Pages

Tuesday, June 4, 2024

நிராலம்ப உபநிடதம் - அமைதி உண்டாகட்டும்!



சாந்தி பாடம் 

ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி என்று மூன்று முறை உச்சரித்து நிறைவு பெறுகிறது. சாந்தி என்றால் அமைதி.  மூன்று முறை அமைதியை வேண்டுகிறார்கள்.

எந்த செயலையும் தொடங்கும் போது அமைதியான மனதுடன் தொடங்க வேண்டும்.  மனம் சஞ்சலமாக இருந்தால் நம்மால் செயலை சரியாக செய்ய முடியாது.  இப்போது நாம் உபநிடதம்ப டிக்க ஆரம்பிக்கப் போகிறோம். கவனத்துடன் பாடங்களை படிக்க வேண்டும்.  

பொதுவாக மூன்று விதமான கவனக்கலைப்பு இருப்பதாக சொல்கிறார்கள்.  சுற்றுப்புற சூழ்நிலை, உடல் மற்றும் மனம்.  ஒருவேளை, நம் வீட்டில் எல்லோரும் சண்டையிட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்.  நம்மால் அங்கே உட்கார்ந்து படிக்க முடியாது இல்லையா?  இது சூழ்நிலையால் வந்த தொந்தரவு.  

நீங்கள் படிக்கலாம் என்று உட்காரும் போது தான்  முட்டு வலி,  வயிற்று வலி என்பது போல் வலிகள் வரும். நம் கவனமெல்லாம்  உடம்பின் மேல் தான் இருக்கும். இது உடலால் ஏற்படும் தடை.  

மூன்றாவது, நம் மனமே அலைபாய்ந்து கொண்டிருப்பது. நடந்ததையோ, நடக்கப்போவதையோ எண்ணிக்கொண்டு கற்பனையில் இருப்பது, எதையாவது  நினைத்து வருத்தப்பட்டுக்கொண்டு இருப்பது, இதெல்லாம் மனதளவில் உள்ள தடைகள்.  இந்த மூன்று விதமான தடைகளும் நீங்கி, மனது அமைதியோடு இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறார்கள்.  

இதற்கு, ஆழ்ந்த மற்றொரு விளக்கமும் உள்ளது.  நமக்கு மூன்று விதமான துன்பங்கள் ஏற்படுகிறது. அந்த மூன்று விதமான துன்பங்களிலிருந்தும் மனம் விடுதலை பெற்று அமைதி அடைய வேண்டி பிரார்த்திக்கிறார்கள்.

மூன்று விதமான துன்பங்கள் என்னென்ன?

அறிந்தது, அறியாதது, அறிய முடியாதது என் மூன்று விதமான துன்பங்கள் நமக்கு ஏற்படுகின்றன.

சில துன்பங்களுக்கு காரணம் நமக்கு நன்றாகவே  தெரியும்.  என் மொபைல் போன் காணாமல் போய் விட்டது, அதனால் கவலையாக இருக்கிறேன்.  பிசினஸில் நஷ்டம் ஆகி விட்டது.  உடம்பு சரியில்லை.  இந்த வகையான துன்பங்களுக்கான காரணங்கள் வெளிப்படையாக தெரிகின்றன.  இவை அறிந்த துன்பங்கள். 

சில துன்பங்களுக்கு நமக்கு காரணம் அப்போதைக்கு தெரியாது.  எதற்கு வந்தது, ஏன் வந்தது என்று புரியாது.  நன்றாக படித்துக்கொண்டிருந்த  மகன் திடீரென்று படிப்பில் ஆர்வம் இல்லாமல் சோர்ந்து சோர்ந்து படுத்துக்கொள்கிறான், சாப்பிட மாட்டேங்கிறான், எரிச்சலாக பேசுகிறான். நமக்கு ஒரே கவலையாக இருக்கும். இந்த மாற்றம் எதனால் வந்தது, என்ன காரணம் என்று புரியாது.  நாமும் பல வகையில் அவனை சரிப்படுத்த முயற்சி செய்து கொண்டிருப்போம்.  பின்னால் ஒரு நாள், எதற்கோ ரத்த பரிசோதனை செய்து பார்க்கும் போது ஹீமோகுளோபின் ரத்தத்தில் சிவப்பணுக்கள் மிகவும் குறைந்து போனதால், ரத்தசோகை ஏற்பட்டிருக்கிறது. அதன் பக்க விளைவாக தான் இந்த மன அழுத்தம் என்று தெரிய வரும்.  அல்லது, ஏதோ  ஒரு தகாத நட்பு ஏற்பட்டிருக்கிறது என்று தெரிய வரும்.  இம்மாதிரியான துன்பங்களுக்கு காரணம் உடனடியாக தெரியாது.  ஆனால், தேடிப்பார்த்தால் காலம் வரும் போது தெரிந்து விடும்.  இவை அறியா துயரங்கள்.  

