அறிந்ததிலிருந்து விடுதலை
மற்றவர்களை பற்றி நினைத்து நாம் நிம்மதியாக இல்லை. நாலு பேர் என்ன சொல்வார்கள் என்று பயப்படுகிறோம். மற்றவர்கள் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்து நடுச்சாமத்தில் தூங்க விடாமல் தவிக்க விடுகின்றன. நம்மால் சகஜமாக மகிழ்ச்சியாக இருக்கவே முடிவதில்லை. நம்மைப் பற்றியே நமக்கு சந்தேகம், குற்ற உணர்ச்சி ஏற்பட்டு குறுகிப்போகிறோம்.
மற்றவர்கள் நம் மனதை பந்தாடிக்கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்தாலும் நம்மால் ஒன்றுமே செய்ய முடிவதில்லை. அவர்களை பற்றிய எண்ணங்களை கட்டுப்படுத்தவே முடிவதில்லை. நான் சரியானவன், சிறப்பானவன், குறை ஏதும் இல்லாதவன், என்னை ஏன் மற்றவர்கள் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள் என்று புலம்பியே வாழ்க்கை முடிந்து விடுகிறது.
ஏன் மற்றவர்களின் கருத்துக்கு இவ்வளவு மதிப்புக் கொடுக்கிறோம்? நாம் நிம்மதியாக இருப்பதைக் காட்டிலும் மற்றவர்களின் மனதில் இடம் பிடிப்பதில் ஏன் இவ்வளவு தீவிரமாக இருக்கிறோம்? என் நலனை விட நாலு பேரின் அங்கீகாரம் ஏன் அவசியமாகப் படுகிறது?
இவற்றைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் நாம் brain என்று சொல்லப்படுகிற மூளையின் பரிணாம வளர்ச்சி தத்துவம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
காட்டிலிருந்து வெளி வந்த பிறகு மனிதர்களாகிய நாம் பல்லாயிரக்கணக்கான வருடங்களாக கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வந்திருக்கிறோம். கூட்டத்தில் இருப்பது நமக்கு பாதுகாப்பு. நம்மை கூட்டம் ஏற்றுக்கொள்ள வேண்டும், அப்போது தான் உணவு, உடை, இருப்பிடம் எல்லாம் கிடைக்கும். எனவே, உயிர் பிழைக்க வேண்டுமென்றால் கூட்டத்தின் அங்கீகாரம் இன்றியமையாதது. இயற்கையின் தத்துவத்தின் படி இவ்வுலகில் பலமுள்ளவன் தான் வாழ முடியும் survival of the fittest . பலர் நம்மை ஏற்றுக்கொண்டார்கள் என்றால் வாழக்கூடிய வாய்ப்புகள் அதிகம். ஒருவேளை நம்மை பலருக்குப் பிடிக்கவில்லை என்றால் நாம் இறந்து போவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
உடலைக் காப்பாற்றுவதும் அதை நீண்ட நாட்கள் வாழ வைப்பது தான் மூளையின் ஒரே நோக்கம். அதனால், நாம் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப் படுகிறோமா அல்லது நிராகரிக்கப் படுகிறோமா என்பது நம் மூளைக்கு மிக மிக முக்கியம். மற்றவர்கள் என்பதே அதற்கு அச்சுறுத்தல் தான். மற்றவர்களின் கருத்துக்கள் அதற்கு மிக முக்கியம். மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வது மிக அவசியமான தகவல் (input ) .
காலம் மாறி விட்டது. நாம் இன்னமும் நாடோடிகள் இல்லை. அறிவில் வெகுவாக வளர்ச்சி அடைந்து விட்டோம். கலை, அறிவியல், தொழில் நுட்பம், பொருளாதாரம், விவசாயம் என்று பல துறைகளில் பெரு வளர்ச்சி அடைந்து விட்டோம். பழங்கால மனிதன் போல் கூட்டத்தில் வாழ்ந்தாக வேண்டிய கட்டாயம் இல்லை. கூட்டத்தின் அச்சுறுத்தல் இல்லை. ஆனாலும் மூளை தான் கற்றுக்கொண்டதை இன்னமும் மறக்கவில்லை. கூட்டத்தின் ஆதரவு இருந்தால் தான் வாழ முடியும் என்று அது முடிவு செய்து வைத்திருக்கிறது. அது ஆட்டோமேட்டிக்காக ஓடும் ஒரு செயலி (app ) இப்போது புரிந்திருக்கும் என் நாம் மற்றவர்களின் கருத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்று.
