நிராலம்ப உபநிடதம்
கீதம் 1
குரு வணக்கம்
ஓம்!
மெய்யுணர்வாய் ஆனந்த உருவாய் - நலம்தரும்
குருவான சிவத்தை வணங்குகிறேன்.
பிரபஞ்சமற்ற, அமைதி வடிவான - சார்பில்லாத
ஒளிபொருந்திய பரமாத்மாவை வணங்குகிறேன்.
சார்பில்லாததை சரணடைந்து
சார்ந்திருத்தலை விட்டொழித்த
யோகியும் சன்யாசியுமான
அவனே விடுதலை அடைகிறான்.
அமைதி வேண்டி பிரார்த்தனை செய்த பிறகு, குரு வணக்கத்துடன் தொடங்குகிறது நிராலம்ப உபநிடதம். அறியாமையை அகற்றும் அறிவொளியையே முதன்மையான குரு என்று உபநிடதங்கள் கூறுகின்றன. எவ்வளவு பெரிய அறிவுரையை கேட்டாலும் , அதன் பொருள் என்னவென்று புரிந்து கொள்ளக்கூடிய ஒரு தத்துவம் நம் எல்லோருக்குள்ளும் இருக்கிறது. அதன் இருப்பில் தான், ஆமாம், எனக்கு விளங்குகிறது, சரி தான், என்று நாம் சொல்கிறோம். இந்த வாக்கியத்தை கூட, உங்களால் புரிந்து கொள்ள முடிகிறது என்றால், குரு என்ற தத்துவத்தால்(principle) தான்.
நம்முடைய சந்தேகங்களுக்கெல்லாம் விளக்கம் வெளியிலிருந்து தான் வருகிறது என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மையில், நமக்குள்ளே உள்ள குரு தத்துவம் அனைத்தையும் அறியும் தகைமை கொண்டது. வெளியிலிருந்து ஒரு பொருளை கேட்டாலும் கூட, அது சரியா தவறா என்று உள்ளுணர்வே அறிவிக்கிறது. அந்த உள்ளுணர்வையே குரு என்கிறோம். நாம் குருவைத்தேடி எங்கும் தேடி அலைய வேண்டியதில்லை, நமக்குள்ளே இருக்கக்கூடிய புரிந்து கொள்ளும் ஆற்றலே முதல் குரு ஆவார். அந்த குருவே மெய்யான குரு என்கிறார் உபநிடத ரிஷி.
எனவே, முதலில் நாம் நமக்குள் உள்ள குருவை வணங்க வேண்டும். அப்படியென்றால், அந்த குரு எப்படி இருப்பார்? மனது எல்லாவற்றிற்கும் ஒரு உருவம் கொடுக்க நினைக்கும். உருவமில்லாத ஒன்றை நினை என்றால் அதனால் அப்படி நினைக்க முடியாது. யானை என்றவுடன், நம் மனக்கண் முன்னே யானை வந்து நிற்கும். பட்டாம்பூச்சி என்றவுடன் வண்ணமயமான சிறகுடன் ஒரு பட்டாம்பூச்சி மனதுக்குள் வந்து விடும். குரு என்றவுடன், ஒரு முனிவரோ, வயதான பெரியவரோ, அல்லது நம்முடைய ஆசிரியரோ ஞாபகத்துக்கு வருவார். உபநிடத முனிவர், குருவின் வடிவம் எப்படி இருக்கும் என்று மூன்று வார்த்தைகளில் சொல்கிறார்.
முதலில் குரு நமக்குள்ளே உள்ள ஒரு தத்துவம் என்று பார்த்தோம்.
உண்மை,
இருக்கிறேன் என்ற உணர்வு,
இயல்பு நிலை அதை ஆனந்தம் என்றும் சொல்லலாம்.
