Pages

Saturday, June 1, 2024

நிராலம்ப உபநிடதம் - நிறைவிலிருந்து நிறைவு உண்டாகும்

நிராலம்ப உபநிடதம் 

சாந்தி பாடம் 

இது நாள் வரை  பட்ட கஷ்டங்களெல்லாம் போதும்.  இனியாவது நிறைவாய் வாழவேண்டும் என்று ஏங்கும் மனதுக்கு ஆறுதலாகவும் அதே சமயம் அதிரடியாகவும்  வருகிறது -  சாந்தி பாடத்தின் இரண்டாவது வரி!

"நிறைவிலிருந்தே நிறைவுண்டாகும்."

அப்படியென்றால் குறைவிலிருந்து குறையே உண்டாகும் இல்லையா? அப்படித்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். 

 நாம் எப்படியோ  நம் உலகமும் அப்படியே!   நம்மிலிருந்து உண்டானது தான் உலகம்.  நான் நிறைவாக இருந்தால் உலகமும் நிறைவாக இருக்கும். எனக்கு ஏதோ குறை, நான் சரியில்லை என்றால் என் உலகமும் அது போலவே  அமையும்.

உதாரணத்திற்கு, உங்களை நீங்கள் ஒரு குடும்பத்தை  சேர்ந்தவராக நினைக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.  நான், என் மனைவி, இரண்டு குழந்தைகள் இவை தான் என் உலகம்.  நான்கு சுவர்களுக்கு உள்ளே என் உலகம், சுவருக்கு வெளியே எல்லாரும் மற்றவர்கள், வெளி ஆட்கள், அவர்களுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை.  மீறி மீறி போனால் நெருங்கிய சொந்த பந்தங்கள் எல்லாரும் சேர்ந்து பத்து பேருக்கு மேல் என் உலகில் இருக்க மாட்டார்கள்.  இந்த உலகில் குறை தான் இருக்கும். நிறைவு இருக்க முடியாது.  நான் வேறு  என்று எப்போது  பிரிவினையை கொண்டு வந்தோமோ அப்போதே  குறை பட்டு விட்டோம். நம் உலகம் குறுகிப்போய் விட்டது. 

நீங்கள் ஒரு கார்பொரேட் அலுவலகத்தில் வேலை செய்கிறீர்கள் என்றால், உங்களுக்கு ஒரு அடையாள அட்டை கொடுத்திருப்பார்கள்.  அதை அணிந்து கொண்டு போனால் தான் உள்ளே விடுவார்கள்.  உள்ளே போனால் உங்கள் உலகமே வேறு.  வீட்டில் அப்பா, அலுவலகத்தில் புராஜெக்ட் மேனேஜர், நண்பர்களுடன் பார்ட்டியில் இருக்கும் போது,  அந்த உலகமே வேறு. 

நம்மை நாம் எந்தப் பொருளோடு  சேர்த்து அடையாளப்படுத்திக்கொள்கிறோமோ, அது போலவே நம் உலகம் உருவெடுக்கும்.  அது, ஒரு பொருளாக இருக்கலாம், மனிதராக இருக்கலாம், குணமாக இருக்கலாம், அல்லது ஒரு கருத்தாக, சித்தாந்த்தமாக  கூட இருக்கலாம்.  மொத்தத்தில், குறைவு பட்ட ஒரு பொருள்.  நாம் முன்பே பார்த்தோம் -  இவ்வுலகில் உள்ள அனைத்தும் அளவு, எண்ணிக்கை, கால வரையறைக்கு உட்பட்டது.  எதுவும் நிரந்தரம் இல்லை. எனவே, குறைபாடானது.    நாம் ஏன் நிறைவாய் இருக்க முடியவில்லை என்று இப்போது புரிந்திருக்கும்.  நாம் விரும்பியதோ  நிலைக்க, நீடிக்க, விரிவடைய, ஆனால், நம்மை இணைத்துக்கொண்டதோ நிலைக்காத, நீடிக்காத, குறுகிய பொருட்கள். ஆயிரம் கோடிகள் வங்கியில்  இருந்தாலும் அதுவும் கணக்கில் அடங்குவது தானே.  

நன்றாக புரிந்து கொள்ளுங்கள் - ஏதாவது ஒன்றை கணக்கிட முடியும், அளவிட முடியும் என்றால் அந்தப்பொருள் உங்களை நிறைவு செய்யாது. இது இயற்கை நியதி!

