பிரபஞ்சமற்ற, அமைதி வடிவான - சார்பில்லாத
ஒளிபொருந்திய பரமாத்மாவை வணங்குகிறேன்.
குருவை வணங்கிய பின் பரமாத்மாவை வணங்குகிறார் ரிஷி. நம்முள் இருக்கும் உயர்ந்த தத்துவமே குரு. குருவின் அருளால் நம் மனக்குறைகள் தீர்ந்து போகும். தெளிவு பிறக்கும். மிகுந்த நன்மைகள் உண்டாகும் என்று அறிந்தோம். பொதுவாக குருவை படகோட்டி என்று சொல்வார்கள். நம்மை கரை சேர்க்கக்கூடியவர். அவருடைய உதவியால் தான் வாழ்க்கை என்னும் கடலை கடக்க முடியும். கடலைக் கடந்த பின் படகு நமக்கு தேவைப்படாது இல்லையா? நாம் சேர வேண்டிய இடம் வந்தவுடன் படகை விட்டு இறங்கிவிட வேண்டும். எவ்வளவு தான் உபயோகமாக இருந்தாலும், படகு என்பது நாம் சேர வேண்டிய இடம் அல்ல.
நாம் சேர வேண்டிய இடம் எது? அது எங்கே இருக்கிறது? எப்படி போக வேண்டும்?
உங்களுக்கு தாகமாக இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். வாய் வறண்டு போய் தவித்துக்கொண்டிருக்கிறீர்கள். அங்குமிங்கும் ஏதாவது கிடைக்காதா என்று தேடிக்கொண்டிருக்கிறீர்கள்.
இப்போது உங்களை கேட்கிறேன் சொல்லுங்கள் - தண்ணீர் என்று ஒன்று உண்டா இல்லையா?
தண்ணீர் என்று ஒன்று உள்ளது என்று உங்களால் உறுதியாக சொல்ல முடியுமா?
தண்ணீர் என்று ஒன்று இல்லாமல் கூட போகலாம் அல்லவா?
கண்டிப்பாக தண்ணீர் இல்லாமல் போகவே முடியாது. ஏனென்றால், உங்களுக்கு தாகம் இருக்கிறதே! தாகம் உண்மையானால் தண்ணீர் இருப்பதும் உண்மையாகும். அது போலவே, நாம் வாழ்வில் எதையோ தேடி அலைந்து கொண்டிருக்கிறோம் என்றால், மனநிறைவு என்ற ஒன்று இருக்கிறது என்று தானே பொருள். நம் தேடலே அதற்கு சாட்சி. அந்த திருப்தியை, மனநிறைவைத் தான் பரமாத்மா என்கிறோம். ஆத்மா என்று சொல்வது கூட சரி தான். ஆனால், ஆத்மா என்ற வார்த்தையை பொது மக்களாகிய நாம் மிகவும் களங்கப்படுத்தி விட்டதால், ரிஷிகள் பரமாத்மா என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளார்கள்.
எனவே, நாம் அனைவரும் ஏதேதோ தேடி அலைவது போல் தோன்றினாலும், நமக்கு அதன் மூலமாக தேவைப்படுவது ஒன்று தான், அது, திருப்தி, நிம்மதி, மனநிறைவு.
தேடிய பொருள் கிடைத்தது, ஆனால் ஆசை மட்டும் அடங்கவில்லையென்றால் தேடி அடைந்ததில் பயனே இல்லை.
அந்த ஆசையற்ற தன்மை தான் பரமாத்மா. மௌனமே அதன் மொழி.
பிரபஞ்சம் என்றால் என்ன?
உலகம்.
நம்மால் உணர முடியக்கூடிய அத்தனையும் பிரபஞ்சம் என்ற ஒரு சொல்லில் அடக்கி விடலாம். நாம் பார்த்து, தொட்டு, முகர்ந்து, கேட்டு, உணர்ந்து வெளியே அறிந்து கொள்ளக்கூடியதும், , நமக்குள் எண்ணம், உணர்வுகள், நினைவுகள் என்று நமக்கு உள்ளே நாம் அறிந்து கொள்ளக்கூடியவை அனைத்தும் சேர்ந்தது தான் உலகம்.
மொத்தத்தில், அறிந்து கொள்ள முடிந்தது யாவும் பிரபஞ்சத்துக்குள் அடக்கம். பரமாத்மா பிரபஞ்சமற்றது.
இந்த பிரபஞ்சத்தில் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சார்ந்து தான் இருக்கும். உதாரணத்துக்கு, உங்களையும் இந்த உலகத்தையும் பிரித்தே பார்க்க முடியாது. நீங்கள் இருக்க வேண்டுமென்றால், ஏதோ ஒரு இடத்தில் தான் இருக்க வேண்டும். இடம் என்று ஒன்று இல்லாமல், நீங்கள் மட்டும் தனித்து இருக்க முடியாது. அதே போல், நீங்கள் இல்லாவிட்டால், இந்த உலகம் இருக்க முடியாது. நீங்கள் இருப்பதால் தான் உலகத்தை பார்த்து இருக்கிறது என்கிறீர்கள். எனவே, நீங்களும் உலகமும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கிறீர்கள்.
பிரபஞ்சமற்ற, சாராத, அந்த ஒளிவீசும் பரமாத்மவை வணங்குவோம்! இப்படி, நேர்மறையாகத்தான் பரமாத்மாவை விவரிக்க முடியும். சுத்தம் என்பதை எப்படி நேரடியாக சொல்லி புரிய வைப்பீர்கள்? குப்பைகள் இல்லையென்றால் சுத்தம். வெளிச்சம் என்றால் என்ன? இருட்டு இல்லையென்றால் வெளிச்சம். அது போலவே, பரமாத்மா,
பிரபஞ்சம் அற்றது! சார்பு அற்றது! மௌனம்! ஒளி!
நாம் தண்ணீர் எப்படி இருக்கும் என்று கனவு காண்பதை விட, அது பற்றி புத்தகங்களில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்று ஆராய்ச்சி செய்து கொண்டு உட்கார்ந்திருப்பதை விட, தண்ணீர் எங்கே என்று தெரிந்து கொண்டு அதை நோக்கி பயணம் செய்வது நல்லது. ஏனென்றால், நாம் இருக்கும் நிலையில், நாம் இருக்கும் இடத்தில் தாகமும், தவிப்புமே நம் அனுபவமாக இருக்கிறது. நம் தாகம் தீர வேண்டுமென்றால், விசாரிக்க வேண்டும். எங்கே தண்ணீர் உள்ளது? எப்படி அங்கே செல்வது? ஒரு நல்ல குருவின் உதவியோடு நாம் நம் பயணத்தை மேற்கொள்ள ஆரம்பிப்போம்.
இந்தப்பயணம் வெளியுலகத்தை நோக்கிய பயணம் அல்ல. நமக்குள் நம்மை நோக்கிய பயணம்.
போகுமிடம் தொலைவிலும் இல்லை, அருகாமையிலும் இல்லை.
மௌனம் நம்மிலிருந்து எத்தனை தொலைவில் உள்ளது?
அதை அடைய எவ்வளவு தூரம் போக வேண்டும்?
இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இப்போதைக்கு இந்தக் கேள்விகள் உங்களுக்குள் இருக்கட்டும்.

No comments:
Post a Comment
To maintain goodness, all comments have been set to require moderation by the Admin