கற்கால மனிதர்கள் காட்டு மிராண்டிகளாய் வாழ்ந்த போது மிருகங்களை வேட்டையாடி உண்டார்கள். அவர்கள் அந்த உணவினை சாமிக்கு படைத்து விட்டு உண்ணும் பழக்கம் இருந்தது. மாமிசம் உண்பதும், வேட்டை ஆடுவதும் காட்டில் வாழ்ந்த மனிதனுக்கு மிகவும் சரியே. அனைத்து விலங்குகளும், உணவுக்கு மற்ற உயிர்களை சார்ந்தே இருக்கின்றன. ஒரு சிங்கம், மானை அடித்து உண்டு தான் வாழ முடியும். சிங்கம் மானை கொல்வது இயற்கையானது. தவறே இல்லை. மனிதர்களும் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை காட்டில் தான் வசித்து வந்தான். எனவே, அவனும் விலங்கு இனத்திலிருந்து உருவானவன் தான். ஆனால், அவன் முற்றிலும் மிருகம் அல்ல. விலங்குகளில் பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் எப்படி இருந்ததோ அப்படியே தான் இன்னும் இருக்கின்றன. அவற்றிற்கு வயிறே பிரதானம். வயிறு நிறைந்தால் அவற்றுக்கு வேறு பிரச்சினையே இல்லை. உணவு, இனப்பெருக்கம், எல்லை நிர்ணயித்தல், இன்று வரை விலங்குகள் இப்படித்தான் வாழ்ந்து வருகின்றன. அவை முழுக்க முழுக்க இயற்கையால் வழி நடத்தப்படுகின்றன. அவற்றிற்கு தானாக சிந்தித்து செயல் பட முடியாது.
மனிதனுக்கும், விலங்குக்கு மிகப்பெரிய வித்யாசம் உள்ளது. விலங்குகளுக்கு உடல் பிரதானம். மனிதனுக்கு மனம் பிரதானம். அந்த மனம் அமைதியை. தேடுகிறது. எந்த விலங்காவது நிம்மதி வேண்டும், விடுதலை வேண்டும் என்று கேட்டிருக்கிறதா? அவற்றிற்கு தேவை, உணவும் இருக்க பாதுகாப்ப்பான இடமும், அவ்வளவு தான். அவை நமக்கு இருந்தால் கூட நம்மால் மட்டும் ஏன் விலங்குகளைப்போல் படுத்து தூங்க முடியவில்லை? எதோ ஒன்று இல்லாதது போல், எதையோ தேடி அலைகிறோம் அது என்ன? ஏன் நாம் பல கல்வி கற்கிறோம்? அறிவியல், தொழில் நுட்பம், வானவியல், கணிதம், ஓவியம், இசை, நடனம், பொருளாதாரம் என்று நம் அறிவை விரிவு படுத்தி இருக்கிறோமே, எதற்கு? நாம் அடிப்படையில் விலங்குகள் அல்ல. நம் அடையாளம் உடல் அல்ல. நீ அழகாக இல்லை என்றால் கூட பரவாயில்லை என்று விட்டு விடுவோம், ஆனால், நீ முட்டாள் என்றால் நமக்கு கோபம் வருகிறதா இல்லையா? எனவே அறிவே மனிதர்களின் சிறப்பு. நான் யார் என்ற கேள்வியை மனிதன் மட்டும் தான் கேட்க முடியும். அந்த அறிவுக்கு பல விதமான வெளிப்பாடுகள் உண்டு. அன்பு, கருணை, பொறுமை, சந்தோஷம், திருப்தி, இவை அந்த அறிவின் பல பரிமாணங்கள்.
தான் யார் என்று அறியக்கூடிய நுட்பம் மனிதர்களின் சிறப்பு. தான் யார் என்று உணர்ந்த மெய் ஞானிகள் தன்னுள் உள்ள ஒன்றே உலகம் அனைத்திலும் உள்ளது என்று அறிந்தார்கள். அவர்கள் மட்டும் தான் உண்மையான அன்பை அறிந்தவர்கள்.
நம்மிடம் விலங்கு குணம் இன்னும் முழுவதுமாக நீங்கவில்லை. அன்பு என்பது ஒரு possibillity, potential ஆக மட்டுமே உள்ளது. அன்பில் வளர்ந்தவர்கள், வளர ஆசை படுபவர்கள், மற்ற உயிர்களுக்கு தீங்கு நினைக்க மாட்டார்கள். உடல் என்பது ப்ரக்ரிதி (இயற்கை) என்று சமஸ்க்ரிதத்தில் சொல்வார்கள், நம் உணர்வு நிலையை புருஷ (pure awareness) என்று சொல்வார்கள். விலங்குகள்இ யற்க்கை வழி வாழும். மனிதர்களிலும் பலர் அப்படித்தான் வாழ்கிறார்கள். ஆனால், தான் இந்த உடல், மனம் என்ற கட்டமைப்பிலிருந்து விடுபட்டு சுதந்திரமாய் வாழ விருப்பமுள்ளவர்கள் உயிர் இரக்கம் என்பதை கடைபிடித்தே ஆக வேண்டும்.
இறைச்சி சாப்பிடுவதே தவறு என்று நான் சொல்லவில்லை. மற்ற உயிர்களை துன்புறுத்த வேண்டும் என்ற எண்ணம் தான் தவறு. சிங்கம் மானைக்கொன்றால் தவறு அல்ல, ஆனால், மனிதன் கொன்றால், அது தவறு . சிங்கத்தின் உணர்வு நிலை (consciousness) மிக குறைவானது , மனிதன் உணர்வு நிலையில் உயர்ந்த இடத்தில் உள்ளான். அதே போல், உணர்வு நிலையில் உயர் நிலையில் உள்ள விலங்குகளை கொல்லுதல் சரியல்ல. அதனால் தான், மனிதனை பலி கொடுத்தால் காட்டு மிராண்டித்தனம் என்கிறோம். விலங்குளை பலி கொடுத்தாலும் அதே தான். தவறு என்றால் ஒன்றுமல்ல, துன்பத்திலிருந்து விடுதலை அடையத் தடை. அவ்வளவு தான். நா ம் உணவுக்காக மிகவும் குறைந்த அளவில் மற்ற உயிர்களை சார்ந்து வாழலாம். பழங்கள், காய்கறி, தானியங்கள் உண்பது நல்லது. பகவத் கீதையில் கிருஷ்ணரும் அவ்விதமே சொல்லி இருக்கிறார்.
கடவுள் நமக்கு அளவு கடந்த சுதந்திரத்தை அளித்து இருக்கிறார். நாம் விரும்பிய எதை வேண்டுமானாலும் உண்ணலாம், விரும்பிய எதையும் செய்யலாம். எனவே, நாம் யாரையும் இறைச்சி உண்ண தடை செய்ய முடியாது. இது அவரவர் விவேகத்தால் உணர்ந்து கொள்ள வேண்டிய ஒன்று. மனிதர்கள் எல்லோரும் பல படித்தரங்களில் இருக்கிறார்கள். யாரும் யாரையும் வற்புறுத்த முடியாது. நமக்கு எது சிறப்பு தரும் என்று அவரவர் உள்நோக்கிப்பார்த்து தெரிந்து கொள்ள வேண்டியது தான்.
No comments:
Post a Comment
To maintain goodness, all comments have been set to require moderation by the Admin