருப்பை எந்த நீர் அணைக்கும்?  வெறும் வார்த்தைகளால் இந்தத் தீயை அணைத்து விட முடியாது.  உள்ளிருந்து உடற்றும் பெரு நோய் இது.  அன்பில் கனிந்த இதயத்திலிருந்து வரும்  வார்த்தைகள் மட்டுமே பற்றி எரியும் மனத்தீயை அணைக்க முடியும்.    

அகங்காரம் தான் உள்ளிருந்து வாட்டும் தீ.  இந்தத் தீயை தன்னுள் அனைத்தவர்களின் சொற்கள் மட்டுமே நம்முள் இருக்கும் துன்பம் என்ற தீயை அணைக்கும்.  பிறரின் வார்த்தைகள் எவ்வளவு இனிமையாக இருந்தாலும் அதனால் எந்தப்பயனும் இல்லை. பொய் மிக இனிமையாக  இருக்கும். உண்மை கசப்பாகத்தான்  இருக்கும்.  உலகில் பொய் கொண்டாடப்படும், உண்மை புறக்கணிக்கப்படும்.  பொய் ஆரவாரத்துடன் வரும், உண்மை அமைதியோடு வரும்.  

எப்படிப்  பேசுகிறோம் என்பது முக்கியம் அல்ல, எங்கிருந்து பேசுகிறோம் என்பது முக்கியம்.  அதனால் தான் அகத்தீயை அணைக்கும் சொற்களை பேசுங்கள் என்கிறார்  கபீர் தாசர்.  உள்ளத்தின் உயர்வே இங்கு பிரதானமாக பேசப்படுகிறது.  பேச்சை மாற்ற வேண்டி முயற்சி செய்ய வேண்டியதில்லை. மனதை மாற்றத்தான் முயற்சி தேவைப்படுகிறது.  உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுவது தற்காலிகமாக புத்திசாலித்தனமாக, ஸ்மார்ட் ஆக இருப்பது போல் தெரியலாம், லாபகரமானதாக இருக்கலாம், ஆனால், உள்ளே இழக்கக்கூடாத ஒன்றை இழந்து விடுவோம் -  அது நிம்மதி.  பிறகு, நான் நன்றாகத்தானே பேசிக்கொண்டிருந்தேன், பிறகு ஏன் என் உறவுமுறைகளில் அன்பில்லை, நிம்மதி இல்லை என்று அங்கலாய்க்கிறோம். 

நிம்மதி அற்ற மனது பற்றி எரியும் காடு.  அந்தக்காட்டுத்தீயை எப்படி அணைப்பது?  

மனதை குளிர்விக்க ஞானிகளின்  சொற்களைப் போல் வேறு எதுவும் உதவாது.  நம் வீடுகளில் அப்படிப்பட்ட நல்ல மனிதர்களின் சொற்கள் காதில் படுகிறதா?  மனத்தெளிவு தரும் புத்தகங்களை  படிக்கிறோமா?   அவர்களுக்கு இருக்க இடம் இல்லாத வீடுகளில் வாழ்ந்து கொண்டு மனது சரியில்லை என்று புலம்பி என்ன பயன்? எல்லார் வீடுகளிலும் தாய், தந்தை, கணவன், மனைவி, மகன், மகள், உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும்  இருக்கிறார்கள், ஆனால் யாரும் நிம்மதியாக இல்லை. இவர்களில் யாரும் நம் கவலைகளிலிருந்து நம்மை காப்பாற்றப்போவதில்லை.  நம் வாழ்வில் நல்லோர்களுக்கு இடம் இருக்கிறதா? நம்மை வழிநடத்தக்கூடிய மேன் மக்கள்  இருக்கிறார்களா?  அவர்கள் பேசும் ஞான மொழிகளைக்  கேட்கிறோமா? ஆம் என்றால், இன்பம் உண்டு, அருள் உண்டு. இல்லையென்றால், ஒன்றுமில்லை, முற்றுப்புள்ளி.

 ~பரம்அத்வைத் (பரமேஸ்வரி) 


No comments:

Post a Comment

To maintain goodness, all comments have been set to require moderation by the Admin