Pages

Thursday, May 30, 2024

நிராலம்ப உபநிடதம் - சாந்தி பாடம்.

 நிராலம்ப உபநிடதம் ஆரம்பம் 


முதல் பாடல்  - சாந்தி பாடம்


ஓம் பூர்ணமத பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்சதே 

பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ண மேவா வஷிஷ்யதே 


ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி!


ஓம் 

அதுவும் நிறை இதுவும் நிறை  

நிறைவிலிருந்து நிறைவுண்டானது 

நிறைவிலிருந்து  நிறைவை நீக்கினாலும் 

நிறைவே எஞ்சியிருக்கும்.


அமைதி! அமைதி! அமைதி! 


அனைத்து உபநிடதங்களும் கடவுள் வணக்கத்துடன்  தொடங்குகின்றன. அதை சாந்தி பாடம் என்பார்கள்குறிப்பிட்டு எந்த ஒரு கடவுள் பெயரோ, பரமண்டலத்தில் வாழும் பரம  பிதா என்றோ, நம்மை மீறிய ஒரு சக்தி என்றோ எந்த விதத்திலும் இறைவனை பற்றி பேசுவதில்லைஉண்மை, சத்தியம் அல்லது பிரம்மம்  என்ற வார்த்தைகளை நாம் காணலாம். இவை அனைத்தும் ஒரே பொருளில் பேசப்படுகிறதுஎனவே, உபநிடதங்கள் படிக்க கடவுள் நம்பிக்கை அவசியமில்லைகடவுள் நம்பிக்கை இல்லாவிட்டால் இன்னமும் உத்தமம் என்றே சொல்வேன்ஏனென்றால், நம்பிக்கை என்பது உண்மையை அறிவதற்கு தடையாகத்தான் இருக்கும்ஒன்றை நம்பி விட்டால், அதை கேள்வி கேட்காமல், ஆராயாமல் ஏற்றுக்கொண்டு விட்டோம் என்று ஆகிறதுஉபநிடதங்களின் முழு செயல்முறையுமே , கேள்வி கேட்டு, ஆராய்ந்து பகுத்தறிவின் துணை கொண்டு விளங்கிக்கொள்ளும் செயல் முறையாகும்ஒரு குழந்தையின் ஆர்வத்தோடு, நல்ல மாணவனின் சிரத்தையோடு, நேர்மையாக சிந்திக்க தயாராக உள்ள அனைவரையும் உபநிடதங்கள் அன்போடு  வரவேற்கின்றன.  


வாழ்வில் தான் அறிந்துகொண்ட அறிவின் சாரத்தை இரத்தின சுருக்கமாக, மனித குலம் படித்து பயன் பெறுவதர்காக பல ரிஷிகளும் இந்த பாடல்களை நமக்காக விட்டுச்சென்றிருக்கிறார்கள்இது கிடைப்பதற்கரிய மாபெரும் பொக்கிஷம்.  


நிராலம்ப என்றால் சார்ந்திருக்காமல் இருப்பது. Non - Dependency  சார்ந்திருப்பதே துன்பத்துக்கு காரணம் என்பது இந்த உபநிடதத்தின் மையக்கருத்தாகும். இதை தெளிவு படுத்தவும், நம்மை தற்சார்புடையவர்களாக வாழ வழி சொல்வதும் தான் இந்த உபநிடதத்தின்  நோக்கமாகும்


உபநிடதத்தின் முதல் பாடலே அருமருந்தாக அமைந்திருக்கிறது.  


பூரணம் என்றால் முழுமை, நிறைவு.  


அதுவும் நிறை, இதுவும் நிறை! - இப்படி தான் ஆரம்பிக்கறது நிராலம்ப உபநிடதத்தின்  சாந்தி பாடம்.


 ரிஷிகளின் மொழி கோட் வர்ட் (code word) போல் நுட்பமானதாக இருக்கும். அனைவருக்கும் விளங்காது. எனவே தொடக்கத்தில் நமக்கு இதை விளக்கி சொல்ல தகுதியான ஒரு குருவின் உதவி தேவைப்படும்பிறகு நாமே சுலபமாக படித்து புரிந்து கொண்டுவிட முடியும். அதனால் தான் இதை "மறை பொருள்" என்று சொல்கிறார்கள்


