வேதாந்தம் என்ற சொல்லை எப்போதாவது கேட்டிருப்போம். அதெல்லாம் சமஸ்கிருதம் படித்தவர்கள், வேதம் ஓதும் பிராமணர்கள் படிக்க கூடிய விஷயம், சாமியாராக போகிறவர்கள் பேசும் விஷயம், நமக்கு சம்பந்தமில்லாதது என்று நினைப்போம். பல பேர் உபநிடங்கள் என்ற பெயரைக் கூட கேட்டிருக்க மாட்டோம். அதெல்லாம் நமக்கு எதுக்குப்பா? தேவை இல்லாத விஷயம் என்று நினைத்திருப்போம். இந்த காலத்தில் இதெல்லாம் தேவையா என்று கூட தோன்றும்.
உண்மையில், இந்த காலத்துக்கு மட்டுமில்லை, எந்த காலத்துக்கும் நமக்கு இன்றிமையாத தேவை வேதாந்தம். எப்படி என்று கேட்கிறீர்களா? நீங்கள் உங்க வாழ்க்கைல மனநிறைவோடு இருக்கிறீர்களா? மரண பயமில்லாதவர்கள் யாராவது இருக்கீங்களா? கவலை படாதவர்கள் யாராவது இருக்கிறீர்களா? அப்படி யாரவது இருந்தால், நீங்கள் ஏற்கனவே சரியான இடத்தில் தான் இருக்கிறீர்கள். நீங்கள் படித்து தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனந்தத்துக்காக படிக்கலாம். ஆனால், 99% மக்கள், நீங்களும், நானும் யாரும் முழு மன நிறைவோடு இல்லை. எப்போதாவது மகிழ்ச்சியாக இருப்போம், ஆனால், எப்போதும் ஒரு கவலை பின்னால் இருந்தே இருக்கும். நமக்கு அது பழகிப்போய் விட்டது. அதனால், நான் நன்றாகத் தானே இருக்கிறேன், வாழ்க்கையென்றால் இரண்டும் கலந்து தானே இருக்கும், அதனால் என்ன? என்று நம்மை நாமே சமாதானப் படுத்தி வைத்துக்கொண்டுள்ளோம்.
உண்மையான மகிழ்ச்சி என்பது கற்பனையாக தான் இருக்கிறது.
துக்கம் தான் யதார்த்தமாக இருக்கிறது.
நம் வாழ்க்கை மாறாதா என்று எத்தனை பேர் ஏங்குகிறீர்கள் சொல்லுங்கள்? இன்னும் கொஞ்சம் சம்பாதித்து விட்டால் போதும், இன்னும் கொஞ்சம் பெரிய வீட்டுக்கு மாறி விட்டால் போதும், இந்த உறவுக்காரர்கள் பிரச்சினை மட்டும் தீர்ந்து விட்டால் போதும், நான் நன்றாக இருப்பேன் என்று நினைக்கிறோமா இல்லையா? ஆனால், ஒன்று மாற்றி ஒன்று ஏதாவது பிரச்சினைகள் இருந்து கொண்டே தான் இருக்கிறது. இது தான் நம் நோய் என்றால் வேதாந்தம் தான் மருந்து.
எத்தனையோ பாடங்கள் நாம் படிக்கிறோம், அறிவியல், கணிதம், வரலாறு, புவியியல் என்று. நம் மனசு ஏன் இப்படி சோகமாவே இருக்கு? இதுக்கு என்ன தான் வேணும்? உண்மையிலேயே நம் பிரச்சினை என்ன? நாம யாரு? இந்த மாதிரி கேள்விகளை நாம் கேட்டிருக்கிறோமா, அல்லது யாராவது பதில் கூறியிருக்கிறார்களா ?
வேதாந்தம் ஏன் படிக்க வேண்டும்?
நாம் துன்பத்திலிருந்து விடுதலை அடைவதற்காகவே!
இதைத் தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை.
வேதாந்தம் நமக்கு எந்த பரிகாரமும் சொல்லபோவதில்லை, எந்த சித்தாந்தத்தையோ, கருத்தையோ நம்ப வேண்டும் என்று வற்புறுத்தப்போவதில்லை. எந்த புது கடவுளையும் அறிமுகப்படுத்தி அந்த கடவுளை சரணடைய வேண்டும் என்று சொல்லப்போவதில்லை. . அதற்கு மாறாக, நம்மை எல்லா நம்பிக்கைகளிலிருந்தும், கருத்துகளிலிருந்தும் வெளியில் கொண்டு வருவதே அதன் நோக்கமாகும்.
