Pages

Saturday, November 4, 2023

யார் பெரியவர்?

 நாம் குழந்தைகளாக இருந்த போது, நீ  பெரியவர்களை மதிக்க வேண்டும், எதிர்த்துப் பேசக் கூடாது, அவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும் என்று சொன்னார்கள்.  ஆனால் யார் பெரியவர்கள் என்று யாருமே சொல்லவில்லை. நாமும் அவர்களிடம் கேட்கவில்லை. சிறு வயது. புரிந்து கொள்ளும் அளவுக்கு அறிவாற்றல் இல்லை. எனவே,  நம்மை விட உருவத்தில், உயரத்தில், வயதில் பெரியவர்களை "பெரியவர்கள்" என்று யோசிக்காமலேயே ஏற்றுக் கொண்டுவிட்டோம். நமக்கு அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, அத்தை, மாமா எல்லாரும் பெரியவர்கள் தான். சிலரை தெய்வத்துக்கு சமமாகக் கூட  சொன்னார்கள். அதையும் எப்படி என்று கேள்வியே  கேட்காமல் ஏற்றுக்கொண்டு  விட்டோம். அனாவசியமாக கேள்வி கேட்டால் அடி தான்  விழும். 

பெரியவர்கள் (என்று சொல்லப்படுபவர்கள்..so called ) சொல்வதை அப்படியே கேட்டதனால் தான் நம் வாழ்வில் இத்தனை குழப்பங்கள், சிக்கல்கள்.  வீட்டுக்கு வந்து போகிற பக்கத்துக்கு வீட்டு மாமா  கூட நாம் என்ன செய்ய வேண்டும் என்று அறிவுரை சொல்வார், நாமும் கேட்டுக் கொள்ளவேண்டும்.  நம்மை வழி நடத்த அவருக்கு என்ன தகுதி இருக்கிறது என்று ஆராய்ந்து பார்ப்பதே இல்லை. அப்பா சொல்லிவிட்டார்கள் என்று ஒரு படிப்பு படிப்போம், அம்மா சொன்னார் என்று ஒரு பெண்ணை திருமணம் செய்ய ஒத்துக்கொள்வோம்.  நம் வாழ்க்கைக்கு வழி காட்டக்கூடிய அளவுக்கு அவர்களுக்கு தகுதியும், திறனும் உள்ளதா என்று சீர் தூக்கிப் பார்ப்பதே இல்லை. பெரியவர்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று நம்பி நம் வாழ்வின் மிக முக்கியமான முடிவுகளை அவர்கள் கையில் கொடுக்கிறோம்.  உண்மையில் இது அவர்கள் மேல் வைத்த நம்பிக்கை இல்லை, நமக்கு சிந்தனை செய்ய சோம்பேறித்தனம்.  தானாக யோசிப்பது மிகவும் கடினம்.  நாமே முடிவு செய்ய பயம், ஏனென்றால் அதனால் ஏற்படும் பின் விளைவுகளை சந்திக்கவோ, பொறுப்பு எடுத்துக்கொள்ளவோ நாம்  தயாராக இல்லை. 