ஆசைகளே துன்பத்துக்கு காரணம் என்பார்கள்.  ஆனால், அதற்கும் முன்பாக,  ஒரு காரணம் இருக்கிறது.  அதைபற்றி யாருமே நமக்கு சொல்லவில்லை.  சும்மா நமக்கு காரணமில்லாமல்  ஆசை வருவதில்லை. ஆசை வரவும் ஒரு காரணம் இருக்கிறது. நமக்குள் இருக்கும் உணர்வு அது. இன்னதென்று சொல்ல முடியாத ஒரு தவிப்பு நம் எல்லோருக்குள்ளும் இருக்கிறது.  அந்த தவிப்பு நம்மை நிம்மதியாக இருக்க விடுவதில்லை.  ஏதாவது செய்து அதன் துன்பத்தை தனித்தாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது.  அது தன்னை நிறைவு செய்து கொள்வதற்காக பல பொருட்களோடு சம்பந்தம் ஏற்படுத்துகிறது.  பொருட்கள் இயல்பிலேயே குறையானவை. அதனால்,  இந்த சம்பந்தங்கள் யாவும் அதன் குறையை தீர்ப்பதற்கு பதிலாக,  அதை மேலும் மேலும் பந்தப்படுத்தி விடுகின்றன.  இது நம் ஒவ்வொருவரின் கதை ஆகும்.  அந்த உணர்வை "சேதனா" என்றும் "விழிப்புணர்வு" என்றும் "Consciousness" என்று சொல்வார்கள்.  

"நிறைவிலிருந்து நிறைவு உண்டாகும்" என்று ரிஷிகள்  சொல்வதன் அர்த்தம் என்ன?

நிறைவு என்றால் நம் கண்முன் ஒரு குடம் தண்ணீரால் நிறைந்திருப்பது போலவும், வீட்டில் நகை, பணம்,  பொருட்கள்  யாவும் நிறைந்திருப்பது  போலவும், ஆசைப்பட்டதெல்லாம் அடைந்து விட்டதை போலவும் கற்பனை வரும். இப்படிப்பட்ட கற்பனைகளால் தான், பிரமைகளால் தான் இப்போது இவ்வளவு பெரிய கஷ்டத்தில் சிக்கிக்கொண்டிருக்கிறோம். 

 உண்மையில் நிறைவு என்றால்,  புதிதாக வெளியிலிருந்தது ஏதோ ஒன்றை கொண்டு வந்து நிறைப்பது கிடையாது.  ஏற்கனவே  நிறைந்து கிடக்கும் குப்பைகளை ஒதுக்கி தள்ளுவதாகும்.   

உதாரணத்திற்கு, ஆரோக்கியம் என்பது வெளியிலிருந்து வருவதா அல்லது நமக்கு இயல்பாக இருப்பதா?  ஆரோக்கியமாக இருக்கவென்று எந்த மருந்தும் மாத்திரையும் கிடையாது.  நோய்க்கு தான் மருந்தும் மாத்திரைகளும்.  நோய் நம்மை விட்டுப் போனால் ஆரோக்கியம் தானாக இருக்கும்.   சுத்தம் என்பதை ஏற்படுத்த முடியாது.  குப்பைகளைத் தான் வெளியில் வீச வேண்டும். குப்பைகளை ஒழித்தால் வீடு தானாக  சுத்தமாகி விடும்.  

மனநிறைவும் அது போலத்தான்.  நீங்கள் மனநிறைவை கொண்டு வர முடியாது.  ஆனால், குறைகளை களைந்தால் மனநிறைவு தானாக ஏற்படும். அப்படிப்பட்ட நிறைவான மனத்திலிருந்து நிறைவான உலகம் உருவாகும்.  

நம் உலகம் இப்போது இருக்கும் நிலைக்கு காரணம், நாம் நம்மை நிறைவு படுத்த இயற்கையை அழித்த காரணம் தான்.  துன்பத்தில் இருப்பவனிடம் அன்பை, கருணையை எதிர்பார்க்க முடியாது.  அவன் தன் துன்பத்தை தீர்த்துக்கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்வான்.  அதனால் தான், நம் ரிஷிகள் துன்பத்திலிருந்து விடுதலை என்பதையே வாழ்வின் குறிக்கோளாக வைத்தார்கள்.  

நம் குறைகள் நீங்கி, நாமும் நிறைவான  வாழ்க்கை வாழ முடியும்.  நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்திருக்கிறீர்கள்.  உங்கள் உலகத்தில் உபநிடதங்கள் வந்து விட்டன என்றால், உங்கள் வாழ்க்கை மேன்மையடைய  ஆரம்பித்து விட்டது என்று தெரிந்து கொள்ளுங்கள். 








No comments:

Post a Comment

To maintain goodness, all comments have been set to require moderation by the Admin