குடும்பத்திலும், சமுதாயத்திலும் நாம் மதிப்பு மரியாதையுடன் வாழ வேண்டும் என்று விரும்புகிறோம். நம்மை யாராவது அடித்து விட்டால் கூட அவ்வளவு கோபம் வராது, ஆனால் அவமானப்படுத்தி விட்டால் கொதித்து எழுந்து விடுவோம். கோபம் என்பது உடலுக்கு வந்த ஆபத்தை எதிர்க்கும் மூளையின் ஒரு தந்திரம், technique . எதிராளி பலமற்றவன் என்று தெரிந்தால் கோபத்தைக் காட்டும், பலசாலி என்றால் பயத்தைக் காட்டும். மூளையைப் பொறுத்த வரை மானம், அவமானம் என்பது வாழ்வா, சாவா என்பதை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகள்.
மூளைக்கு அதீத கற்பனைத் திறன் உண்டு. அது உள்ளதை உள்ளபடி பார்க்காது, அதில் தன் கற்பனையை ஏற்றித்தான் பார்க்கும். ஏனென்றால், உயிர் வாழ அனுமானிக்கும்(prediction ) திறன் அவசியம். ஒருவரைப் பார்த்தவுடன் இவர்கள் எப்படிப்பட்டவர்கள், என்ன உள்நோக்கத்தில் பேசுகிறார்கள், இவர்களால் நமக்கு இடைஞ்சல் வருமா என்றெல்லாம் முன் கூட்டியே கணிக்க வேண்டி இருக்கிறது. இவ்வுடல் வாழத் துணை புரிபவரை நல்லவர்கள் என்றும், துணை புரியாதவர்களை கெட்டவர்கள் என்றும் மூளை எடுத்துக்கொள்ளும். அதனால் தான், யாராவது நமக்கு உணவு கொடுத்தால் அவர்களை விரும்புகிறோம். முன்பெல்லாம் சாப்பாடு வாங்கி கொடுத்தால் போதும், நல்லவர்கள் என்று நம்பி விடுவோம். புகழ்ந்து பேசினால் உள்ளம் குளிர்ந்து விடுவோம். புகழ்ச்சி என்பது positive சிக்னல். நம் மூளை அதி புத்திசாலியாக இருந்தால், இவன் எதற்கு நம்மை புகழ்கிறான் என்று யோசிக்கும். இதன் பின்னணி என்ன என்று தன் பழைய அனுபவங்களை எல்லாம் வைத்து ஆராய்ச்சி செய்து பார்க்கும். பிறகு ஒரு முடிவுக்கு வரும்.
உதாரணத்திற்கு, நாம் ஒரு காட்டு வழியாக போய்க்கொண்டிருக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஒரு மரத்தில் பழுத்த பழங்களை பார்க்கிறோம். அதே சமயத்தில் அங்கே சலசல வென்று ஏதோ சத்தம் கேட்கிறது. பின்னால் ஏதாவது மிருகம் பதுங்கி இருக்கலாம் என்று சந்தேகம் வருகிறது. தெளிவாக பார்க்க முடியவில்லை, ஆனால் ஒரு முடிவு செய்ய வேண்டும். பழத்தை பறித்து சாப்பிடலாமா அல்லது ஓடிவிடலாமா? அங்கே விலங்கு எதுவும் இல்லை என்று நினைத்தால் பழத்தைப் பறித்து சாப்பிட்டு பசியாறிக்கொள்ளலாம். ஒருவேளை சிறுத்தையோ, புலியோ இருந்து விட்டால் அதற்கு நாம் உணவாக வேண்டியது தான். மூளை ஆபத்தை (risk ) தேர்ந்தேடுக்க விரும்பாது. அங்கே புலி இல்லை என்பதை நம்புவதை விட புலி இருக்கிறது என்பதைத் தான் நம்பும். அங்கே புலி மறைந்திருப்பதாக கற்பனை செய்யும். உயிரைக் காப்பாற்ற இப்படிப்பட்ட அமைப்பு உள்ளே செயல்பட்டாக வேண்டும். பழம் போனால் போகிறது, ஒரு வேளை புலி இருந்து விட்டால் உயிரே போய் விடும். எனவே, புலி இருப்பதற்கு ஒரு சதவிகிதம் வாய்ப்பு இருந்தால் கூட அது புலி இருக்கலாம் என்று தான் எடுத்துக்கொள்ளும்.