நாம் அன்றாடம் பயன் படுத்தும் வார்த்தைகள் - பணம், வேலை, மரியாதை, முன்னேற்றம், வெற்றி, காதல், அன்பு, திருமணம்.  இவை பற்றி நாம் சிந்தித்துத் தெரிந்து கொண்டோமா  அல்லது  குருட்டாம்போக்காக யார் யாரோ சொல்வதையெல்லாம் நம்பிக்கொண்டு, காலம் காலமாக நடைமுறையிலுள்ள  பழக்க வழக்கங்களை கடை பிடித்துக்கொண்டு அதன் அடிப்படையில் வாழ்வை  நடத்திக்கொண்டிருக்கிறோமா?  நம் வாழ்க்கையை உண்மையில் நாம் தான் வாழ்கிறோமா?  உண்மையில் நாம் வாழ்வின் அடிப்படையான விஷயங்களை பற்றிக்கூட தெரிந்து கொள்ளாமல் அறியாமையில் தான்  இருக்கிறோம்.  நம்மிடம் புரிந்து கொள்ளும் திறன் இல்லாமல் இல்லை, ஆனால், எனக்கு எல்லாம்  தெரியும் என்று நினைத்துக்கொள்கிறோம். இத்தனை கோடி மக்கள் இப்படித்தான் வாழ்கிறார்கள், சரியாகத்தான் இருக்கும் என்று ஒரு நம்பிக்கை.  நமக்கு எதுவும் தெரியாது, எல்லாம் புகுத்தப்பட்டவை , திணிக்கப்பட்டவை.  நேர்மையாக, நேரடியாக வாழ்வை நம் கண்களால் நாம் பார்த்து உணரவே இல்லை. கேள்வி கேட்காமல் வெறும் நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு நம் வாழ்வை கட்டமைத்திருக்கிறோம்.   அதனால் தான் நாம் எவ்வளவு தான் என்ன தான் முன்னேற்றம் அடைந்தாலும் மனதில் வெறுமையும் ஏமாற்றமும் மட்டுமே மிஞ்சுகிறது. நாம் உண்மையில் மகிழ்ச்சியாக, மனநிறைவாக இல்லை. 

உண்மையில் யார் பெரியவர்கள்?  

இது ஓவ்வொருவரும் கேட்க வேண்டிய மிகவும் முக்கியமான கேள்வி.  ஏனென்றால், நாம் பெரியவர்கள் என்று மதிப்பவர்கள்தான் நம் வாழ்வின் திசையையே தீர்மானிக்கிறார்கள். 

 டாக்டர் மதிப்புக்குரியவர் என்று நினைத்த நினைப்பு பலரை டாக்டராகவே மாற்றி விட்டிருக்கிறது. விஞ்ஞானியை மதித்தோம் என்றால், விஞ்ஞானியாகக் கூடிய வாய்ப்பு உண்டு.  பணக்காரர்கள் தான் மதிப்புக்குரியவர்கள் என்று நினைத்தால், நம் வாழ்வும்  பணம் சம்பாதிப்பதைத்தான் இலக்காகக் கொண்டு ஓடும். எனவே, நாம் எதற்கு மதிப்புக் கொடுக்கிறோம், யாரை வணங்குகிறோம் என்பதில் மிக மிகக்  கவனமாக இருக்க வேண்டும். நம் அறிவு எதை, யாரை மதிப்புக்குரியதாக கருதுகிறதோ அதன் படி தன் வாழ்வை வடிவமைத்துக்கொள்ளும். 

சமூகத்தில் பொதுவாக யாருக்கு மதிப்பு  என்று பார்த்தால், பணம், செல்வாக்கு உள்ளவர்களுக்குத் தான் பெரிய மதிப்பு இருக்கிறது. அவனுக்கென்ன, பங்களா வீடு, கார், ஏகப்பட்ட சொத்து, கட்சியில் பிரபலம், மில் ஓனர்  பெரிய ஆள் என்கிறோம்.  சிம்பிள் ஆக சொல்ல வேண்டுமென்றால் பெருமை பட வாழ் என்றால் கோடிக்கணக்கில் பணம், பெரிய வீடு, மனைவி, மக்கள், சொகுசு கார், படிப்பு, செல்வாக்கு எல்லாம் பெற்று வாழ் என்று  பொருள். மகனை நினைத்து பெற்றோர்கள் பெருமைப்படுகிறார்கள் என்றால், வேறு ஒன்றும் இல்லை, மகன் பெரிய பதவி, கை நிறைய சம்பளம், கார், பங்களா என்று வாழ்கிறான் என்று புரிந்து கொள்ள வேண்டியது தான். 

