Pages

Friday, March 1, 2024

"வெள்ளை நெருப்பு" புத்தகத்திலிருந்து 4-14


 4. உலகம் முழுதும் பயணம் செய்பவன் உலகலாவியவன் இல்லை.

யாருடைய முடிவற்ற தன்மையில் உலகங்கள் யாவும் அறியப்படுகிறதோ 

அவனே உலகலாவியவன். 


5. நாம் வாழ்வைப் படித்து அறிவை சேகரிக்கிறோம். 

ஆனால், மெய்யறிவு இருமைக்கப்பாற்பட்ட ஆத்மாவை 

அறிவதால் தானாகவே உதயமாகிறது.

இந்த அறிவு வெளியே படிப்பதால் வருவதில்லை.

இது வல்லமை பொருந்திய இருத்தலுடன் இணக்கமாக இருப்பதினால் வருகிறது. 


6. நம் புலன்கள் காட்டும் சான்றுகளை உண்மையென்று நாம்  நம்புகிறோம்.

ஆனால், உணர்வின்  சான்றுகளை அறிந்ததாகவே தெரியவில்லை.

நீங்கள் உங்களை வெறும் உடல், மனம், பழக்கவழக்கங்கள் என்று எடுத்துக்கொண்டாலும்  

இதையும் தாண்டி அறிந்து கொள்ள விருப்பம் இருந்தால் 

உங்கள் மனதையும் இதயத்தையும்

அருள் பெறுவதற்கான சாத்தியத்துக்காக 

முழுவதுமாக திறந்து வையுங்கள்.

அப்போது, அது, அற்புதமான இருத்தலாவதற்கான  

ஆரம்பப் படிகள் என்னவென்று உணர்த்தும். 


7. ரூமி சொல்கிறார், "என்னை எது இங்கே கொண்டு வந்ததோ, 

அதுவே  வீட்டுக்கு அழைத்து செல்ல வேண்டும்.", என்று.

இப்போது உங்களைக்கேட்கிறேன், "வீடு எது?"

இங்கிருந்து வீட்டுக்கு எவ்வளவு தூரம்?

நீங்கள் வீட்டிலிருந்து எத்தனை கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறீர்கள்?

பொறுமையுடன், ஆர்வத்துடன், விடாமுயற்சியுடன்

இவ்வாறு ஆய்ந்து பார்ப்பவன்  

தன் சொந்த இருப்பிலிருந்து இடைவெளியற்றதும் , விலக்க முடியாததுமான 

அன்பு, அறிவு, மகிழ்ச்சி, அமைதி, அருள் ஆகியவைகளான  

தன்னுடைய உண்மையான வீட்டை அடைகிறான்.  


8. வாழ்க்கை சலிப்பாக இருப்பதாக உணர்பவர்கள் 

எப்போதும் தங்கள் மனதுக்கு  பொழுதுபோக்குகளை  விரும்புவார்கள்.

கடவுளின் காதலர்கள் எப்போதும் மனநிறைவோடும், மனநிம்மதியோடும் இருப்பதால் 

அவர்கள் மனத்திடமிருந்து  உணவு பெறுவதில்லை. 

ஆனால், இதயத்திடமிருந்து  ஊட்டம் பெறுகிறார்கள். 


9. நீங்கள் உங்கள் இதயத்துக்குள் வீற்றிருந்தால்  

அனைத்தும்  சரியாக வரும். 

அடையாளமில்லாமல் போய் விட்டால் 

யாவரும்  புத்தரே! 


10. ஆள் என்ற முகமூடிக்குப் பின்னால் இருப்பது முழுநிறைவான ஆத்மா.

உள்ளே திரும்பிப் பாருங்கள் என்று உங்களை ஊக்குவிக்க மட்டுமே என்னால் முடியும். 

அந்த வடிவமற்றவனின் அணைப்புக்குள் விழுந்து விடுங்கள்.

தாமதிக்க வேண்டாம்.


11. பெரும்பாலான ஆன்ம சாதகர்கள் 

விழிப்புணர்வோடு இருப்பதின் சக்தியை 

குறைவாகவே  மதிப்பிடுகிறார்கள் என்பது ஆச்சரியம் தான். 