மூன்றாவது, அறிய முடியாத துயரங்கள்.  நமக்கு எந்த குறையும் இருக்காது. வாழ்க்கை வசதி, உடல் ஆரோக்கியம், ஊரில் நல்ல பேர், வண்டி வாகனம் , நல்ல மனைவி, மக்கள்  எல்லாமே இருக்கும்.  ஆனாலும், என்னவோ குறையாக இருப்பது போல் தோன்றும்.  ஏதோ இனம் புரியாத வருத்தம் மனதில் இருந்து கொண்டே இருக்கும்.  என்ன காரணம் என்று நம்மால் கண்டு பிடிக்கவே முடியாது.  இப்படிப்பட்ட துன்பங்களை ஆன்மீக துன்பம் என்று சொல்வார்கள்.  

பதினாறு வயதில் இராமனுக்கு அப்படிப்பட்ட துயரம் வந்தது.  அன்பான தாய், தந்தை, அழகன்,  மக்களின் பிரியத்துக்குரிய இளவரசன், உயர் கல்வி கற்றவன். இவை எல்லாமே இருந்தும் இராமன் சில நாட்களாக ஏதோ பறிகொடுத்தவன் போல எதிலும் ஆர்வமில்லாமல், சாப்பிடாமல், தூங்காமல் வாழ்வில் பற்றிழந்து காணப்பட்டான்.  அவனுடைய இந்த மன அழுத்தத்திற்கு  காரணம் என்னவென்று தந்தை தசரதரால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.  ஆனால், குரு விஸ்வாமித்திரருக்கு புரிந்து விட்டது.  இந்த வைராக்கியத்துக்கு காரணம் சில நாட்களுக்கு முன் தான் இராமன் புனிதப்பயணம் மேற்கொண்டு திரும்பியிருந்தார்.  மனித வாழ்வின் அவலங்களை நேருக்கு நேர் பார்த்தது மனதில் நீங்காத துன்பத்தை ஏற்படுத்தி விட்டது. 


எல்லோரும் தான் நோய் கொடுமையை, மரணத்தை அன்றாடம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.  ஆனால், புத்தருக்கு உண்டான துன்பம் நமக்கு ஏற்படவில்லையே!  வாழ்வின் கொடுமைகளை கண்டும் காணாமல் விட்டு விடுகிறோம். சிலருக்கு மட்டுமே  வலியும் வேதனையும் உண்டாகிறது. ஏன் என்று தெரியாது. இந்த துன்பம் வரவேற்க தக்கது.  மனவியல் துறையில் சொல்வது போல் மனநோய் கிடையாது. நாம் பாகுபடுத்திப்பார்க்க தெரிந்து கொள்ள வேண்டும்.  சிரித்துக்கொண்டு சந்தோஷமாக வாழ்வில் வெற்றி பெற்றவர்கள் யாருமில்லை.  துன்பம் வந்ததால் தான்
உபநிடதம் பக்கமே திரும்பிப் பார்த்திருக்கிறோம் இல்லையா?

இப்படி மூன்று விதமான வேதனைகளையும் தீர்ப்பதற்காக வந்தது தான் உபநிடதம்.  மூன்று விதம் என்று பொதுவாக பிரிக்கப்பட்டுள்ளது.  நாம் இதை பலவிதமான துன்பங்கள் என்று வைத்துக்கொள்ளலாம்.  அனைத்து துன்பங்களும் நீங்கி அமைதியை இந்த உபநிடதம் தர வேண்டும் என்று குருவும் சீடனும் சேர்ந்து வணங்குகிறார்கள்.  

ஓம்!

அமைதி உண்டாகட்டும்!

அமைதி உண்டாகட்டும்! 

அமைதி உண்டாகட்டும்!  




No comments:

Post a Comment

To maintain goodness, all comments have been set to require moderation by the Admin