பெற்றோர்கள், வயதில் பெரியவர்கள், காசு பணம் படைத்தவர்கள், பிரபலமானவர்கள், குறிப்பிட்ட  ஜாதிக்காரர்கள், திறமைசாலிகள், கோயில் பூசாரிகள், ஆங்கிலம் பேசத் தெரிந்தவர்கள், கிரிக்கெட் வீரர்கள்,  அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் - இவர்கள் எல்லாம்  பெரியோர்கள் அல்ல.  சாதாரண மனிதர்கள் தான். அப்படியென்றால் யார் தான் பெரியவர்கள்???!!!  

குரு கபீர் தாசர் இந்தக்குறளில் ஒரு எளிமையான உதாரணம் கொண்டு யார் பெரியவர்கள் என்று விளக்குகிறார். 

"பெரிதாக இருந்து என்ன பேரீச்சை மரத்தைப் போல் 

பயணிக்கு நிழலில்லை, பழமோ வெகு தொலைவில்."

बड़ा भया तो क्या भया, जैसे पेड़ खजूर ।

पंथी को छाया नहीं फल लागे अति दूर ।

பலர் பேரீச்சம் பழங்கள் சாப்பிட்டு இருப்போம், ஆனால் பேரீச்சம் மரத்தை பார்த்திருக்க மாட்டோம். நாங்கள் வளைகுடா நாடுகளில்  வசித்து வருவதால் பேரீச்ச மரங்களை எல்லா இடங்களிலும் பார்க்கலாம்.  தென்னை மரம் போல் உயரமாக இருக்கும், அதன் பழங்கள் உயரத்தில் இருக்கும்.  வருடத்திற்கு ஒரு முறை தான் பழங்கள் வரும்.  பாலை வனத்தில் பயணம் செய்பவர்கள் நிழலுக்கு ஒதுங்கலாம் என்றால் பேரிச்சை மரம் நிழல் கொடுக்காது. பசிக்கு பழங்களாவது உண்ணலாம் என்றால் அது மிக உயரத்தில் இருக்கும், கைக்கு எட்டாது.  பெரிய மரமாக இருந்து என்ன பயன்?  நிழலும் இல்லை, பழமும் கைக்கெட்டாத தூரத்தில்.  

பெருமைக்குரியது ஒன்றே ஒன்று தான். பெரியது என்று அதை மட்டும் தான் சொல்லலாம்.  அது குறைவற்றது. அளவில்லாதது. பெருமைக்குரியவர்கள்  யார் என்பதற்கு ஒரே ஒரு இலக்கணம் தான்.  அவர்கள் கொடுப்பவர்களாக இருப்பார்கள்.  உள்ளே நிறைந்து இருந்தால் அது வெளியே விரிந்து செல்லும்.  எவ்வளவு வைத்திருக்கிறார்கள் என்பது அளவுகோல் அல்ல, அவர்கள் கொடுக்கிறார்களா என்பது தான் அளவுகோல். 

கோடிக்கணக்கில் பணம் இருந்தும், பசித்தவர்களுக்கு ஒரு பத்து ரூபாய் கொடுக்க மனமில்லை என்றால் அவர்கள் பெரியவர்கள் இல்லை.  வயதில் மூத்தவர்கள் என்பதால், அனுபவம் மிக்கவர்கள் என்பதால் பெரியவர்கள் என்று சொல்ல முடியாது.  அவர்கள் தன்னிடம் உள்ளவற்றை பகிர்ந்து கொடுக்கிறார்களா என்று பாருங்கள்.  என்னுடையது, என்னுடையது என்று இறுக்கிப்பிடித்துக்கொண்டு இருந்தார்கள் என்றால்  அவர்களை நாம் மதிக்க வேண்டிய அவசியம் இல்லை.  அதற்காக, அவமதிக்க வேண்டும் என்று சொல்லவில்லை, அவர்கள் பெருமைக்குரியவர்கள் என்று நினைத்து அவர்கள் காலில் விழ வேண்டிய தேவை இல்லை.  வயதில் பெரியவர்கள், அனுபவசாலிகள் என்று அவர்கள் சொல்வதைக்  கேட்டு நடக்க வேண்டும் என்று நினைத்துக்கொள்கிறோம். அனுபவத்துக்கும் அறிவுக்கும் சம்பந்தம் இல்லை. அவர்கள் சராசரியான மனிதர்கள் தான். அவர்களிடம் சிறப்பு எதுவும் இல்லை. 