இப்போது நாம் காட்டில் வாழவில்லை, புலி, சிங்கம், பாம்பு பயம் இல்லை, ஆனால், நம்மை சுற்றி மனிதர்கள் இருக்கிறார்களே!!! எனவே தான், நாம் மற்றவர்களை பற்றி கருத்துக்கணிப்பு (judgement ) செய்துகொண்டே இருக்கிறோம். இந்த கருத்துக்கணிப்புகள் சரியாகவும் இருக்கலாம், தவறாகவும் இருக்கலாம். பெரும்பாலும் நாம் பயத்தின் அடிப்படையிலேயே முடிவுகளை எடுப்பதால், நம் மூளை சொல்வதெல்லாம் உண்மை என்று நம்ப முடியாது. மூளை உடலுக்கு சேவகன் அல்ல, நான் என்ற அகங்காரத்துக்கு சேவகன். உடல் என்பது அகங்காரத்தின் வெளி உருவம் தான். அகங்காரம் வாழ வேண்டும். அதற்காகத் தான் மூளை வேலை செய்து கொண்டிருக்கிறது. அடித்துவிட்டால் கூட மன்னித்து விட்டு விடுவோம், ஆனால் நம்மை ஏளனம் செய்தவர்களை, தூற்றியவர்களை நினைத்துக் கருவிக் கொண்டே இருப்போம். ஆணவம் (ego ) அடிபடுவது உடல் அடிபடுவதை விட ஆபத்தானது. ஈகோவை காய படுத்துபவர்கள் மூளைக்கு பயங்கர ஆபத்தாக (threat ) தெரிகிறார்கள்.
இப்போது புரிகிறதா நாம் என் மற்றவர்களின் கருத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் தருகிறோம் என்று? அது மட்டுமல்லாமல் மற்றவர்களைப் பற்றி நல்ல விதமாக நினைப்பதை விட தவறானவர்கள் என்று நினைப்பது என்பது ஈசியாக இருக்கிறது. ஏனென்றால், மூளை ரிஸ்க் எடுக்க தயாராக இல்லை. நுட்பமாக கவனித்தோம் என்றால் இன்னொன்றும் புரியும். மற்றவர்களை தவறானவர்கள் என்று அறிவித்து விட்டால் மறை முகமமாக நான் சரியானவன் என்பது நிலை நாட்டப் படுகிறது. எனவே, மற்றவர்கள் சரியில்லை என்று முத்திரை குத்துவது மகிழ்ச்சியாக இருக்கிறது.
இரண்டு பேர் பேசிக்கொண்டிருக்கும் போது சமயத்தில் பேச்சு வார்த்தை வாத விவாதமாக மாறிவிடும். இருவரும் தான் கூறுவதே சரி என்று நிலை நாட்டப் பார்ப்பார்கள். மற்றவர்கள் சொல்வதை முதலில் காது கொடுத்துக் கேட்கவே மாட்டார்கள், கேட்டாலும் அதை திரித்துத் தான் பொருள் கொள்வார்கள், தான் சொல்வது தான் சரி என்று நிரூபிக்கவே முயற்சி செய்வார்கள். அது ஏறத்தாழ ஒரு யுத்தம் போன்றது தான். யார் ஜெயிப்பார்கள், யார் தோற்பார்கள் என்று ஒரே போராட்டமாக இருக்கும். வாதத்தில் தோற்பது என்பது மரணம் என்றே மூளை எடுக்கிறது. எப்படியாவது அதில் ஜெயிக்க வேண்டும் என்று அதி தீவிரமாக யோசித்து தன் வாதத்தை முன் வைக்கும். மீறினால் பலாத்காரத்தில் ஈடுபடுவார்கள். எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. என் அம்மாவும் அப்பாவும் தாயம் விளையாடுவார்கள். அதில் இரண்டு மூன்று முறை என் அம்மா ஜெயித்து விட்டால் என் அப்பா கோபத்தில் ஆட்டத்தைக் கலைத்து விட்டு, அம்மாவையும் திட்டி விட்டு எழுந்து போய் விடுவார். தோற்பதை ஆணவம் விரும்பாது.