நாமே தெளிவாக பார்க்க முடியும். நாம் யார்? நமக்கு என்ன தேவை? நாம் என்ன செய்ய வேண்டும்? என்று யாரையும் போய் கேட்க வேண்டியதில்ல. அப்படிப்பட்ட ஒரு தெளிவை அடைவதற்கு வழி காட்டும். உண்மையிலேயே, தெளிவு, மனநிறைவு, ஆனந்தம் இதெல்லாம் நாம் அடைய வேண்டிய விஷயங்களே இல்லை. அது நமக்குள்ளேயே இருக்கிறது, நாம் மறந்து விட்டோம், அவ்வளவு தான். நமக்கு யாராவது எடுத்து சொல்லி நினைவு படுத்த வேண்டியிருக்கிறது.
வேதத்தின் கடைசி பாகமாக வருவது வேதாந்தம்.
வேதம் என்பது மலை என்றால் வேதாந்தம் அதன் சிகரம்.
வேதம் என்பது மலர் என்றால் வேதாந்தம் அதன் தேன்.
வேதாந்தம் என்றால் வேதனையின் முடிவு!
வேதாந்தத்தில் மூன்று பாகங்கள் உள்ளன - உபநிடதங்கள், பகவத் கீதை, பிரம்ம சூத்திரம்.
உபநிடதம் என்றால் அருகாமையில் அமர்ந்திருப்பது என்று பொருள்.
முற்காலத்தில், வாழ்வை புரிந்து கொள்ள வேண்டும் என்ற தீவிர ஆர்வமுள்ள மாணவன், சிரத்தையுடன், உண்மை அறிந்த ஒரு குருவை அணுகி, அவரோடு இருந்து, பணிவிடைகள் செய்து, அவர் வாழ்க்கையை கவனித்து, அவரிடம் கேள்விகள் கேட்டு தன் சந்தேகங்களை, குழப்பங்களை தீர்த்துக்கொள்வான். இப்படி, குருவுக்கும் சீடனுக்கு நடந்த உரையாடல்கள் பிற்பாடு உபநிடதங்கள் ஆகின. நூற்றுக்கும் மேல் உபநிடதங்கள் இருந்தாலும், பதினோரு உபநிடதங்கள் முதன்மையானவை. சனாதன தர்மத்தின் முதன்மையான கிரந்தம் இதுவே.
இது பற்றி விரிவாக மற்றொரு முறை பார்ப்போம்.
இன்றைக்கு நாம் ஒரு உபநிடதம் படிக்க இருக்கிறோம். அதன் பெயர் நிராலம்ப உபநிடதம். பல உபநிடதங்கள் இருந்தாலும், இந்த உபநிடதத்தை படிக்க எடுத்ததின் காரணம் - இது மிகவும் எளிமையானது. ஆன்மீகத்துக்குள் புதிதாக வருபவர்கள் புரிந்து கொள்வதற்கு ஏற்ற வகையில், அடிப்படையான கருத்துக்கள் அனைத்தும் தெளிவாக விளக்கப்பட்டிருக்கும். ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, இது ஒரு முழுமையான அறிவை புகட்டும் ஒரு நூல் ஆகும். இதை எழுதியவர் யார் என்று அவர் பெயரை குறிப்பிடவில்லை. பொதுவாக உபநிடத ரிஷிகள் தங்கள் பெயரை குறிப்பிடுவதில்லை. அவர்கள் தங்கள் அன்பை இந்த பாடல்கள் ரூபத்தில் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள். நம் முன்னோர் தந்த பரிசு என்றும் எடுத்துக்கொள்ளலாம்.
நிராலம்ப என்றால் மற்றொன்றின் மேல் சார்ந்து இல்லாமல் இருப்பது என்று அர்த்தம். அதாவது non dependency. பெயரிலேயே நம் அனைத்து பிரச்சினைகளுக்கும் மூல காரணம் என்ன, அதற்கு தீர்வு என்ன என்பதை இரத்தின சுருக்கமாக சொல்லிவிட்டார்கள்.
நம் துன்பங்களுக்கெல்லாம் காரணமே, நாம் மற்றொன்றின் மேல் சார்ந்து இருப்பது தான். அப்படியென்றால் , தீர்வு என்னவாக இருக்க முடியும்? சார்ந்து இல்லாமல் இருப்பது. அவ்வளவு தான். மிகவும் எளிமையாக இருக்கிறது, இல்லையா?
இந்த உபநிடதத்தில் ஒவ்வொரு பாடலும் நம்முடைய பந்தங்களை சுட்டிக்காட்டி, நாம் எப்படி அதில் சிக்கிக்கொண்டுள்ளோம் என்பதை தெளிவாகவும் எளிமையாகவும் புரிய வைக்கும். புரிந்து கொண்டால், மெல்ல மெல்ல நம் அறியாமையும், ஆணவமும் கரைந்து போவதை காண முடியும். மனம் இயல்பு நிலை அடைந்து விடும்.
வாருங்கள்! நம் உள்ளத்திலும், இல்லத்திலும் அறிவொளி ஏற்றுவோம்!

No comments:
Post a Comment
To maintain goodness, all comments have been set to require moderation by the Admin