 உணவைக்கொடுப்பவர்கள், பணம், பொருட்கள் கொடுப்பவர்கள்,  நேரத்தைக் கொடுப்பவர்கள்,  அறிவைக்கொடுப்பவர்கள், அன்பைக்கொடுப்பவர்கள் எல்லோரும் பெரியவர்கள் தான். இதில் தன்னிடம் உள்ள பொருட்களத்  தருபவர்களை விட தன் இருத்தலையே தருபவர்கள் மிகப்பெரியவர்கள்.  அன்பானவர்கள் அன்பைத்  தருகிறார்கள்.  அவர்களின் இருப்பே மனதில் அமைதியை ஏற்படுத்தும் - குறிப்பிட்ட நாலு பேருக்குத் தான் கொடுப்பேன் என்று சொல்லாது.  மலரின் மனம் போல் எல்லா இடங்களிலும் அவர்கள் அன்பு பரவும். பெருமையின் அடையாளம் என்னவென்றால், பகிர்தலுக்கு நாம் ஒரு ஊடகமாக(medium ) இருப்போம் .  அது சுயநலமில்லாத பகிர்தலாக இருக்கும். நான் கொடுத்தேன் என்ற எண்ணம் கூட  இருக்காது. 

அப்படிப்பட்ட பெருமைக்குரியவர்களைக் காண்பது அபூர்வம் தான். அவர்களைத் தான் நாம் வணங்க வேண்டும், வழி பட வேண்டும்.  ஊடகத்தில் லட்சக்கணக்கில் followers இருப்பதால் பெரிய ஆளாகத்தான் இருக்க வேண்டும், நானும் follow பண்ணுகிறேன் என்று யாரையாவது பின்பற்றினோம் என்றால், நாம் தகுதியற்றவர்களை சிம்மாசனத்தில் அமர வைத்து விட்டோம் என்று அர்த்தம்.  எனவே, நாம் யாரை மதிக்கிறோம் என்பதை கவனமாக தேர்வு செய்ய வேண்டும்.  நம் தலை எல்லோருக்கும் குனிந்து விடக்கூடாது.  குட்டுப்பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப்பட வேண்டும் என்று சொல்வார்கள்.  மோதிரம் என்பது தகுதியைக்குறிக்கும். பெரியவர்கள் கையால் குட்டுப்படுவது நல்லது தான்.  அவர்கள் முன் மட்டுமே நம் தலை தாழ வேண்டும்.  மற்றவர்கள் எவ்வளவு உயர்ந்தவர்களாக இருந்தாலும், எவ்வளவு பெரிய இடத்தில் இருந்தாலும், சராசரியானவர்கள் தான். அவர்களுக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கத் தேவை இல்லை.  

நான் மிகவும் மரியாதை செய்யும் ஞானி, அன்பர், குரு கபீர் தாசர்.  சுமார் எழுநூறு வருடங்களுக்கு முன் வடஇந்தியாவில் வாழ்ந்த மெய்ஞ்ஞானி கபீர் தாசர். அவர் ஒரு  நெசவாளி. படிப்பறிவு இல்லாதவர், ஆனால் வாழ்வின் நுட்பமான உண்மைகளை  எளிய பாமர மக்களும் புரிந்து கொள்ளுமாறு எளிமையான மொழியில் பாடல்களாகக் கொடுத்துள்ளார்.   தமிழர்கள் நாமும் அவரின் செறிந்த வாழ்க்கை தத்துவங்களைத்  தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையால் நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று பகிர்ந்து அளிக்கிறேன்.  

~ பரமேஸ்வரி.

பரம் அத்வைத்.









 




No comments:

Post a Comment

To maintain goodness, all comments have been set to require moderation by the Admin