கண்களை மூடிக்கொண்டோ அல்லது திறந்து கொண்டோ, எல்லா எண்ணங்களையும் ஒரு ஓரமாக வைத்துவிட்டு, ஒரே ஒரு நொடி நம்மால் சும்மா இருக்க முடியுமா? ஒன்றுமே நினைக்காமல், வெறுமனே இருக்க முடியுமா? ஒரே ஒரு நொடி மட்டும் தான். கண்டிப்பாக முடியும் இல்லையா? அந்த ஒரு நொடியில், நாம் இருந்தோமா அல்லது இல்லாமல் போய் விட்டோமா? எல்லாவற்றையும் மறந்து விட்டால் கூட, இருக்கிறேன் என்ற உணர்வு இருந்தது இல்லையா? அந்த ஒரு நொடியில் நமக்கு எந்த கவலையாவது இருந்தா? அது உங்களுக்கு புதிதான ஒன்றா அல்லது எப்போதுமே நீங்கள் அப்படி தான் இருந்திருக்கிறீர்களா? ஒரு வேளை, நீங்கள் நாளை அமெரிக்கா போய் விட்டால் அது இல்லாமல் போய் விடுமா? எல்லா காலங்களிலும், எல்லா இடங்களிலும், மாறாமல் இருக்கக்கூடிய உள்ளுணர்வை உங்களால் அடையாளம் காண முடிகிறதா? எளிமையாக இருக்கிறது இல்லையா? இயல்பானதாக இருக்கிறது இல்லையா? ஆனால், இதையே சமஸ்கிருதத்தில் சத், சித், ஆனந்தம் என்று சொன்னால் ஒன்றுமே புரியவில்லையே என்று குழம்பிப்போய் விடுவோம். என்னவோ தத்துவமெல்லாம் பேசுகிறார்கள், எனக்கு சமஸ்கிருதம் தெரியாது, என்னால் புரிந்து கொள்ளவே முடியாது என்று புத்தகத்தை மூட்டை கட்டி வைத்து விடுவோம்.
நமக்கு எளிமையாக நம் மொழியில் சொன்னால் புரிகிறது இல்லையா? அவ்வளவு தான்.
குருவின் பார்வை பட்டால் துன்பங்கள் அனைத்தும் விலகும் என்பார்கள். கை விளக்கின் ஒளி பட்டவுடன் இருள் விலகுவது போல் குருவின் அறிவொளி பட்டவுடன் அறியாமை அகன்று விடும்.
குரு என்பது நமக்குள் உள்ள உயர்ந்த தத்துவம். நம்மை வழிநடத்தும் நல்லறிவு. அந்த நல்லறிவை துணை கொண்டே இந்த உலகம் என்னும் பெருங்கடலை நீந்திக் கடக்க முடியும். அந்த குருவுக்கு தலை வணங்குவோம். குருவே சிவம்.
குருவை பணிந்தால், வேறு யாருக்கும் பணிய வேண்டிய கட்டாயம் வராது. அப்படிப்பட்ட குருவை சரணடைதலே நலமாக வாழும் வழியாகும்.
வாழ்வில் நமக்கு எத்தனையோ அனுபவங்கள் ஏற்படுகின்றன. ஆனால், நாம் அனைவரும் அவற்றிலிருந்து பாடங்கள் கற்றுக்கொள்வதில்லை. யாரோ ஒரு நியூட்டனுக்கு மட்டுமே புவிஈர்ப்பு விசை பற்றிய அறிவு கிடைத்தது. யாரோ ஒரு புத்தருக்கு மட்டும் வாழ்வின் நிலையாமை புரிந்தது. நம்முடைய அனுபவங்கள் நம்மை (wise) மாண்புடையவர்களாக ஆக்கவில்லை. எனக்கு நல்ல குரு கிடைக்கவில்லை, அதனால் தான் நான் அறியாமையில் இருக்கிறேன் என்பது சரியல்ல. நம் அறியாமைக்கு காரணம், நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பவே இல்லை. நாம் கேள்விகளே கேட்கவில்லை. உண்மை அறிவை ஒதுக்கி விட்டு, மற்றவர்கள் கூறுவதையும், வழக்கத்திலுள்ளவைகளையும் அப்படியே ஏற்றுக்கொண்டு விட்டோம். மாணவன் அழைத்தால் தான் குரு வருவார்.
எனக்கு தெரியாது என்று முதலில் தெரிந்து கொள்வதே அறிவதற்கு முதல் படி. எனக்கு எல்லாம் தெரியும் என்றால், புதிதாக எதையும் கற்றுக்கொள்ளவே முடியாது.
எதையும் அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், இது என்ன? எப்படி? எங்கே? யார்? என்று நேர்மையுடன் கேள்விகள் கேட்டுப்பழக வேண்டும். அப்போது தான் குரு தன்னை வெளிப்படுத்திக்கொள்வார். உள்ளே வடிவமற்றும், வெளியே வடிவத்துடனும்.
மேலும் விளக்கமாக அடுத்த வகுப்பில் பார்ப்போம்.

No comments:
Post a Comment
To maintain goodness, all comments have been set to require moderation by the Admin