அது, இது என்றால் எது? இங்கே இருக்கும் நானும், அங்கே இருக்கும் உலகமும். அதாவது, நானும் நிறை, இவ்வுலகமும் நிறை என்கிறார்சாதாரனனமாக, நமக்கு எப்படி தோன்றுகிறதுநாம் நிறைவாக இருப்பதாக தோன்றுகிறதாஅல்லது, இந்த உலகம் தான் நிறைவாக இருப்பதாக தோன்றுகிறதாஇரண்டுமே கிடையாதுநான் குறையோடிருக்கிறேன், இந்த உலகமும் குறைபாடானது. இது தான் நம்முடைய அனுபவமாக இருக்கிறதுநாம் எப்போதுமே நிறைவாய் இருப்பதாக உணர்ந்ததில்லைநான் சரியில்லை என்பது தான் நம் ஆழமான நம்பிக்கைஅதே போல், இந்த உலகமும் சரியில்லை என்றே நினைக்கிறோம்நிறைவு என்றால், எந்தக்குற்றமும் குறையும் இல்லாமல் முழுமையாக இருப்பதுநமக்கோ குற்றம் குறை தான் வாழ்க்கையேஇந்த ரிஷியோ அதுவும் நிறை, இதுவும் நிறை என்று சொல்லி முதல் வரியிலேயே நம் நம்பிக்கையை கேள்விக்குரியதாக ஆக்குகிறார்நம்மால் நம்பவே முடியவில்லைஎன் குறைகள் தான் நன்றாக தெரிகிறதேநான் குள்ளம், அறிவில்லாதவன், சோம்பேறி,கோபக்காரன் - நான் எப்படி நிறைவாக  இருக்க முடியும்?  


இது நிறைவாய் இருந்தால் அதுவும் நிறைவே


நம்மிடம் உள்ள குறைகளே நமக்கு பெரிதாக தெரிந்தாலும்நிறைவான ஒன்றிற்காக நாம் ஒவ்வொருவரும் ஏங்கிக்கொண்டிருக்கிறோம். மனநிறைவு வேண்டும் என்று தானே எல்லா வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறோம். எதற்காக பணம் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறோம்? நிறைவாய் வாழலாம் என்று தானேஎதற்காக நிறைய படிக்கிறோம்மனநிறைவுக்காக தானேவீடு, மனைவி, மக்கள், செல்வம், பதவி, புகழ், மதிப்பு, மரியாதை, கலை, அறிவியல் எல்லாம் எதற்காகநமக்குள் ஏதோ ஒரு குறை இருக்கிறது அல்லவா, அந்த குறை நீங்கி மனம் நிறைவடைய வேண்டும் என்பதற்காக தானே!  


ரிஷி சொல்கிறார் - நீ நிறைவாக இருந்தால் உலகமும் நிறைவாக இருக்கும்.  


எப்படி?


உண்மையில் குறை என்று ஒன்று இருந்தால், அதை நிரப்புதல் கடினமான காரியம் கிடையாது. எத்தனையோ அரசர்களும், பணக்காரர்களும் , அறிவியல் ஆராய்ச்சியாளர்களும், கலைஞர்களும்இவ்வுலகில் வாழ்ந்திருக்கிறார்கள்யாராவது ஒருவராவது குறை இல்லாமல் வாழும் வழியை கண்டுபிடித்திருப்பார்கள். அப்படி யாருமே கண்டுபிடித்ததாக தெரியவில்லைகடைசி வரை ஏதாவது குறையோடே தான் இருந்திருக்கிறார்கள்நம்முடைய அனுபவத்தையே எடுத்துக்கொள்ளுங்களேன்இருபது வருடங்களுக்கு முன் நாம் ஆசைப்பட்டதெல்லாம் இப்போது ஏறக்குறைய அடைந்து விட்டோம்பைக்கில் போய்க் கொண்டிருந்தோம், இப்போது காரில் போகிறோம், வாடகை வீட்டில் இருந்தோம், இப்போது சொந்த வீட்டில் இருக்கிறோம், கையில் காசில்லாமல் மாதக்கடைசியில் கடன் வாங்குவது போய், வங்கி கணக்கில் கோடிகளை தொட்டு விட்டோம்நம் குறைகள் தீர்ந்து விட்டதா என்னநன்றாக யோசித்துப்பாருங்கள், நம் குறைகள் இன்னும் ஆழமாகி விட்டது தெரியும்கயிற்று கட்டிலில் நிலாவை பார்த்துக்கொண்டு படுத்திருந்த நிம்மதி  இப்போது ஏசி அறையில் தேக்கு மரக் கட்டிலில்  படுத்திருக்கும் போது  இல்லை.  