அலுவலகத்தில் நம்மை ஒடுக்கப் பார்ப்பவர்களைக் கண்டால், நம் மூளை காட்டில் ஒநாயைக் கண்டால் என்ன உணர்வுகளை உடலில் ஏற்படுத்துமா, அதே உணர்வுகளை ஏற்படுத்தும். பெண்களைக் கண்டால் ஏற்படும் கிளர்ச்சி உடலின் தொடர்ச்சியை இன்பம் என்று மூளை அறிவிப்பது ஆகும். ஆண்களின் வலிமையான தோள்கள் பெண்களுக்கு பாதுகாப்பு என்ற உணர்வை கொடுத்தது போல் ஆண்களின் பணமும் வசதியும் கூட பாதுகாப்பு என்ற உணர்வை தருகிறது. எல்லாம் நம் மூளையின் அறிவு விளக்கம்( interpretation )தான். நமக்கே தெரியாமல் நமக்குள் இருந்து கொண்டு எல்லாவற்றையும் செய்து கொண்டிருக்கிறது நம் கிரே மேட்டர். அதை நல்லது என்று அப்படியே ஏற்றுக்கொள்ளவும் முடியாது, கெட்டது என்று ஒதுக்கவும் முடியாது. அதனால் தான் விவேகம் வேண்டும், பகுத்தறிவு வேண்டும், சிந்தித்து செயல் பட வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொன்னார்கள்.
பரிணாம வளர்ச்சியில் உடல் தன் அனுபவத்தால் அறிந்து கொண்டவைகள் உடலில் பதிந்து விட்டன. அதை physical conditioning என்று சொல்கிறோம். அதற்கு மேல் சமூகம், குடும்பம், கல்வி, மதம்,பண்பாடு, சினிமா, அரசியல், ஊடகம் என்று பல்வேறு அடுக்குகளில் மூளை பதப்படுத்தப் பட்டிருக்கிறது. அதற்க்கு social கண்டிஷனிங் என்று பெயர். குழந்தையாக இருந்த போது உடல் இயற்கை மட்டுமே நம்மை கட்டுப் படுத்தியிருக்கும், ஆனால் வளர வளர நாம் சந்தித்த அனுபவங்கள் நம் மனதில் பலவித மாற்றங்களை, கருத்துகளை, நம்பிக்கைகளை மூளையில் ஏற்றி விட்டு விட்டது. நமக்கு நம் மூளை எப்படி வேலை செய்யும் என்று தெரிவதை விட, சந்தைக்கும், அரசியல்வாதிக்கும், சினிமாக்காரர்களுக்கும் நன்றாகவே தெரியும். ஏன், உங்களை விட ஓட்டல் கடைக்காரர்களுக்கு உங்களைப் பற்றி நன்றாகத் தெரியும். எந்த நிறத்தில் எந்த வாசனையில் உணவைக் கொடுத்தால் உங்களுக்கு நாவில் எச்சில் ஊறும் என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும். உங்கள் மூளையின் புரோகிராமை வைத்துத் தான் உலகில் வியாபாரமே நடக்கிறது. குழந்தைகள் மேல் உங்களுக்கு மோகம் என்று வியாபாரிகளுக்கு தெரியும். நீங்கள் எவ்வளவு விலை கொடுத்தாவது வாங்குவீர்கள். அதனால் தான் குழந்தைகள் சம்பந்தப்பட்ட எல்லாமே கொள்ளை விலை விற்கிறது.
மூளையின் செயல்பாடுகளை புரிந்து கொள்ள வேண்டியது எவ்வளவு முக்கியம் என்று இப்போது புரிகிறதா? மூளையின் இயக்கத்தை புரிந்து கொண்டால் அது நமக்கு சேவகன், இல்லையென்றால் அது எடுப்பார் கைப்பிள்ளை. இது புரியவில்லை என்றால் பிரச்சினைகளை உருவாக்க வேறு யாரும் தேவை இல்லை, நமக்கு நாமே எதிரி தான்.
நம் மூளை எப்படி இயங்குகிறது என்று எப்படிப் புரிந்து கொள்வது?