இந்த பிரபஞ்சத்திலேயே, மிகவும் தூய்மையான, மிகவும் சக்தி வாய்ந்த திறன் இது தான். 

இருந்தாலும், ஆன்மீகத்தில் இருப்பவர்களில் கூட மிகவும் குறைவானவர்களே 

இது தங்கள்  அடிப்படையான  இயல்பு  என்று தெரிந்திருக்கிறார்கள். 


 ஆழ்ந்த அமைதி, மகிழ்ச்சி, அறிவு, அன்பு மற்றும் அதை விட  

உங்களுடைய  முடிவற்ற இருத்தலே ஆனந்தமான விழிப்புணர்வு தான் என்ற 

உங்களது  உன்னதமான கண்டுபிடிப்பை 

நீங்கள் அறிந்து அனுபவிப்பதற்காகவே அருளானது 

சத்சங்கம் என்ற ரூபம் கொண்டு வந்திருக்கிறது.



12. நீங்கள் இருக்கிறீர்கள் என்பதையும், வாழ்வின் ஓட்டத்தையும்

இயல்பாக உணர்ந்து கொண்டிருக்கிறீர்கள்.

தெரிந்தோ தெரியாமலோ, அதை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம். 

நாம் நம்மை ஒரு மனிதன் என்று எடுத்துக்கொண்டிருக்கிற  

குறுகிய மனப்பான்மையைத் தாண்டி 

நாம் ஓவ்வொருவரும் யார் என்ற உண்மையை 

நம்மால் அறிந்து கொள்ள முடியும் 

இதுவே  வாழ்வின் தெய்வீக  ரகசியம்  ஆகும்.

தன்னை முழுமையான விழிப்புணர்வாக அறிந்தவர்கள்  

தன் வாழ்வே அதற்கு சாட்சியாக ஆக்கியவர்கள்   வெகு சிலரே.

உங்களை அழியாத, பிறக்காத விழிப்புணர்வாக கண்டுணர்வது 

முற்றிலும்  சாத்தியமே  என்பதை  அறிந்து கொள்ளுங்கள்.  


13. வாழ்வில் சில பொருட்களை நீங்கள் கேட்டு  அடைந்திருக்கிறீர்கள். 

நீங்கள் சத்தியத்தை கேட்டு எப்படி மறுக்கப்படுவீர்கள்? 


14. விடுதலை தான் உங்கள் இதயம் விரும்புவது என்றால் 

தயக்கமில்லாமல், விட்டுக்கொடுக்காமல்  உண்மைக்கு ஆம் என்று சொல்லுங்கள். 

இதயத்தின் நாயகனிடம் சொல்லுங்கள் - என்னை எடுத்துக்கொண்டு  உன்னை கொடு.

என் அகம்பாவத்தை நீக்கி என் மனதை உன்னோடு இணைத்து விடு. 

அடையாளம் மீதமிருந்தால், உண்மையைக்கொண்டு அந்த அடையாளத்தை நீக்கி விடு. 

ஒன்றே ஒன்று மட்டும் இங்கே இருக்கட்டும். 

அகங்காரமோ, வன்முறையோ இருந்தால் அழித்து விடு, 

என்னை உன்னுள் உருக விடு என் இதயம் கவர்ந்த  நாயகனே!


இதயத்திலிருந்து வரும் இந்த "ஆம்" மிகவும் சக்தி வாய்ந்தது. 

இதயத்திலிருந்து நேரடியாக இதயத்திற்கு சென்று மண்ணாலான மனதிற்கு வெடி வைக்கக் கூடியது.

எதற்கும் விட்டுக்கொடுக்காத இந்த "ஆம்" 

உங்களை உங்கள் கள்ளமற்ற, அழிவில்லாதாதும் , அளவற்றதுமான தன்மையில் 

கொண்டு சேர்க்கும் தெய்வீக அருளாகும்.  





No comments:

Post a Comment

To maintain goodness, all comments have been set to require moderation by the Admin