நாம் நம் குறைகளை தீர்த்துக்கொள்வதற்காக  இவ்வுலகில் தேடி அடைந்ததெல்லாம், மேலும் மேலும் குறைபாடே!  


பொருள் என்பதன் இலக்கணமே குறை, limitation. பொருளுக்கு  எல்லை உண்டுஅதன் எல்லையே அதன் குணம். எல்லா பொருட்களும்  நீளம், அகலம், நிறம், பண்புகாலம் என்ற எல்லைகளுக்குட்பட்டவைஅதாவது, இவ்வுலகில் உள்ள பொருட்கள் அத்தனையும் குறையானது தான்முழுமை என்று எதுவும் இருக்க முடியாதுஇந்த உலகில் உள்ள பொருட்கள், மனிதர்கள், சூழ்நிலைகள் யாவுமே அளவுக்கு உட்பட்டதுஎண்ணிக்கைக்குள் அடக்கி விடலாம்.  


குறைபட்ட மனது தன் குறையை தீர்த்துக்கொள்ள உலகில் ஏதாவது ஒரு பொருளை  நோக்கி பாய்கிறதுஅந்த பாய்ச்சலுக்கு பெயர் தான் ஆசை.   


குறையையே தன் குணமாக கொண்ட உலகப்பொருட்கள்  நிறைவை ஏற்படுத்த முடியாது


அது இயற்கை விதியின் படி சாத்தியமில்லாத ஒன்று.  


அதனால் தான் துக்கம். இதுவே துக்கம்


இந்த உடல் என்பது ஒரு பொருள்இது எல்லைக்குட்பட்டதுஇன்னும் சில வருடங்களில் இல்லாமல் போய் விடும்இந்த உடலே நான் என்று நினைப்பதால் நான் குறையானவன் என்ற நினைப்பு வருகிறதுநான் கருப்பு, நான் அழகில்லை, எனக்கு வயசாகி விட்டது, நான் ஆரோக்கியமாக இல்லை என்றெல்லாம் சொல்கிறோம்உண்மையில், உடலை "நான்" என்று நினைத்ததே குறை உணர்வை ஏற்படுத்தி விட்டதுஉடலின் குறைகள் எல்லாம் நம் குறைகள் என்று ஆகி விடுகிறதுஇதைக் குறை உணர்வு என்பது பசி போன்றதுஇதை தீர்ப்பதற்காக நாம் என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராகி விடுவோம். எத்தை தின்னா பித்தம் தெளியும் என்ற ஒரு பழமொழி இருக்கிறதில்லயா, அது போல் தான்நம் குறை உணர்வு தன்னை நிறைவு செய்து கொள்ள, உலகை நோக்கி பாய்கிறது. இதுவே ஆசை


இப்போதுள்ள  உலகை பாருங்கள். உலகம் நம் ஆசைகளின் பலிகடாவாகி (victim ) விட்டது தெரியவில்லையா?


இயல்பில் நமக்கு குறையொன்றும் இல்லைஇதை புரிந்து கொண்டால்இவ்வுலகிலும் குறைகள் இருக்காது. 


குறை என்பது உண்மையில் கிடையாதுஅது நம்முடைய கருத்தாக்கம்கற்பனை!


இந்த உலகில் எல்லாமே அளவுக்குட்பட்டது, எண்ணிக்கையில் அடங்குவதுஆனால், நம்முடைய இருத்தல் அளவுக்குட்படாததுஎவ்வளவு சம்பளம்  என்று கேட்டால் எண்ணிக்கையில் சொல்லி விடலாம், ஆனால், எவ்வளவு அன்போடு  அந்த வேலையை செய்கிறீர்கள் என்று கேட்டால் அதை அளவீடு செய்ய முடியாதுஅம்மாவை உனக்கு எவ்வளவு பிடிக்கும் என்று குழந்தையிடம் கேட்டால் அந்த குழந்தை பதில் சொல்ல தடுமாறும்நமக்கே பதில் தெரியாது, இல்லையாஅன்பை அளக்க முடியாதுஅது குறைவில்லாதது


இனி அடுத்த வரி 


"நிறைவிலிருந்தே நிறைவு உண்டாகிறது." 



No comments:

Post a Comment

To maintain goodness, all comments have been set to require moderation by the Admin