அதற்கு நாம் விழிப்போடு நம் செயல்களையும், எண்ணங்களையும் கவனிக்க வேண்டும். மூளை ஒரு எந்திரம், ஒரு தானியங்கி புரோகிராம். நம் மனதில் எழும் எண்ணங்களை உண்மை என்று நம்பக்கூடாது. அது என்ன தான் சொல்கிறது என்று பாகுபாடின்றி கேட்க வேண்டும். வெறுமனே அமைதியாக கவனித்தால் தான் அதன் நோக்கத்தை நாம் புரிந்து கொள்ள முடியும். உங்கள் அன்றாட வாழ்வில் என்ன மாதிரி வடிவமைப்பு (pattern ) உள்ளது என்று பாருங்கள். திரும்ப திரும்ப ஒரே மாதிரி எதிர் வினை புரிகிறோம் என்று பாருங்கள். நம்முடைய நடத்தையிலுள்ள மாதிரிபடிமங்கள் மற்றவர்களுக்குத் தெரிந்து விட்டால், அது போதும், அதை வைத்து நம்மை சுலபமாக அடிமைப் படுத்திவிடலாம். தர்மன் உண்மை மட்டுமே பேசுவான் என்பது அவனுடைய படிமானம், pattern. அதைத் தெரிந்து கொண்டு அவனை சூதாட்டத்தில் சகுனி வென்றான். மகன் மேல் கொண்ட மோகம் தான் துரோணாச்சாரியின் படிமானம். அதை வைத்துத் தான் அவரை வீழ்த்த முடிந்தது. நம் படிமானம் என்ன என்று மற்றவர்கள் தெரிந்து கொள்வதற்கு முன் நாம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். unpredictable ஆக கணிக்கமுடியாதவர்களாக இருங்கள்.
நம்முடைய நோக்கமும் மூளையின் நோக்கமும் ஒன்று இல்லை. நமக்கு புரிந்து கொள்வது என்பது சுபாவம். மூளைக்கு பழக்கத்தில் வாழ்வது சுபாவம். நமக்கு விடுதலை பெரிது, மூளைக்கு சாப்பாடு பெரிது. நமக்கு அன்பு, கருணை, விடுதலை, அகிம்சை, தயவு, புத்தர், கிருஷ்ணர் எல்லாம் முக்கியமானவை. இதெல்லாம் மூளைக்குப் புரியாது, பசி, தாகம், உடலின்பம், குழந்தைகள், பிறப்பு, இறப்பு, உடலைக் காப்பாற்றுவது இதில் தான் மூளைக்கு அக்கறை.
நாம் யார்? மூளை என்பது என்ன? இந்த வேறுபாடு தெளிவாகத் தெரிய வேண்டும். ஒரு நல்ல செய்தி என்னவென்றால், மூளைக்கு தனக்கு வெளியே உள்ளவற்றைத் தெரிந்து கொள்ளும் திறன் இருப்பது போல், திரும்பிப் பார்த்துத் தன்னைத்தானே புரிந்து கொள்ளும் திறனும் உண்டு. அதாவது ஒரு கம்ப்யூட்டர் புரோகிராமால் தன் புரோகிராம் என்ன என்று தெரிந்து கொள்ள முடியாது. ஆனால் நம் மூளையால் தன்னுடைய புரோகிராம் என்ன, ஆப்பரேட்டிங் சிஸ்டெம் என்ன என்று தெரிந்து கொள்ள முடியும். மனித மூளை ஒரு அற்புதமான படைப்பு. படிப்பறிவற்றவன் கையில் கிடைத்த லேட்டஸ்ட் மொபைல் போன் போல அதை வைத்துக்கொண்டு என்னென்னவோ செய்து கொண்டிருக்கிறோம்.
"உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்.
வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்."
தன்னை அறிந்து கொள்வது தான் வாழ்க்கை நெறி. நம்மை அறிந்து கொண்டால் நாலு பேர் என்ன சொல்வார்கள் என்று எண்ணிக் கலங்க வேண்டியதில்லை. புவியில் யாருக்கும் தலை வணங்க வேண்டாம். நாம் என்ன செய்ய வேண்டும் என்று யாரிடமும் போய் கேட்க வேண்டியிருக்காது, இறைவனிடமிருந்து நேரடி ஆணை வரும். இது தான் விடுதலை. பாருங்கள் விடுதலை என்ற சொல்லிலே விடு + தலை என்று இருக்கிறது. தலை என்பது நாம் அறிந்தவைகளை எல்லாம் குறிக்கும். ஜே.கிருஷ்ணமூர்த்தி இதைத்தான் அறிந்ததினின்றும் விடுதலை என்று சொல்வார்.
ஆசிரியர் : பரமேஸ்வரி
~ பரம்அத்வைத்.
No comments:
Post a Comment
To maintain goodness, all comments have been set to require moderation by the Admin